எழுதியவர் – தமிழ்ச்செல்வன்.

சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு சமையல்அறை அலமாரி , உள்ளிட்ட வேலைப்பாடுகள் செய்ய 3 வடஇந்தியர்கள் வந்தார்கள் . வீட்டின் உரிமையாளர் அனுப்பிவிட்டு போன் செய்தார். மூவரில் ஒருவன் கிஷன் குமார் .
அவன் மட்டும் தான் தமிழ் தெரிந்தவன்.
என் மகன் பெயர் விஜய், 5 வயது .கிஷன் அவனை எப்போதும் சோட்டு என்று தான் கூப்பிடுவான் .
” என்னோட பையன் பேரு சுனில் , நான் சோட்டுனு தான் கூப்பிடுவேன் ” என்றான்.
”உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா , நீயே சின்ன பையன் மாதிரி இருக்க ”
”எனக்கு சின்ன வயசுலே ஆயிடுச்சு சார். 20 வயசுலயே சுனில் பொறந்துட்டான் ”
”எந்த ஊர்ப்பா நீ ”
”ராஞ்சி , தெரியுமா சார் ”
” தோனி ஊரு தானே ”
” அதேதான் சார் . அதுக்கு பக்கத்துல ஒரு வில்லேஜ். பேரு சிரும் ”
” எப்படி தமிழ் நல்லா பேசற ”
”3 வருசமா இங்க தான் இருக்கேன். இங்க தமிழ் பேசலென ஒன்னும் பண்ண முடியாதே. இவங்க ரெண்டு பேரும் புதுசு ”
”உங்க ஊருக்கு கடைசியா எப்போ போனே ”
”போனதே இல்ல சார் . அடுத்த மாசம் எப்படியும் போயிடனும் , சுனில் நேர்ல பாத்து 3 வருஷம் ஆச்சு சார் . வீடியோ கால்ல அடிக்கடி பேசுவேன்.
எப்போ இங்க வருவீங்க னு கேட்டு அழறான். ஒரு ரிமோட் கார் வாங்கிட்டு உடனே வரணும்னு சொல்லி இருக்கான் ”
என் மகன் விஜய் ஒரு ரிமோட் கார் வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான்.
” இந்த கார் எங்க கிடைக்கும் சார் , எவ்வளவு இருக்கும் ”
” இது ஆயிரம் ருபாய் , கிஷன். ரிமோட் கார் எல்லாம் 200, 300 ரூபாய்க்கு கூட கிடைக்கும் ”
”ஓ , சரி சார் ”
” உனக்கு ஒரு நாள் கூலி எவ்வளவு ,கிஷன் ”
சொன்னான்.
” தமிழ் நாட்டு கார்பெண்டர் வாங்கற கூலில ,பாதி தான் இது ”
”தெரியும் சார் , எங்க ஊர்ல இதுகூட கிடைக்காது. இதுக்காக தான் குடும்பத்தை விட்டுட்டு இங்க வந்து கிடக்கிறோம். கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கேன் சார் . எப்படியாவது எங்க ஊருக்கு போயி சுனில் கூட ஒரு மாசமாவது விளையாடனும் சார் ”
வேலை செய்துகொண்டே விஜய் ரிமோட் கார் வைத்து விளையாடும் அழகை வெகு நேரம் ரசித்துக்கொண்டிருந்தான், தன் மகனின் ஞாபகத்துடன் இருக்கிறான் என்று புரிந்தது .
விஜய்க்கு வாங்கிய இன்னொரு ரிமோட் கார் அட்டை பிரிக்காமல் இருந்தது.
அதை கிஷனிடம் கொடுத்தேன் ,
” இதை எடுத்துட்டு போ , கிஷன் , சுனில் கிட்ட குடு ”
” ஐயோ ,வேணாம் சார், நான் வேற வாங்கிக்கறேன் ”
” என்னோட கிப்ட்டா வச்சுக்கோ ” என்று கொடுத்தேன் .
”நாளைக்கு வந்து எடுத்துக்கறேன் சார் .வச்சிருங்க சார். இன்னும் 3 நாள் வேலை இருக்கே ”
அன்று மாலை , மீதம் இருந்த மரத்துண்டுகளை வைத்து விஜய்க்கு ஒரு அழகான கார் செய்து பரிசளித்தான் .விஜய்க்கு அது மிகவும் பிடித்துவிட்டது .
” உங்க நம்பர் இதுல எழுதி கொடுங்க சார் ” என்று ஒரு நோட்டை கொடுத்தான் .
எழுதிக்கொடுத்தேன்.
” நாளைக்கு வரேன் சார் ” என்று விடைப்பெற்றான்.
மறுநாள் கிஷன் எங்கள் வீட்டிற்கு வரவில்லை. காய்ச்சல் என்று மற்ற இருவரும் சொன்னார்கள்.அவர்களிடம் அந்த ரிமோட் காரை கொடுத்து கிஷனிடம் கொடுக்க சொன்னேன் .ஆனால் அவர்கள் மறந்து விட்டுபோய்விட்டார்கள்.
மறுநாள் அவர்களும் வரவில்லை. நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்கியது.
வைரஸ் பரவலை தடுக்க நாங்கள் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தோம்.
டீவியில் மரணச்செய்திகளை பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.
2 வாரம் போனது . என் போனிற்கு கால் வந்தது.
கிஷன் தான் பேசினான் .
” நல்ல இருக்கீங்களா சார் , சோட்டு எப்படி இருக்கான் ”
” நல்லா இருக்கோம் . நீ எப்படி இருக்க , எங்க இருக்கே. உடம்புக்கு ஒன்னும் இல்லியே ”
”நல்லா இருக்கேன் சார் , எங்க ஊருக்கு வந்துட்டேன் ”
”ட்ரெயின், பஸ் எதுவும் ஓடலியே ,எப்படி போன ”
” எங்க ஊர்க்காரங்க கொஞ்சம் பேரு ,சென்னையில இருந்து ஹைவேஸ் ஓரமா நடந்தே வந்துட்டோம் சார் , பத்து நாள் ஆயிடுச்சு ”
”என்னப்பா சொல்ற , 10 நாளா நடந்தீங்களா ? கஷ்டமா இல்லியா ?”
”3 ஆவது நாள் கால்ல கொப்பளம் ஆயிடுச்சு சார். அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் நடந்தேன். அப்புறம் ரோட்ல போன காய்கறி லாரி , அரிசி லாரினு மாறி மாறி வந்து சேந்தேன். கஷ்டமா தான் இருந்துச்சு. சுனில் முகத்தை நினச்சுட்டே எப்படியோ வந்துட்டேன் சார்.. நான் பரவாயில்ல சார் ,என்கூட சில பேர் குடும்பத்தோட நடந்து வந்தாங்க . வயசானவங்க ,குழந்தைங்க எல்லாம் ,பசியோட நடந்து வந்தாங்க. நரகம் சார் அது எல்லாம் ”
”இவ்வளவு கஷ்டப்பட்டு எதுக்கு நடக்கறீங்க . இங்க இருந்துட்டு பிரச்னை முடிஞ்சதும் பஸ் ,ட்ரெயின் புடிச்சு போயிருக்கலாமே ”
”ஒரு கடைக்கு மாடில இருந்தோம் சார் , கடைக்காரர் எல்லாத்தியும் பூட்டனும் உடனே காலி பண்ணுங்கனு சொல்லிட்டாங்க, இங்க வேலையும் கிடையாது , சாப்பாடும் இல்ல , தங்க இடமும் இல்ல . ஊர்ல எங்க குடும்பத்துல என்ன கஷ்டம் படறாங்கனு ஒரே கவலை , வைரஸ் பரவி ஏதாவது ஆச்சுன்னாஅதுக்கு முன்னாடி சொந்த ஊருக்கு போயிடணும்னு தோணுச்சு சார் ”

” ஒரு வழியா ஊருக்கு போயி சேந்துட்டியே , அதுவே போதும் ”
”ஆமா சார் ,சுனில் கூட தான் இருக்கேன் , ஆனா ரிமோட் கார் வாங்க முடியல, கடை தொறக்கட்டும் ராஞ்சில போயி பெரிய ரிமோட் கார் வாங்கி கொடுக்கறேன்னு சொல்லி இருக்கேன். ”
”நான் உனக்கு கொடுத்த கார் வேற வாங்காம போயிட்டியே கிஷன் ”
” கொஞ்ச நாள் போனதும் , நிலைமை சரி ஆனா , அந்த ஊர் பக்கம் வந்தா , அங்க வந்து வாங்கிக்கறேன் சார் ”
சுனில் கிஷனிடம் ரிமோட் கார் கேட்டு அழுகின்ற குரல் கேட்டது. கிஷன் அவனை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தான் .
” நான் அப்புறம் பேசறேன் சார் ” என்று கிஷன் போனை துண்டித்தான் .
ரிமோட் கார் வைத்து விளையாடி சலித்த விஜய். கிஷன் செய்து கொடுத்த மர கார்ப்பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான்.
தனியாக வீட்டின் மூலையில் நிற்கும் ரிமோட் காருக்கு சுனிலின் அழுகை தெரிய வாய்ப்பில்லை.
( முற்றும் )

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal