அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை பெற்றோர் ரீன்ஏஜ் பெண்களுக்கு சொல்லிக்கொடுத்துதான் ஆகவேண்டும். சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் தாய்மார்கள் தொடர்ந்து வற்புறுத்தவேண்டும். அதனை அவர்கள் வாழ்வியல் பாடமாக ஏற்றுக்கொள்ளும் வரை கண்காணிப்பது தாய்மார்களின் பொறுப்பாகும்.

இன்றைய மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளில் கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்தால், அதனை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகிறார்கள். டாய்லெட் செல்வதற்கு வருத்தப்பட்டு தண்ணீர் பருகுவதையும் தவிர்க்கிறார்கள். காலை முதல் மாலை வரை சிறுநீர் கழிக்காமலே இருந்தால் ‘யூரினரி இன்பெக்‌ஷன்’ தோன்றும்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவதும், அடக்கிவைக்காமல் சிறுநீர் கழிப்பதும் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். மாதவிலக்கு நாட்களில் சுத்தத்தில் அதிக அக்கறை தேவை. தினமும் 3 முதல் 5 பேடுகள் மாற்றவேண்டும். பள்ளியில் வைத்து பேடு மாற்றுவதற்கு தயங்கி காலை முதல் மாலை வரை ஒரே பேடு பயன்படுத்தினால் அது தொற்றுக்கு வழிவகுத்துவிடும்.

அந்த நாட்களில் சிறுநீர் கழித்ததும் உறுப்பு பகுதியை தண்ணீரால் சுத்தம் செய்வது அவசியம். உறுப்பு பகுதியில் சொறி ஏற்படுவதும், வாடை வீசும் விதத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படுவதும் தொற்று உருவாகியிருப்பதின் அறிகுறியாகும். எல்லாவிதமான வெள்ளைப்படுதலும் தொற்றின் அறிகுறியல்ல.

சினைமுட்டை வெளிப்படும் காலகட்டத்திலும், மாதவிலக்கு தொடங்குவதற்கு முன்பும் இயற்கையாகவே வெள்ளைப்படுதல் உருவாகும். உறுப்பு பகுதியில் சுடுநீரை பயன்படுத்தி கழுவக்கூடாது. அது நல்ல பாக்டீரியாக்களையும் கொன்றுவிடும். அதனால் எப்போதுமே உறுப்பு பகுதியை தண்ணீரால் மட்டுமே கழுவவேண்டும். குளிக்கும்போது மட்டும் வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தி கழுவலாம்.

ஆனால் உறுப்பு பகுதியை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவக்கூடாது. உள்ளாடைகளை துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து பயன்படுத்தவேண்டும். தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. டாக்டர் பரிந்துரைக்கும் ‘ஆன்டி பங்கல் கிரீம்’ பூசுவதும், ‘வஜைனல் வாஷ்’ உபயோகிப்பதும் தொற்றை நீக்கும்.

சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல், சிறுநீர் நிறம் மாறுதல், அடிவயிற்றில் வலி ஏற்படுதல் போன்றவை சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாகும். அதிக அளவில் உடல்பருத்து காணப்படுதல், அதிக ரோம வளர்ச்சி, நெஞ்சுப் பகுதியில் ரோமம் வளருதல், அதிக அளவில் முடி உதிர்தல் போன்றவை இருந்தால், அது ஒருவேளை பி.சி.ஓ.டி. பாதிப்பாக இருக்கலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரும்பாலான டீன்ஏஜ் பெண்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். மகப்பேறு டாக்டரை சந்தித்து இதற்கான ஆலோசனைகளை பெறவேண்டும். தற்போது குண்டான உடல்வாகுவை கொண்ட பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். துரித உணவுகள், பேக்கரி பலகாரங்கள், கலோரி அதிகமுள்ள பதார்த்தங்களை சாப்பிடுதல் போன்றவைகளால் உடல் குண்டாகிறது.

வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்க்கவேண்டும். ஒரு நேரம் உணவே சாப்பிடாமல் இருப்பதும், இன்னொரு தடவை அதிகமாக சாப்பிடுவதும்கூட உடல் குண்டாக காரணமாகிவிடும். பல நிறங்களை கொண்ட பழங்களும், காய்கறிகளும் உணவில் அதிகம் சேர்க்கப்படவேண்டும். வாரத்தில் மூன்று நாட்களாவது டீன்ஏஜ் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

கைப்பந்து, பேட்மிண்டன் போன்ற ஏதாவது ஒரு விளையாட்டிலும் அவர்களை பங்குபெற செய்ய வேண்டும். சிறுமிகளுக்கு 12-வது வயதில் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. கருப்பை பகுதியோடு தொடர்புடைய புற்றுநோய்கள் எதிர்காலத்தில் உருவாகுவதை இது தடுக்கும்தன்மைகொண்டது. டீன்ஏஜ் பெண்கள் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x