மு. சு. முத்துக்கமலம்

ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்கப் பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். அந்தப் பதினாறு லட்சுமிகளை இங்கேக் காண்போம்.

 1. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை நாளில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது. இந்த ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.

 1. சௌந்தர்ய லட்சுமி

நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால்தான் அவர்கள் நம்மை வரவேற்பார்கள். இதற்கு “சௌந்தர்ய லட்சுமீகரம்’ என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதற்காக முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.

 1. சௌபாக்கிய லட்சுமி

போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

 1. கீர்த்தி லட்சுமி

எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.

 1. வீரலட்சுமி

நம்மையும், நமது மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மிடம் வீரம் இருக்க வேண்டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீரலட்சுமி. வீரலட்சுமியை வணங்கினால் இந்தப் பாக்கியத்தைப் பெறலாம்.

 1. விஜயலட்சுமி

மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தாலும், அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்தப் பாக்கியத்தைப் பெறலாம்.

 1. சந்தான லட்சுமி

மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால்தான் அவன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இருக்க வேண்டும். இதற்கு அருள் புரிபவள் சந்தான லட்சுமி. அவளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

 1. மேதா லட்சுமி

பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்கப் புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

 1. வித்யா லட்சுமி

கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது “ஸ்ரீவித்யை’ என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.

 1. துஷ்டி லட்சுமி

எல்லாப் பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந்தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.

 1. புஷ்டி லட்சுமி

வெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.

 1. ஞான லட்சுமி

வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும், அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரிந்து விடும் என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.

 1. சக்தி லட்சுமி

இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லாச் செயல்களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்திலட்சுமியை வணங்கினால் போதும்.

 1. சாந்தி லட்சுமி

எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.

 1. சாம்ராஜ்ய லட்சுமி

மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்தப் பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.

 1. ஆரோக்கிய லட்சுமி

மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal