உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபா ஓய்வூதியம் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்   54,285 ரூபாயையும் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாய் இழப்பீட்டு தொகையில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி  10 மில்லியன் ரூபாயும்  பின்னர் 5 மில்லியன் ரூபாய் அடிப்படையில் 15 மில்லியன் ரூபாயும் இழப்பீடாக உயிர்த்த ஞாயிறு  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள இழப்பீட்டை தலா  85 லட்சம் ரூபாய் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை 10 தவணைகளில் வருடாந்தம் வழங்குவதற்கு  அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான தீர்ப்பை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அறிவித்திருந்தது.

மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50  மில்லியன் ரூபாயும், முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாயும் இழப்பீட்டாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நட்டஈடு வழங்க அன்றிலிருந்து 6 மாத கால அவகாசம் வழங்கவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்திருந்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 1 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 1,725,588 ரூபாவையும் இழப்பீட்டை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸும் 05 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்தியுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இது தவிர அரசாங்கம் சார்பில் திறைசேரி ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்கியுள்ளது.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன இதுவரை நட்டஈடு வழங்கியதாக தெரிவிக்கப்படவில்லை என அந்த அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த இழப்பீடுகள் அனைத்தும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal