எழுதியவர் –

முனைவர் சி. தேவிஉதவிப்பேராசிரியர்,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

மானிடவியல் என்பது மனிதனின் நடத்தை முறை அறிவியலாகும். மனிதனைப் பற்றி ஆராயும் பிரிவே மானிடவியல் எனலாம். மானிடவியல் என்னும் அறிவுத்துறையின் வெளிப்பாடே பண்பாட்டை உலகிற்குக் கொண்டு வந்தது எனலாம். “மனித சமுதாயம் என்பது மக்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அமைப்பே” (1) என்பார் செனோபேன்ஸ். மானிடவியலை மனிதன் பற்றிய தேடல் என்பா். மானுடம் பற்றிய தேடல் முக்கியமானது, அது ஒரு பவித்திரமான பணி என்று கார்த்திகேசு சிவத்தம்பி கூறுகிறார்.

Anthropology என்ற சொல் The Study of man என்றழைக்கப்படுகிறது. “மானிடவியல் என்பது மானிடத்தோற்றம், உடலியல் தோற்றம், பண்பாட்டு வளா்ச்சி, இன வகைப்பாடு, மனித நம்பிக்கைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு மரபு சார்ந்த வெளிப்பாடு” (2) என்று அகராதி விளக்கம் நல்குகிறது.

மானுடவியல்

பண்பாட்டு மானிடவியல், சமுதாய மானுடவியல் என்ற இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

பண்பாட்டு மானுடவியல்

பண்பாட்டு மானுடவியல் நோக்கில் ஆய்வில் புகும் ஆய்வாளா்கள் மனிதனின் உயிரியல் சார்ந்தோ, பண்பாடு சார்ந்தோ, வரலாறு சார்ந்தோ, மொழி சார்ந்தோ ஆராய்கின்றனர். எனவே, மானிடவியல்,

 1. உடல்சார் மானிடவியல்
 2. பண்பாட்டு மானிடவியல்
 3. தொல்லியல்
 4. மொழியியல் என்ற நான்கு பெரும் பிரிவுகளுள் அடங்குகிறது.

பண்பாட்டின் உட்கூறுகள்

பண்பாடு என்பது இலக்கியம், கவிதை, நடனம், இசை, கோயில்கள், சடங்குகள், வேதமந்திரங்கள், தொழில்கள் போன்ற சில கூறுகள் மட்டுமல்லாது, மக்களின் நடத்தை முறைகளைக் கட்டுக்கோப்பான நிலையில் செயல்படுத்தும் ஒரு மிகப்பெரும் அமைப்பாகும். எந்திரங்களின் செயற்பாட்டிற்கு எவ்வாறு ஆயிரமாயிரம் உறுப்புகளைச் சிறப்பாக வடிவமைத்து இணைக்கின்றார்களோ, அவ்வாறே ஒவ்வொரு பண்பாட்டிலும் ஆயிரமாயிரம் கூறுகள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு பண்பாடு என்னும் அமைப்பிற்குள் பொருத்தப்பட்டுள்ளன.

“கற்றுணரந்த நடத்தை முறையானாலும் சரி உற்பத்தி செய்யப்பட்ட பயன்படு பொருளானாலும் சரி, அதனை எந்த அளவுக்குக் குறைத்துக் காண முடியுமோ, அந்த அளவிற்குக் குறைத்துக் காணக்கூடிய ஒன்றே பண்பாட்டுக் கூறு ஆகும்” (3) என்பார் ஹோபல்.

பண்பாட்டு மானிடவியல்

 1. பொருள்சார் பண்பாடு
 2. பொருள் சாரா பண்பாடு

என்ற இரண்டு நிலையில் ஆராய இடமளிக்கிறது.

பொருள்சாராப் பண்பாடு என்பது பருப்பொருள் வடிவம் இல்லாதவை. இக்கூறுகள் மனத்தளவில் மட்டுமே உணரக் கூடியனவானவும், புரிந்து தெரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. அவை மானிடவியல் வழக்கில் மனவடிவங்கள் என்றும் கூறப்பெறும்.

பழக்க வழக்கங்களை தனி மனிதனும், சமுதாயம் என்ற அமைப்பும் இணைந்து உருவாக்குகின்றன. மக்களின் தேவை அடிப்படையிலேயேப் பழக்கங்கள் தோன்றுகின்றன. அவை சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற நிலையில் வழக்கங்களாக உருப்பெறுகின்றன. எனவே, நாளடைவில் வழக்கம், வழக்கம் என்ற இரண்டும் சேர்ந்து பழக்கவழக்கம் என்றாகிறது.

மரபு

பழக்கம் என்பது ஒரு கற்கும் செயலாகும். இது தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வளர்ச்சிக்கு இன்றியமையாதக் கூறாகக் கருதப்படுகிறது. “நனவுடன் தொடங்கிய செயல் நாளடைவில் நனவின்றியே நிகழக் கூடியதாக ஆகிவிடும் செயலையேப் பழக்கம் என்பர்” (4) இப்பழக்கமேப் பிற்காலத்தில் மரபு எனப்பட்டது.

க. காந்தி தான் எழுதிய “தமிழா் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்” என்ற நூலில், “ஒரு சமுதாயத்தின் உண்மை நிலையை, நாம் அறிய வேண்டுமென்றால் அச்சமுதாயத்தின் நம்பிக்கை , பழக்க வழக்கங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அச்சமுதாயத்தின் கால ஓட்டத்தில் உருவாக்கப்படுகின்ற இலக்கியங்களில் அச்சமுதாயத்தின் வெளிப்பாடாக, இத்தகு பழக்க வழக்கங்கள் பரவலாகப் பதியப்படுகின்றன” (4) என்று கூறுவர்.

தமிழ் மக்கள் சில அறங்களை வாழையடி வாழையாகப் போற்றிப் பேண வேண்டுமென்ற நோக்கில் சேரமான் கணைக்கால் இரும்பொறை மன்னனே, தம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சியைக் கூறித் தமிழினத்திற்கு என்றும் வேண்டுகோள் விடுத்துப் பாடியுள்ளார்.

“குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்னுவாளிற் றப்பார்
தொடா்ப்படு ஞமலியினிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாஒ் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத் தீத் தணியத்
தாமிரந்துண்ணு மளவை
ஈன்ம ரோவில் வுலகத்தானே” (5)

என்று நாட்டார் வழக்கு நன்கு புரியும் வண்ணம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பிள்ளை இறந்து பிறப்பினும் தசைப்பிண்டமாக பிறப்பினம் அவற்றையும் ஆளாகக் கருதிவாளால் கீறிப் புதைக்கும் வழக்கம் இருந்தது. விழுப்புண்ணோடு உயிர் துறப்பவர்க்கேச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது. மறக்குடியில் பிறந்த வீரர்களது வீரத்தை மேலும் ஊக்குவிக்க, அவர்களது தன்மான உணர்வைத் தூண்டப் பல வாசகங்கள் கூறப்படுவதுண்டு.

“உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர்” (6)

இக்குறள் வழி போர் வந்தால் உயிரைத் துச்சமெனக் கருதி போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தன் சிறப்புக் குறையாதவர் ஆவர் எனக் கூறும் வள்ளுவர் கருத்து இங்கேக் கவனிக்கத்தக்கது. இப்பண்பு நாட்டார் வழக்கில் மரபாகி நெறியாகிப் போற்றப்பட்டது.

திருமணம்

இல்லறத்தில் திருமணம் என்பது மனிதப் பண்பாடு. அன்பின் ஐந்திணை வாழ்வினைச் செம்மையாகச் செயல்படுத்த மண உறவு மிகமிகத் தேவை. தலைவனும், தலைவியும் இணையும் இல்வாழ்க்கையில் அன்பைப் பண்பாகவும், அறத்தைப் பயனாகவும் கொண்டு வாழ்வதேச் சிறந்த பண்பாகும். வேங்கை பூக்கும் காலம் திருமணம் நடத்துவதற்கு உரிய காலம், முல்லை நில மக்கள் வேங்கை மரத்தின் கீழிருந்து திருமண முடிவு செய்வர் என்பதை,

“மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம்நயந் தன்ன” (7)

என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

பழந்தமிழர் சமுதாயத்தில் திருமணம் பெண் வீட்டில் நடைபெறுவதே வழக்கமாக இருந்துள்ளது என்பதை,

“வதுவையும் ஈங்கே அயர்ப”

மணவினைச் சடங்கு

களவு மணமானாலும், கற்பு மணமானாலும், ஏறு தழுவிய பிறகே திருமணங்கள் முல்லை நிலத்தில் நடைபெற்றன. பெண்கள் திருமண வயதடைந்தவுடன் மணமகன் தேர்விற்காக ஏறு தழுவுதல் விழா பற்றி பறையறைந்து களிறு, முதலை முதலிய விலங்கினங்கள் அடைக்கப்பட்டிருக்கும். குகை போன்று தொழுவம் அமைந்திருக்கும் என முல்லைக்கலி காட்டுகிறது. தொழுவத்தை ஒட்டி பரண் அமைக்கப்பட்டிருக்கும் அதன் மீது பெண் குடும்பத்தார், ஊர் மக்கள் அனைவரும் காத்திருப்பர். பறை அறைதலைத் தொடர்ந்து ஏறு தழுவுதல் நடைபெறும். தொழுவம் நறுமணப் புகையிட்டு இறை வழிபாடுகள் செய்யப்படும். காளைகளும் வீரர்களும் போரிட களம், இருபெரும் வேந்தர்கள் போரிடும் போர்க்களம் போலக் காட்சிதரும் எனவும், பாரதப் போரிலே நடந்த தாக்குதல் போலிருந்தது எனவும் கலித்தொகையில் குறிப்புகள் உள்ளன. காளை வலியிழந்தாலோ, வீரன் சேர்ந்தாலோ ஏறு தழுவுதல் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படும். நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் மன்றத்தில் கூடி குரவைக் கூத்தாடி மகிழ்வர்.

சங்க காலத்தில் திருமணத்தின் போது ஆண்களே பெண்களுக்கு பொருள்தரும் பழக்கம் இருந்தது என்றாலும், ஏறு தழுவிய ஆண்மகனிடம் பொருள் (முலை விலை – பரிசம்) பெறுவதில்லை என்ற பழக்கம் கொண்டிருந்தனர். முல்லை நிலமக்கள் என்பதை,

“எளியவோ ஆயமகள் தோள்
விலை வேண்டா ரெம்மினத் தாயர் மகளிர்
கொலையேற்றுக் கோட்டிடைத் தாம் வீழ்வார் மார்பின்
முலையிடைப் போலப் புகின்” (8)

எனும் பாடலடிகள் சுட்டுகின்றன.

ஏறு தழுவுதல்

சங்கத் தமிழகம் வீரயுகம் சார்ந்ததாக இருந்தது. வீரயுகத்தின் வெளிப்பாடாக மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளும் அமைந்தன. அவர்தம் வீரத்தின் அளவுகோலாக ஏறுதழுவுதல் இருந்தது. வீரம் சான்ற காளையை அடக்குதல், வீரர்களின் வாழ்வில் இன்றியமையாத இடம்பெற்றது. காளையை அடக்குதல், வீரத்தின் வெளிப்பாடாக அமைந்ததற்குரிய காரணங்கள் ஆராய்வதற்குரியன.

ஏறுதழுவும் இடம் தொழூஉ எனப்பட்டது. அகன்ற அப்பகுதியில் காளைகள் பாய்ந்து வந்தன. அவற்றை வீரர்கள் அடக்கினர். அவ்விடத்தே வீரர்களின் வீர நிகழ்வைக் காணக் குழுமும் பெண்களின் இருப்பிடமாகப் பரண் அமைக்கப்பட்டது. பரண்களின் மேலிருந்தவாறு பெண்கள் வீரர்களின் ஏறுதழுவும் காட்சிகளைக் கண்டு மகிழ்வர்.

“பல்ஆன் பொதுவர் கதழ்விடைக்கோள் காண்மார்
முல்லையும் முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர் பெருமழைக் கண்ணர் மடம்சேர்ந்த
சொல்லர் கடரும் கனங்குழைக் காதினர்
நல்லவர் கொண்டார் மிடை” (9)

என்னும் பாடலடிகள் விரைந்து வரும் காளைகளை அடக்க வரும் வீரர்களைக் காண்பதற்காகப் பெண்கள் பரணைக் கைக்கொண்டனர் என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றன. மேலும் தொழூஉவானது நறுமணம் கமழும் இடமாகவும் ஏறுகளின் பாய்ச்சல் காரணமாக துகள் எழுந்த இடமாகவும் திகழ்ந்தது என்பதை,

“அவ்வழி முழக்கென, இடியென, முன்சமத்து ஆர்ப்ப-
வழக்குமாறு கொண்டு, வருபுவருபு ஈண்டி-
நறையொடு துகள்எழ நல்லவர் அணிநிற்பத்” (10)

எனும் பாடலடிகள் சுட்டுகின்றன.

கலித்தொகையின் பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் முல்லைத் திணையின் வீரவிளையாட்டினை எடுத்துரைக்கின்றன. ஏறு தழுவுதல் ஒரு ஆண்மகனின் கடமையாகும். கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் மறுபிறப்பிலும் தழுவமாட்டான் என்பதனை,

“கொல்ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆயமகள்” (11)

எல்லா நிகழ்வுகளையும் மக்களுக்கு முரசறைந்து முன்னமே அறிவிக்கும் அத்தகைய பண்பாடு முல்லை நிலத்தில் இருந்தமையை,

“எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்
சொல்லுக! பாணியேம் என்றார் அறைக என்றார்
பாரித்தார்” (கலி.102 : 11-12) (12)

ஆயர்குல இளைஞர்கள் வீறு கொண்டு எழுந்து வரும் ஏறுகளைத் தெய்வத்திற்குச் சமமாக எண்ணினர். பாய்ந்து வருகின்ற காளைகளுக்குத் தெய்வத்தின் பெயர்களையும் இட்டு அழைக்கின்றனர்.

காளையும் கடவுளும்

சோழன் நல்லுருத்திரன் பாடல்களில் காளைகள் கடவுளரோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. முல்லைக்கலி நான்காம் பாடலில், காளைகள் பலவித வண்ணங்களில் தொழுவத்திற்கு அணிவகுத்து வரும் காட்சி காட்டப்பட்டுள்ளது. வெண்மை நிறமுடைய பலராமன் போல் ஒரு காளை, திருமாலைப் போல கரிய நிறத்தில் ஒரு காளை, சிவபெருமானின் சிவந்த நிறத்தில் ஒரு காளை என்று கடவுளரோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. கொம்புகள் வளைந்த நிலையில் இருக்கும் சிவப்புக் காளையைக் குறிக்கும் பொழுது, சிவபெருமான் சூடியுள்ள பிறைச் சந்திரனை உவமையாக்கியுள்ளார் புலவர் என்பதை,

“கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடணி சேயும்” (மு.க.3) (13)

என்ற பாடலடி மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஏறு தழுவும் முன் வழிபாடு

எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி பெற, இறைவனை முதலில் வணங்கும் மரபு தமிழர்களிடம் இயல்பாகவே இருந்து வந்துள்ளது. ஏறு தழுவும் இளைஞர்களும் தொழூஉவினுள் புகுவதற்கு முன்னர் நீர்த்துறையிலும் ஆலமரத்தின் கீழும் பழமையான வலிமை பொருந்திய மரங்களின் கீழும் உறையும் தெய்வங்களை முறையாக வழிபட்டனர் என்பதை,

“துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ” (14)

என்ற பாடலடிகளால் அறிய முடிகிறது. இயற்கையை வழிபட்ட தமிழர்களின் மாண்பினையும் இதனால் அறியலாம்.

ஏறு தழுவும் முன் பறை சாற்றுதல்

சங்கக் காலத்தில் முல்லை நிலத் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஆடவன் தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். தலைவியின் இல்லத்தில் காளை ஒன்று செருக்கும் வலிமையும் மிக்கதாக வளர்க்கப்பட்டு வரும். அக்காளையை ஆடவன் ஏறு தழுவுதலில் கலந்து கொண்டு அடக்கிக் காட்ட வேண்டும். அவ்வாறு அடக்கிக் காட்டுபவனுக்கே அப்பெண் உரிமைப்பட்டவன் ஆவாள்.

“முள்எயிற்று ஏஎர் இவளைப்பெறும் இதுஓர்
வெள்ஏற்று எருத்து அடக்குவான்… … …
… … … … … … …
… … … … … … …
என்றாங்கு
அறைவனர்” (15)

என்னும் பாடலடிகள் ஏற்றை அடக்குபவனே தலைவியைப் பெற இயலும் என்று முரசறைந்து அறிவிக்கப்பட்ட தன்மையினைத் தெரிவிக்கின்றன. பொது இடங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு முரசறைந்து தகவலை அறிவிக்கும் தன்மையினை இதனால் அறிய இயலுகின்றது.

தொழுவில் காரி புள்ளிகளை உடைய வெண்மையான காளை, வளைந்த கோடுகளைக் கொண்ட சிவந்த காளைகள், கபிலை நிறமுடைய ஏற்றினைப் பற்றிய குறிப்பும் உள்ளன. மேகக் கூட்டங்கள் திரண்டு எழுந்ததைப் போல தொழுவினுள் புகுந்தன என்பதைக் கலித்தொகை புலப்படுத்துகிறது.

ஏறுகளைத் தழுவுதற்குள் களம் புகுந்த வீரர்கள் எருதுகளின் கொம்புகளைப் பிடித்து மார்பிலே பொருந்தும்படி தழுவினர். சிலர் கழுத்திடத்தே அடங்கின் கிடந்து அக்காளையின் திமிலைத் தழுவினர். சிலர் தோளுக்கு நடுவே கழுத்தைப் புகவிட்டு இறுகப் பற்றிக் கிடந்தனர். சிலர் கொம்புகள் தம்மீது படுவதை அஞ்சாது ஏற்றுக் கொண்டனர்.

“மருப்பில் கொண்டும் மார்பு உறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில் இறப் புல்லியும்
தோள் இடைப் புகுதந்தும் துதைந்தபாடு ஏற்றும்
நிரைபு மேல் சென்றார்” (16)

என்னும் பாடலடிகள் ஏறுதழுவிய வீரர்களின் தன்மைகளைக் குறிப்பிடுகின்றன. ஏறுதழுவிய வீரர்களின் எதிர்ப்புக்கு ஏறுகளின் கொம்புகளும் தாழ்ந்தன. ஏறு தழுவிய வீரர் தன் நெடிய தோளால் ஏற்றின் கழுத்தை இறுகத் தழுவினான். அதன் திமிலிடத்தேத் தோன்றி அவ்வேற்றைப் பெரிதும் வருந்தினான். ஏற்றிற்குத் தாளாமல் பல வீரர்களும் கலங்கிய நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறு தழுவ வந்த வீரர்களைக் காளைகள் சிதைத்த காட்சிகள் பலவும் நெய்தற்கலியில் இடம்பெற்றுள்ளன. தன்னைத் தாக்க வந்த இளைஞனைச் சாவக் குத்தி தன் கொம்புகளுக்கு இடையில் கொண்டு அவனுடலைச் சாய்க்கின்றனவாய் எருதுகள் திகழ்ந்தன. வீரர்களைத் தாக்கிப் பாய்ந்த காளைகள் காண்பதற்குத் துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து பகைவர் நடுவே தன் வஞ்சினத்தை நிறைவேற்றிய வீமனைப் போலவும், எருமைக்கடா மீது ஏறி வரும் கூற்றவனுடைய நெஞ்சைப் பிளந்து குடரைக் கூளிக்கு இடும் பசிய நிறத்தை உடைய கடவுளைப் போலவும் தன் தந்தையைக் கொன்றவனைத் தன் ஆற்றலின் வலிமையால் தலையைத் திருகிக் கொன்ற அசுவத்தாமனைப் போலவும் காட்சியளித்தன. வலிமை வாய்ந்த தம் கோடுகளில் குருதி சாய்ந்த குடல் சூடியவையாகவும் ஏறுகள் திரிதந்தன அத்தகைய ஏறுகளையும் அஞ்சாமல் வீரர்கள் அடக்கினர்.

“குருதிக் கோட்டொடு குடர் வலந்தன
கோட்டொடு சுற்றிக் குடர்வலந்த ஏற்றின்முன்
ஆடிநின்று அக்குடர் வாங்குவான் பீடுகாண்” (17)

என்னும் பாடலடிகள் ஏறுகள் குடர் சூடித் திரிந்த காட்சிகளை எடுத்துரைக்கின்றன. ஏறுகளின் அழகிய மருப்பினால் குத்திச் சரிந்த குடர்களைப் பருந்துகள் பற்றிக் கொண்டு மேலே சென்றன. அவற்றிடமிருந்து தவறி விழுந்த குடர்கள் ஆலமரத்தின் மீதும் கடம்பமரத்தின் மீதும் வீழ்ந்து அங்கு வாழும் தெய்வங்களுக்கு சூட்டப்பட்ட மாலைகளைப் போலக் காட்சியளித்தன. இவ்வாறு ஏறுகள் வலிமையின் சிம்மங்களாகத் தொழூஉவிலே திரிந்தன.

ஏறுதழுவுதலின் நிறைவு

ஏறு தழுவிய பின்னர் தொழூஉவினது பாண்டவரும் நூற்றுவரும் போரிட்ட போர்க்களத்தையும், இருபெரு வேந்தர்கள் தம்முள் மாறுபட்டு எதிர்ப்பட்ட போர்க்களத்தையும் ஒத்துக் காணப்பட்டது. புழுதி பாய்ந்து காணப்பட்டது. புழுதி பாய்ந்து காணப்பட்ட களத்தில் வீரர்கள் காளைகளை அடக்கிய போது, அவர்களது வெற்றி அறிவிக்கப்பட்டது. தலைவன் கொல்லேற்றினைத் தழுவிக் கொண்டமையால் தனக்கு ஏற்படும் இன்பத்தைத் தலைவி, தான் மோர் விற்றுச் சேர்த்த செல்வத்தைப் போன்றது என்று மகிழ்கிறாள். கொல்லேற்றுக் கோட்டினைத் தழுவ, அஞ்சும் ஆயனை மறுமையிலும் தலைவி புல்லுவதில்லை. ஏறு தழுவிய வீரனுக்குத் தலைவியை அவளுடைய தமர் விருப்பத்துடன் தமர் மகிழ்ந்தனர் என்பதனை,

“திண்தோள் திறல்ஒளி மாயப்போர் மாமேனி
அம்துவர் ஆடைப் பொதுவனோடு ஆய்ந்த
முறுவலான மென்தோள் பாராட்டி சிறுகுடி
மன்றம் பரந்தது உரை” (18)

என்னும் பாடலடிகளால் அறிய இயலுகின்றது. அவ்விடத்தே மக்கள் குரவைக் கூத்தாடி மகிழ்ந்தனர்.

சங்கத்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை மரபினைப் பின்பற்றி மரபு நிறைந்த வாழ்வு வாழ்ந்தனர். மரபு மீறல் வாழ்வியல் அறங்களுக்குப் புறம்பானது என்று கருதப்பட்ட காரணத்தால், மரபு என்ற பொருள்சாராப் பண்பாடு பண்டையோரால் மதிக்கப்பட்டது.

அடிக்குறிப்புகள்

 1. பக்தவச்சல பாரதி, பண்பாட்டுமானிடவியல் ப.20
 2. கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் ப. 30
 3. கழக தமிழ் அகராதி ப. 108
 4. பக்தவச்சல பாரதி, பண்பாட்டுமானிடவியல் ப. 165
 5. முனைவர் க.காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், அணிந்துரை
 6. புறம் 74
 7. குறள் 778
 8. கலித்தொகை 41
 9. கலித்தொகை 105
 10. கலித்தொகை113
 11. நெ.க. 103 :5-9
 12. நெ.க. 101
 13. கலித்தொகை 103 : 63-64
 14. நெ.க. 101 : 13-14
 15. நெ.க.104 : 18-26
 16. நெ.க. 105 : 30-33
 17. நெ.க. 103 : 27-29
 18. நெ.க.102: 36-39

துணைநின்ற நூல்கள்

 1. பக்தவத்சல பாரதி. சீ, பண்பாட்டு மானிடவியல், அடையாளம் பதிப்பகம், திருச்சி. (1990).
 2. கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை. (திசம்பர், 1981).
 3. முனைவர் க.காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. (முதல் பதிப்பு 1980).
 4. சுப்பிரமணியன். ச.வே. (உரைஆ.), பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு கோவிலூர் மடாலயம், கோவிலூர். (முதல் பதிப்பு 2003).
 5. சுப்பிரமணியன். ச.வே. (உரைஆ.), பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. (மூன்றாம் பதிப்பு, செப்டமபர் 2017)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal