எழுதியவர் -குமரன்விஜி

துயரமே நான்தான்
உனக்கு மிகவும் பிடித்த எதிரி வந்திருக்கிறேன்
யுத்த கோட்டுக்குள்
உனக்கும் எனக்கும் நாள் தவறாது யுத்தம்
உன் வரலாற்று நாவால்
ருசித்து
மென்றென்னை பலமுறை விழுங்குகிறாய்
நானுன் குடலிறங்கும்போது
உன்
உயிருக்கு அவ்வளவு சுகம்
என்னை நசுக்குவதாய்
நீ விழுங்குகிறாய்
ஆனால்
உன் குடலுள் புகுந்ததும்
எனக்கு
வாள் நகம் முளைக்கிறது
போராடாமல் இருக்க முடியுமா
ஒவ்வொரு முறையும்
உன் வயிற்றை கிழித்து
வெளியேறுகிறது
என் அன்றாடம்
என்னை வீழ்த்த முடியாத
நீயும்
உன்னை வீழ்த்த முடியாத
நானும்
ஓய்ந்து போனதை
யார் அறிவிப்பது
சரி வா
கை குலுக்கிவிட்டு
மீண்டும் தொடங்கலாம்
நீயென்னை விழுங்கும் விளையாட்டையும்
நானுன் வயிற்றை கிழித்து
வெளியேறும் விளையாட்டையும்.
குமரன்விஜி