விடிகாலைப்பொழுது மெல்ல உதயமானது. சூரியன் தன் பொற்கிரணங்களை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தான். வாசல் ஓரமாய் கிடந்த கதிரையில் ஓய்ந்து அமர்ந்திருந்தேன். ஆயிரம் போராட்டம் மனதிற்குள். நேற்றய நினைவுகள் உள்ளத்தை அறுத்தெடுத்தன, அந்த மனப்போராட்டத்தோடு அப்படியே உறங்கிவிட்டிருந்தேன், நடுஇரவில் அம்மா வந்து எழும்பி “உள்ள வந்து படு” என்று சொன்னது நினைவில் இருந்தது, ஆனால் நான் அப்படியே உறங்கிவிட்டிருந்தேன், உள்ளத்தை அரித்த எண்ணங்களை தூக்கிப்போட முடியாது தவித்துக் கொண்டிருந்தேன். அம்மாவிடம் கேட்டுவிட்டதென்னவோ சரிதான் என உள்ளம் வாதாடினாலும், பாதி மனம் ஏதோ தவறு செய்துவிட்டதாய் தவித்துக் கொண்டிருந்தது.
அவசரமாய் வெளியே வந்த அம்மா, “எல்லாம் எடுத்து வைச்சிட்டன், சாப்பிடு” என்றபடி நடந்துவிட்டார். அப்போதுதான் பார்த்தேன், அம்மாவின் கையில் பயணப்பை ஒன்றை. என்ன ஏதெனக் கேட்பதற்குள் விரைந்து நடந்துவிட்;டார். மனக் குழப்பத்துடன் அப்படியே அமர்ந்துவிட்டேன்.
“ஆது —-ஆது” உலுக்கிய ஒலியில் விழித்துக்கொண்டேன், அருகில் கானகி. இரவின் வழிப்பில் மீண்டும் அப்படியே உறங்கிவிட்டிருந்தேன். கானகி என்னோடு கூடப்படிப்பவள், என் காதலியும் கூட. பல்கலைக்கழக படிப்பு முடிந்ததும் திருமணம் என இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டியிருந்தனர். எல்லாம் சிறப்பாக இருந்த இவ்வேளையில் தான் அப்பாவின் அந்த இழப்பு, விபத்து ஒன்று அவரைப் பலி கொண்டிருந்தது.
“ஆதவன்” ஓங்கி கூப்பிட்ட கானகியின் சத்தத்தில் அவசரமாய் நினைவுகளில் இருந்து விடுபட்டு “என்ன?” என்றேன்.
“என்ன யோசிக்கிறாய்?” என்றாள்,
“ஒன்றுமில்லை” அவசரமாய் சொன்னபோதும் உள்ளம் இடிக்க “அது—–“ என இழுத்தபடி நடந்த அத்தனையையும் அவளிடம் கொட்டிவிட்டேன்,
என்னை நிமிர்ந்து பார்த்த அவளின் பார்வையில் நான் பொசுங்காமல் போனது ஆச்சரியமே. என்னைப் பார்க்கவே பிடிக்காதவள் போல பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள். என்னால் அவளின் உதாசீனத்தை தாங்க முடியவில்லை. எப்போதும் நேர்மையாய் இருக்கும் கானகியின் அந்தப் பார்வையே நான் மாபெரும் தவறுசெய்துவிட்டேன் என்பதை எனக்கு உணர்த்தியது.
“அம்மா எங்கே இப்போ?” என்றாள்,
“தெரியல—காலையிலயே போய்விட்டா—–என்றேன்.
“வா ——-அம்மாவிடம் போய் மன்னிப்பு கேட்கலாம்,” என்றாள்.
“ ஏன்? மனம் முரண்டியது,
“அம்மா இன்னும் என்னிடம் விளக்கம் சொல்லவில்லை” என்றேன்.
“என்ன விளக்கம்?” என்றாள் ஒரு வித தோரணையாய்.
“அப்பா இறந்த பிறகு தினமும் காலையில் போய் இருட்டினதுக்குப் பிறகுதான் வீட்டுக்கு வர்றாவாம், எங்க போறீங்கன்னு கேட்டேன், மழுப்பலா பதில் சொன்னா,
” நேற்றைக்கு முதல் நாள் ராத்திரி வீட்டுக்கு வரவே இல்லையாம், எங்க போனீங்கன்னு கேட்டேன், பதில் சொல்லல, உனக்கெதுக்கு அதெல்லாம,; படிக்கிற வேலையைப்பாரு என்றா, சின்ன வயசில இருந்து என்னை விடுதியில விட்டுத்தான் படிக்கவைச்சா, அப்பா இறந்த பிறகு, அம்மாகூட இருக்கலாம்னு நினைச்சா, என்னை வலுக்கட்டாயமா அங்கயே அறை எடுத்து தங்கச்சொல்லிட்டா, நான் வேணாம்னு எவ்வளவு சொல்லியும் கேட்கல, நான் டொக்ரர் ஆகணும்கிறதில தீவிரமா இருக்கிறதாலதான்; இப்படி பண்றான்னு நினைச்சேன், ஆனா எதிர்வீட்டு அங்கிள் சொல்றதைப்பாத்தா —–“-
“ஆதவன் —- ” கானகி ரௌத்ரமாய் கத்தினாள், அதிர்ந்து நிமிர்ந்தேன், “வார்த்தையை கவனமா பேசு, அவ உன்னோட அம்மா” என்றாள்.
“கானகி, மத்தவங்க சொல்லும் போது எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா?” என்றேன்.
“அந்த விளக்கம் எனக்குத் தெரியும், அம்மா சொன்னா” என்றவள், “எதிர்வீட்டு அங்கிள் உன் அப்பாவோட நண்பர் என்றது மட்டும் தான் உனக்குத் தெரியும், அவரோட மோசமான இன்னொரு பக்கம் தெரியாதில்லை, உன் அப்பா இறந்ததுக்கு பிறகு மட்டும் அம்மாவுக்கு கஸ்ரம் இல்ல, இருக்கும் போதும் கஸ்ரம் தான், அவருக்கு மது, மாது ரெண்டிலுமே அதிகமா ஈடுபாடு, ஒத்தைப் பிள்ளையான நீ அதைத் தெரிஞ்சு கொள்ளவோ அதனால் உன் அப்பாவை வெறுக்கவோ கூடாதுன்னு நினைச்சுத்தான் அம்மா உன்னை விடுதியில விட்டு படிக்கவைச்சா. அப்பவே உன் அப்பாவின் நடத்தையை தெரிஞ்சுகொண்ட உன் அப்பாவின் நண்பர் உன் அம்மாவிடம் எப்போதும் ஒருவித காமப் பார்வையைத்தான் வீசியிருக்கிறார். எப்பவுமே தன்னைக் காத்துக்கொள்ள உன் அம்மா பெரும்பாடு பட்டிருக்கிறாங்க. பாதுகாப்பா நம்பிக்கையா உணரவைக்க வேண்டிய கணவனே இன்னனொருத்தன் கேவலமா பார்க்கிறதுக்கு வழிவகுத்த கொடுமையை உன் அம்மா யாரிடம் சொல்வாங்க?
சமீபத்தில உன் அப்பா இறந்தது அந்த ஆளுக்கு வசதியாப்போச்சு. அடிக்கடி அவங்களை தொந்தரவு பண்ணத் தொடங்கிவிட்டார். இந்த வயசில இதை வெளிய சொல்லமுடியுமா? அதவிட உன் அம்மா தினமும் காலையில் போய் மாலையில் வந்தது வீட்டு வேலை செய்யிறதுக்காக . அன்றய தினம் இரவு வராததுக்கு காரணம் அவங்க வீட்டில புதுவீட்டு பூஜை நடந்திட்டிருந்தது. முடியிறதுக்கு அதிகாலை ஆகிட்டுது, எங்கே இதையெல்லாம் தெரிஞ்சு நீ கவலைப்படுவியோ என்றதோட, அந்தாளுடைய சேட்டைப்பிடிச்சு உலுக்கிடுவியோ என்றதனாலயும் உன் படிப்பு எந்த விதத்திலயும் குழம்பிவிடக்கூடாது என்றதுக்காகவும்தான் உன் அம்மா அப்படி நடந்துகொண்டா. நீ நினைத்தது போல அம்மா நடந்திருந்தால் கூட தப்பில்லையே, ஒரு கணவனிடம் இருந்து கிடைக்கவேண்டிய அன்பு, அக்கறை, பாதுகாப்பு, நம்பிக்கை எதையுமே உன் அப்பா உன் அம்மாவுக்கு கொடுக்கவில்லையே'” என்றவள் ” உன் அம்மா அப்படியானவர் அல்ல, ஆனால் நீ இப்படி நடந்து கொண்டிருக்கிறாய், முதலில் அம்மாவிடம் மன்னிப்பு கேள். நீ நடந்துகொண்டதை நினைத்தால் எனக்கே கோபம் வருகிறது, உன்னை நம்பி எப்படிக் கல்யாணம் செய்வது?” என்றாள்.

கானகியின் வார்த்தைகள் சாட்டையால் தாக்கியது போல இருந்தன. உடனே அம்மாவைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. அம்மா வரும்வரை காத்திருக்கலாம் என எண்ணியபடி தொப்பென கதிரையில் விழுந்தேன். மாலை மயங்கும் வரை என் கூட இருந்துவிட்டு கானகியும் வீட்டிற்குச்சென்றுவிட தனிமையும் வெறுமையும் ஒன்றாய் தாக்கியது. இத்தனை நாள் அம்மா இந்தக் கொடுமையைத்தானே அனுபவித்திருக்கிறார் என எண்ணியதும் தாங்கமுடியாத துயரம் உள்ளத்தை அழுத்தியது.
இரவு நெடுநேரமாகியும் அம்மா வரவில்லை. உடலும் உள்ளமும் உதறத்தொடங்கியது, அம்மா தப்பான முடிவை எடுத்திருப்பாரோ என நினைத்ததும் உள்ளக்கூடு சில்லிட்டுப்போனது. கானகிக்கு அலைபேசியில் விசயத்தை சொன்னதும் மௌனமாக இருந்தவள் “யோசிக்காதை, நாளைக்கு அம்மா வந்திடுவா,” என்றாள்.
“ம் ம்” என்றேன்.
“இத்தனை வருடம் தைரியமாக வாழ்ந்த அம்மா தப்பான எந்த முடிவையும் எடுத்திடமாட்டா” என்றாள்.
என் எண்ணஓட்டம் எப்படித்தான் அவளுக்குப் புரிந்ததோ, “சரி” என்றேன் தேறுதலாக.
இருபத்திநான்கு வருடங்களில் வராத அம்மா மீதான ஏக்கம் இதயத்தில் பீறிட்டது, அழுகை அழையாவிருந்தாளியாய் வந்துநின்றது. எப்போது உறங்கினேனோ அதிகாலையில் கதவு தட்டப்பட்ட சத்தத்தில் எழுந்துசென்று கதவைத்திறந்தேன்.
கானகி தான். அவசரமாய் குளித்து உடை மாற்றிப்புறப்பட்டேன். அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற வேகம் உள்ளத்தை நிறைத்துக் கிடந்தது. அம்மா வேலை செய்யும் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். கசங்கிய புடவையும் கைகளில் சவர்க்காரமுமாக நின்ற அம்மா என்னைக் கண்டதும் விழியில் நிறைந்த நீரோடு உள்ளே சென்றுவிட வீட்டுக்கார அம்மா தான் அமரச்செய்தார். “இரு வர்றன்” எனக்கூறி உள்ளே சென்ற கானகி, உள்ளே சென்று திரும்பிவந்தாள். சற்று நேரத்தில் என்னருகில் வந்த அம்மா “ ஆதவா, நீ நல்லா படிக்கணும், அதனாலதாண்டா நான் உனக்கு எதுவும் தெரியவேண்டாம்னு நினைச்சேன், ஆனா நீயே என்னை —-சொல்லமுடியாமல் குலுங்கி அழுத அம்மாவை ஆதரவாக அணைத்துக்கொண்டேன்.
