ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரிடமிருந்து பட்டப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, முருந்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe ananda thero) கலந்துக் கொள்ளும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கொழும்பு பல்கலைகழகத்தின் முகாமைத்துவம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஏற்கெனவே அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட மாணவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கையில் கறுப்பு நிறத்திலான பட்டை அணிந்து வேந்தரிடமிருந்து பட்டப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் (Gotabaya Rajapaksa) அபயராம விகாரையின் விகாதாதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.

முருந்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டமைக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தினரும், மாணவர் சங்கங்களும், விரிவுரையாளர்களும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அரசியல் நோக்கத்திலான இந்த நியமனம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புகழுக்கும் ,பல்கலைக்கழக நிர்வாக சுயாதீனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இந்நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தினர் கடந்த மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.