எழுதியவர்- தமிழ்ச்செல்வன்

பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபால் போன் செய்தார்.
“கொஞ்சம் ஜன்னலை திறங்க பேசணும்” என்றார் .திறந்தேன்.
“நியூஸ் பாத்தீங்களா, லாக் டவுன் 3 மணி நேரம் விலக்கி இருக்காங்க. கொஞ்சம் பொருள் வாங்கப் போறேன்.
நீங்க வராத இருந்தா கூட வாங்க “
” அப்படியா நியூஸ் பாத்தாலே பயமா இருக்கு. பையன் வேற கார்ட்டூன் சேனல் ல பாத்துட்டு மாத்த உடமாட்டேங்கறான் . அவனுக்கும் வேற பொழுது போக்கு என்ன இருக்கு “
” இப்போதான் பிளாஷ் நியூஸ் போட்டாங்க . 2 கிலோமீட்டர் தூரத்துல கடைக்கு போகலாமாம். ஆனா நடந்து தான் போகணுமாம். மாஸ்க் போடலேன்னா 10 000 ருபாய் பைனாம் “
மனைவியிடம் கேட்டேன் ” ஒரு மாசத்துக்கு தேவையான அரிசி , கேஸ் . உப்பு எல்லாம் இருக்கு. வெளிய போகாதீங்க .ரிஸ்க் எடுக்க வேண்டாம் ” என்றாள்.
” கோபால் , நான் வரல.நீங்க போயிட்டு வாங்க “
” கதிர் சார். உங்க உதவி வேணும், நீங்க கூட வந்தா நல்ல இருக்கும் “
” சரி “என்று உடை மாற்றினேன். மாஸ்க் ,க்ளவுஸ் அணிந்தேன்.
” அப்பா ,நானும் வரேன் பா, என் முகத்தை பார்த்து கெஞ்சினான் என் 7 வயது மகன் ஆதேஷ் .
” வேண்டாம் டா . சின்ன பசங்க வந்தா , புது கொரோனா பேய் கடிச்சிடும் டா “
” நானும் மாஸ்க் போட்டு வரேன் பா , மாஸ்க் போட்டா கொரானா கடிக்காதுனு சொன்னீங்க இல்ல. ப்ளீஸ் பா “
“பழைய கொரானா தான் மாஸ்க் போட்டா கடிக்காது. புது கொரோனா பேய் மாஸ்க் போட்ட சின்ன பசங்கள கூட கடிக்குதாம். நீ வீட்டலியே இருடா , உனக்கு சாக்லேட் வாங்கிட்டு வரேன் “
சாக்லேட் என்ற சொல்லைக்கூட அவன் மறந்திருப்பான். சில மாதங்காளாக பலர் வீட்டில் கஞ்சி மட்டும் தான் உணவு .வேறு பொருட்கள் வாங்க வாய்ப்பில்லை .
நானும் கோபாலும் பக்கத்து தெருவிற்கு பேசிக்கொண்டே சென்றோம்.
“என் ஒய்ஃப் கலாவுக்கு பாசிட்டிவ். வீட்ல தான் இருக்கா “
“ஹாஸ்பிடல் ல சேர்க்கலியா “
” எங்கியுமே இடம் இல்ல கதிர் சார் “
” டாக்டர் வந்து செக் பண்ணுவங்களா “
“ம்ம்ஹும் , ஒரு app இன்ஸ்டால் பண்ண சொன்னாங்க , bp பாக்கற மெஷின் , பல்ஸ் பாக்கற மெஷின் எல்லாம் நாமளே வாங்கிக்கணும் . app ல அலாரம் அடிக்கும்போது அதுல சொல்ற மருந்து வாங்கிக்கொடுக்கணும் , தேவைப்பட்டா ஆக்சிஜென் கொடுக்கணும். இப்போ ஆக்சிஜென் சிலிண்டர் வாங்க தான் போறேன். முன்னாடியே வாங்கி வச்சுட்டா நல்லது சார் “
“2 பொருள் வாங்கனுங்க . நான் ஒரு வரிசைல நிக்கறேன் , நீங்க அந்த வரிசையில நில்லுங்க ” என்றார் .
நின்றோம் . பெரிய வரிசைகள். 4 வருடங்களுக்கு முன் ATM வாசலில் நின்றோமே அதை விட நீளமான வரிசைகள்.
எனக்கு முன் ஒரு பெரியவர் நின்றிருந்தார். என் பின்னால் ஒரு பெண்மணி. கண்சிமிட்டும் நேரத்தில் என் பின்னால் வரிசை வேகமாக வளர்ந்தது.
” இந்த லைன் ஆக்சிஜென் சிலிண்டர் வாங்கறதுக்கா ”
“நீங்க தப்பான லைன்ல நிக்கறீங்க. அது பக்கத்து லைன் “
“அதுல என் ஃபிரென்ட் நிக்கறார், அவர் தான் என்னை இதுல நிக்க சொன்னாரு “
“என்ன பொருள் கிடைக்கும்னு தெரியாமலே நிக்கறீங்களா “
” அவர் என் கைல 30 ஆயிரம் கொடுத்து , இங்க நிக்க சொன்னாரு. கிடைக்கறது டவுட் எவ்ளோ கிடைச்சாலும் வாங்குங்கனு சொன்னாரு . “
” இந்த லைன் எந்த பொருள் வாங்கறதுக்கு “
“மரக்கட்டை “
“எதுக்கு மரக்கட்டை “
” விறகு சார் “
” சமையல் பண்றதுக்கா “
பெரியவர் மௌனமாக என் முகத்தை உற்றுப்பார்த்தார். அந்த பெண்மணியும் பக்கத்தில் இருந்தவர்களும் மௌனமாக என்னை ஒரு குற்றவாளி போல பார்த்தார்கள்.
” விறகு அடுப்பு எரிக்கறதுக்கு இல்லீங்க. சுடுகாட்டுக்கு . என்னோட மருமகன் இறந்து 2 நாள் ஆச்சு , விறகு நாமளே வாங்கி கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க . நானும் பல இடத்துல அலைஞ்சு பாத்துட்டேன் . கடவுள் கண்ணை தொறந்தா ,இங்க எப்படியும் விறகு கிடைச்சுடும் “
“புதைச்சு இருக்கலாமே ” என்றேன் தயக்கத்துடன் .
” அதுக்கும் வழி இல்ல சார். நாங்க 3 இடத்துல தோண்டி பார்த்தோம் . 3 இடத்துலயும் ஏற்கனவே பாடி இருக்கு. சில பேர் அதை வெளியே எடுத்து போட்டு அந்த இடத்துல இவங்களோட பாடியை புதைக்கறங்களாம். அது தப்புங்க நாளைக்கு என் மருமகன் பாடிக்கும் அதே நிலைமை தானே வரும் , அதுக்காக தான் இப்படி விறகுகட்டைக்கு அலைஞ்சுட்டு இருக்கேன் “
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நீண்ட நேரம் வரிசையில் நின்றோம் , வேறு கேள்விக் கேட்க எனக்கு தைரியம் இல்லை .சூரியன் அஸ்தமித்து கொண்டிருந்தான் .
போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
” டைம் முடிஞ்சது கிளம்புங்க . பொருள் எல்லாம் காலி . இனிமேல் வந்தா சொல்லுவோம் ,கிளம்புங்க கிளம்புங்க “
பெரியவர் அழத்தொடங்கினர். ” ஐயா கொஞ்சம் கருணை காட்டுங்க . எவ்வளவு பணம் வேணாலும் தரேன் ,கொஞ்சம் விறகு கொடுங்க சார் “, போலீஸ் காரரிடம் கெஞ்சினார்
கோபால் என் அருகில் வந்தார் , அவர் கையில் சின்ன ஆக்சிஜென் சிலிண்டர். 5 லிட்டர் இருக்கக்கூடும் .
” பெருசு கிடைக்கல , இது தான் இருக்குனு சொல்லிட்டாங்க “
அங்கே நின்றிருந்த இளைஞன் , கோபாலிடம் ஆக்சிஜென் சிலண்டரை பிடுங்கிக்கொண்டு ஓடத்துவங்கினான் .
” டேய் நில்லுடா ” என்று கத்திகொண்டே கோபால் அவன் பின்னால் ஓடினார் . பிடிக்க முடியவில்லை.
இளைஞன் ஓடிவிட்டான் .
கோபால் சாலையிலே முட்டி போட்டு அழத்தொடங்கினார்.
” அய்யோ ,கலா . நான் என்ன பண்ணுவேன் . உனக்கு ஆக்சிஜனும் கிடைக்கல ,விறகும் கிடைக்கலே ” என்று அழுதுகொண்டிருந்தார் .
“அப்பா டைம் ஆச்சு . எழுந்துக்கோங்க ” என் மகன் ஆதேஷ் எழுப்பிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக இந்த கனவு கலைந்தந்து .
மனைவியிடம் கேட்டேன் ” அதிகாலை கனவு பலிக்குமா “
” ஆமாம் .அப்படித்தான் சொல்லுவாங்க. என்ன கனவு கண்டீங்க “
“ஒரு கெட்ட கனவு . சொல்லவா “
“வேண்டாம் சொல்லாதீங்க . முருகனுக்கு 11 ருபாய் போடறேனு வேண்டிக்கோங்க. அவன் எப்பவும் நம்மள கைவிடமாட்டான். எல்லாம் நல்லதே நடக்கும் “
நான் காபி குடித்தபடி வீட்டிற்கு வெளியில் வந்தேன், பக்கத்து வீட்டில் கோபால் அவர் மனைவி கலா இருவரும் வெளியில் கிளம்பிக்கொண்டு இருந்தார்கள்.
” கோபால் .நல்லா இருக்கீங்களா ” என்றேன் .
” சூப்பரா இருக்கேன் ,கதிர் சார் “
“வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா “
” எல்லாரும் நல்லா இருக்காங்க..பேங்க் கிளம்பறோம் . போயிட்டுவரோம் சார் “
நான் வீட்டிற்குள் வந்தேன் .
“நல்லவேளை எல்லாம் கனவு. இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு ” என்று சொல்லியபடி டீவி போட்டேன் .
செய்திகள் ஓடிக்கொண்டு இருத்தது . வடஇந்தியாவின் சில காட்சிகளை காட்டிக்கொண்டு இருந்தார்கள்.
அதில் ஒரு நபர் சாலை நடுவில் முட்டிபோட்டு அமர்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.கோபால் சாயலில் இருந்தார். சின்ன வேறுபாடு டீவியில் வந்தவர் ஹிந்தியில் பேசிக்கொண்டே அழுதார் .
கனவில் வந்த கோபால் தமிழில் அழுதார். சின்ன வித்தியாசம் தான் .
[முற்றும்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal