எழுதியவர் -கா.ரஹ்மத்துல்லாஹ்…

போதும்!
எனது புலன்களை
எத்தனை நேரம்தான்
மூடிக்கொண்டிருப்பேன்?
நீ
சற்று நேரம் ஓய்வெடு.
என்னையும்
ஓய்வெடுக்க விடு…
இடைவிடாது
நொடிகளை மட்டுமா
நீயெடுத்துக் கொள்கிறாய்?
எனக்கான
வாழ்வையும்தான்…
என்னைச்
சுற்றிக்கொண்டிருக்கும்
அத்தனையும் எனக்கு
எதிரானதா?ஆதரவானதா?
ஆதரவாய்
எண்ணி நெருங்கினால்
அழகானப் பூக்களின்
காம்புகளுக்குப் பதிலாக
முட்கள் முளைத்திருக்கிறது…
எதிரானது
என்று விலகினால் பூக்களைவிடக்
கவர்ச்சியுடன் கனிகள் நிறைய
ஈர்க்கிறது…
பசியோடிருக்கும்
நானென்ன செய்ய?
அருகிருந்து அநீதியை
ஆதரிக்கவும் முடியாது…
தூரநின்று
கனிகளைப் பார்வையால்
புசித்துப் பசியாறவும்
இயலாது…
ஏ…பரபரப்பே…
நீ என்னைத் தின்று
செரித்துக் கொண்டிருக்கிறாய்.
உன்னை
ஆக்கியோரெல்லாம்
கொழுத்துக் கொண்டிருக்கின்றனர்…
சுதந்திரமாய்
ஒரு நிமட மூச்சு…
இதுவெல்லாம்
இனியெனக்கு வாழ்நாள்
கனவுதானா?
உண்ணுவது முதல்
உடுத்துவது வரை
கூச்சமின்றி உன்வசம்
ஒப்படைக்க வைத்தவன்
எவனென்று தெரியவில்லை…
இன்றைய
உறக்கமில்லா இரவை
உருவாக்கியவனும்
அவனாயிருக்கத்தான்
வாய்ப்பதிகம்…
எனது
இயலாமையை யார்மீதோ
பழிசுமத்துவதாய்
எண்ணுகின்றனர் பலரும்…
அப்படியேதுமில்லை
என் அனுமதியின்றி என்னைச்
செயலிழக்கச் செய்தவனைக்
குற்றம் சுமத்துகிறேன்.
மதுவருந்தி மகிழ்ந்திருக்க
மக்கள் பசியாற்றும் மண்ணை
அழித்த கதை தெரியாதா?
யாருக்கும்?
ஒற்றைக் கதையோடு
முடித்துக் கொள்ள இது
ஒரு “வலி”க் கவிதையல்ல.
இதுபோல் ஆயிரமுண்டு…
அவையெல்லாம்
ஒன்றிணைந்து பிறப்பித்த
பரபரப்பைச் சுட்டிக்காட்டுகிறேன்
இன்று…
யாரோ வரைந்த
ஓவியக்கதையில் நாமறியாமல்
பாத்திரங்களாகி இருக்கிறோம்…
அட…!
அழைப்பின்றி நடிப்பதால்
தினக்கூலியும் இல்லை.
நமக்கான வரும்படியும் தொல்லை…
ஆனால் பாருங்களேன்.!
நாமீட்டிய வருவாயெல்லாம்
நிறைந்தவரிடமே நிறைகிறது
செழித்தவரிடமே கொழிக்கிறது…
இன்னுமா புரியவில்லை?
நம்மை எப்போதும்
பரபரப்பாய் வைத்திருப்பதன்
ரகசியம்…
இதோ…
அடுத்தொன்று தொற்றிக்கொண்டது.
மற்றதெல்லாம் விடுங்கள்.
இன்னும் எனது கீழாடை
சரியாய்த்தான் இருக்கிறது…
இனி வரும்
காலங்களில் இதுவும்
இல்லாமல் போராடவேண்டி
வருமோ என்னவோ!
போகட்டும்…
அடிமைப்படுவதை விட
போராடி மாண்டுவிடலாம்
மரணத்திற்காவது
கண்ணியம் கிட்டட்டும்…