“ஆதவா, சாமி அறையில உள்ள அலுமாரில பாங்க் புத்தகம் வைச்சிருக்கன், ஒரு தொகைப் பணத்தை பாங்க்ல போட்டு வைச்சிருக்கன், உன் படிப்பு செலவுக்காக, உங்கப்பா வீட்டை அடைவு வச்சிருந்தார், உனக்காக நான் கொடுக்கவைச்சிருந்த ஒரே சொத்து அது, உன் பிள்ளைகள், அவங்க பிள்ளைகள்ன்னு அந்த வீட்ல சந்தோசமா வாழணும், அதுக்காக என் நகை எல்லாம் வித்திட்டு வீட்டை மீட்டுட்டன், மீதிப் பணத்தைத்தான் உனக்காக பாங்க்ல போட்டிருக்கன், குழந்தையிடம் கதை சொல்வது போல சொல்லிக்கொண்டே சென்ற அம்மாவை இடைமறித்தேன், “ஏம்மா இதெல்லாம் சொல்றாய், எனக்கு பயமா இருக்கும்மா, அழுதேன்”
ஆறுதலாய் என்னை வருடியவள், “நீ ஏண்டா அழுறாய், என் ராஜா, என்றவள், நான் வீட்டுக்கு வரலடா,” என்றாள்.
“என்னம்மா சொல்றாய்?” பதறிப்போய் கேட்டேன், “நான் உன்னோட இருந்தா நீ என்னைப் பாக்கும் போதெல்லாம் உனக்கு மனசில குற்றஉணர்ச்சியா இருக்கும், அதனாலதான் உன்னைப்பாத்ததும் நா உள்ள போயிட்டன், வேணாம்டா” என்றாள்.
“எப்படி அம்மா உன்னால் இப்படிப் பேசமுடிகிறது, என்னை விட்டுட்டு நீ எங்கம்மா போவே?”
“இந்த வீட்டுக்கார அம்மா ஒரு முதியோர் இல்லம் நடத்திறாங்க, பக்கத்திலதாண்டா, நான் அங்கயே தங்கிக்கிறேன், பகல்ல இங்க வந்து வேலை செஞ்சு குடுத்தா அந்தக் காசையும் மாசாமாசம் உனக்கு அனுப்பிடுவன்,” என்ற அம்மாவை ஆதூரமாகப் பார்த்தேன். “நான் இப்படி ஒரு கேவலத்தை சுமத்தியும் என்மேல கோபம் வரலயா, என்னை மன்னித்துக்கொள்ளுங்க அம்மா” என்றதும் “நீ என் பிள்ளைடா,” என்றாள் பெருமிதமாய்.
‘உனக்குத்தான் என்மீது எவ்வளவு பாசம்? எண்ணிக்கொண்டே அம்மாவின் தலையை வருடினேன்.
அந்தப் பாசத்திற்காகவே ஏங்கியவள் போல எனது இரண்டு கைகளையும் கொத்தாகப் பற்றியபடி குலுங்கிக்குலுங்கி அழுதாள். என்னாலும் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை, நானும் கதறினேன்.
சற்று நேரம் அழுதபடி திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு “ஆஆஆஆஆ” என அலறிய அம்மாவை “என்னம்மா? என்னம்மா?” என்றதும் என்னிடம் ஏதும் சொல்லாமலே மயங்கிச்சரிந்தார்.
மூன்று நாட்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்த அம்மா ஒரே ஒருமுறை கண்விழித்து என்னையும் கானகியையும் பார்த்து கண்களாலேயே ஏதோ சொல்லிவிட்டு நிரந்தரமாய் கண்களை மூடிக்கொண்டார்.
“அம்மா உன்னைப் புரிந்துகொள்ளாமல் நான் பண்ணின தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? உன்னை ராணி மாதிரி வைத்து அன்பு காட்டி சந்தோசத்தை மட்டுமே தரநினைத்த எனக்கு நீ தந்த தண்டனை நியாயமேயில்லை” கதறினேன், துடித்தேன்.
“அம்மா—– நீ தந்த இந்த வெறுமை எப்போதுமே என் மனதில் வெறுமையாகவே இருக்கப்போகிறது, என் குரலால், திரண்டிருந்த மக்கள் கூட்டமே அழுதது, என் அம்மா மட்டும் அமைதியாகவே உறங்குகிறாள்.

முற்றும்.

கோபிகை

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal