எழுதியவர் – சசிகலா திருமால்

கவிஞனின் கவிக்குள்
மென்பூக்களாய் வாசம் வீசினாலும்
நிஜமதில் சுடும் பூக்களெனவே
கருகிக் கொண்டிருக்கிறோம்..
பேருந்து நெரிசலில்
கழுத்தருகே கழுத்தறுக்கும்
பெருமூச்சுகளுக்கும்
காதருகே கேட்டிடும் கொச்சைச் சொற்களுக்கும் இடையில்
சிக்கி தவிக்கிறதெங்கள் பெண்மை..
பணத்திற்காய் பாய் விரிக்கும்
ஓராயிரம் மாதவிகள்
விற்பனைக்கு இருக்கும் போது
பச்சிளம் பிள்ளைகளை
குறிவைக்கும் கயவர்களுக்கு
என்னவென்று பெயரிட்டுரைக்க..
வக்கிரபுத்தியின் உக்கிம் தாளாமல்
தொலைவில் மயான வெளியில்
ஒற்றைப் பிணமென எரிந்துக்கொண்டிருக்கிறது
எங்களது மனம்
ஆற்றாமை தாளாமல்…
காலம் காலமாய்
எங்களுக்குள் விதைக்கப்பட்ட
அடிமை உணர்வை அறுத்தெறிந்தே
விடுதலையின் வாசல் தேடியே
விரதமிருக்கிறோம் நாங்கள்…
சசிகலா திருமால்