உலகெங்கும் பரந்து வியாபித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனை நெறிப்படுத்தி சுகமும் பலமும் பொருந்திய ஒரு முழு மனிதனாக வாழ்வதற்கு அனைத்து மதங்களும் வழிகாட்டி நிற்கின்றன. உலக சுகாதார அமைப்புக்கள் பலவும் மனிதனின் உண்மையான சுகம் என்றால் என்ன? மனிதனின் உண்மையான ஆரோக்கியம் என்றால் என்ன? என்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை மாத்திரமல்ல அதனுடன் உள, சமூக, ஆன்மீக, சுற்றாடல் நன்னிலையும் சேர்ந்த ஒரு உன்னத நிலையே உண்மையான சுகம் என்று பல உலக சுகாதார விற்பன்னர்கள் முடிவு செய்திருக்கிறாா்கள்.

மதங்களினதும் மருதுவத்தினதும் அடிப்படைத் தத்துவம் “அன்பு, பரிவு, ஒருவனுக்கு உண்மையான சுகத்தையும் நலத்தையும் கொடுப்பது” என்ற அடிப்படையில் ஒன்றுபடுவதை நாம் அறிவோம். மருத்துவம் ஒருவனுக்கு இந்தப் பிறப்பிலே அன்பும் ஆதரவும் சுகமும் நலமும் கொடுப்பதைப்பற்றி சிந்திக்கிறது. செயலுருவம் கொடுக்கத் துடிக்கிறது. ஆனால் மதங்கள் இம்மையிலும் மறுமையிலும் அவனின் உடலினதும் ஆன்மாவினதும் சுகம்பற்றியும் நலன்பற்றியும் சொல்லி அதற்கான வழியைக் காட்டி நிற்கின்றன. உண்மையான ஆன்மீகமும் அறிவியலும் இரு துருவங்கள் அல்ல. ஒருவனுள் இருந்து துடித்துக்கொண்டிருக்கும் நம்பிக்கைச் சுடரே ஒரு ஆரோக்கியமான விடியலைக் கொடுக்கின்றது.

மதங்கள் எப்பொழுது தோற்றம் பெற்றன? மருத்துவ முறைகள் எப்பொழுது தோன்றின? மனிதனின் அறிவியல் எப்படி தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது? என்ற கேள்விகள் ஆராய்சிக்குரிய விடயங்களாக, புரிந்துகொள்ள கஷ்டமான புதிர்முடிச்சுக்களாக இருந்தாலும் அந்த முடிச்சுக்கள் தற்பொழுது மெல்ல அவிழ ஆரம்பித்திருக்கின்றன.

ஆன்மீகத்தை அறிவியல் கண்ணோடு நோக்கும் போது பல பல சுவாரசியமான விடயங்கள் வெளிச்சத்துக்கு வருவதை அவதானிக்கின்றோம். அன்றுதொட்டு மதங்கள் மனிதனை எவ்வாறு வழிநடத்திவருகின்றன என்பதை ஆராயும்பொழுது பல அற்புதமான தத்துவங்களின் அடிப்படை எமக்கு புரியத்தொடங்கும். மதங்கள் பற்றிய இந்தப் புரிதல் ஒரு சமூகத்தின் சுகாதார நிலையை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். இந்தத் திசையிலான எமது தேடல் பயனுடையதாக அமையும்.

மனிதன் எப்பொழுது தோன்றினான்? மதங்களும் அதன் தத்துவங்களும் எப்பொழுது தோற்றம் பெற்றன? மருத்துவ முறைகளும் வைத்தியமும் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டன? அறிவியலும் விஞ்ஞானக் கருத்துக்களும் எவ்வாறு முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன? என்பது சம்மந்தமாக தெளிவுபெற வேண்டிய தேவை இருக்கிறது. மனிதகுலம் இந்தப் பூமியிலே அவதரித்து 5௦௦௦௦ ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மதக்கருத்துக்களும் தத்துவங்களும் வெவ்வேறு காலப்பகுதிகளில் தோற்றம் பெற்றிருக்கின்றன. இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவங்கள் கி.மு. 3500 வருடங்களுக்கு முன் சிந்துவெளிப் பிரதேசத்திலே தோற்றம்பெற்றிருந்ததாக புதைபொருள் ஆராய்ச்சிகள் சான்று பகர்கின்றன. ஆனால் தற்போது அறியப்படாமல் இருக்கும் வேறு சில மதங்களின் அடிப்படைக் கருத்துக்கள் அதற்கு முன்னதாகவே தோற்றம் பெற்றிருக்கக்கூடும். அக்காலப்பகுதியில் மருத்துவப்பொருட்கள், அறுவை மருத்துவம், நோய்த்தடுப்பு முறைகள் ஆகியவை அக்கால மக்களால் அறியப்பட்டிருந்தன என்பதற்கான வரலாற்று சான்றுகள் பல கிடைக்கபெற்றிருக்கின்றன.

இற்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு 3500 வருடங்களுக்கு முன்பே நடைமுறையிலிருந்த மருத்துவ முறைகளும் மனித ஆரோக்கியத்தைப் பேணும் நடவடிக்கைகளும் முதன்முதலாக எப்பொழுது தோற்றம் பெற்றன என்பது சம்பந்தமான தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் மதத்தின் தத்துவங்களும் ஆன்மீகக் கருத்துக்களும் மருத்துவம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பே தோற்றம் பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகளே இருக்கின்றன.

மதங்களுக்கும் மருத்துவத்திற்கும் இடையிலான நெருக்கம் எவ்வளவு இறுக்கமானது என்பதை நாம் அனைவரும் அறிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இது மனித குலத்தின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும். மன அமைதியும் ஆரோக்கியமும் வேண்டிநிற்கும் மனிதா்கள் ஆன்மீகத்துறையிலே நாட்டம்கொள்வதும், மதநிறுவனங்களும் ஆன்மீக நிறுவனங்களும் மருத்துவச்சேவைக்குப் பெரும் பங்காற்றிவருவதும் மதத்திற்கும் மருத்துவத்திற்குமான நெருக்கத்தைக் காட்டிநிற்கின்றன.

பல கிறிஸ்தவ மத நிறுவனங்களும் இந்துமத நிறுவனங்களும் மருத்துவச்சேவைக்குப் பெரும்பங்காற்றிவருகின்றன. உளவளத் துணைக்கும் பாதிக்கப்பட்டவா்களின் ஆற்றுப்படுத்துகைக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் ஆற்றிவரும் பங்கு அளப்பரியது. பல மதம்சாா்ந்த அமைப்புகள் வைத்தியசாலைகளையே வழிநடாத்திவருகின்றன. இவ்வாறாக மதத்திற்கும் மருத்துவத்திற்குமான நெருக்கம் எப்பொழுது ஏற்பட்டது? இது சம்பந்தமாக எமது பண்டைய நூல்களிலே என்ன சொல்லப்பட்டிருக்கின்றன? என்பதை ஆராயும்பொழுது பல வியத்தகு தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

சிந்துவெளிப் பிரதேசத்தில் தோற்றம்பெற்ற இந்துமதக் கருத்துக்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு அது இந்துமதமாகத் தோற்றம்பெற்றது கி.மு.1500 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதி என்று கருதப்படுகிறது. இதனை வேதகாலம் என்று சொல்லுவாா்கள். இந்த வேதகாலத்திலே மதப்பெரியவா்கள் மருத்துவத்தொண்டையும் ஆன்மீகத் தொண்டையும் ஒருங்கே ஆற்றிவந்ததற்கான சான்றுகள் தென்படுகின்றன. தற்போது நடைமுறையில் இருக்கும் இந்துமதக் கருத்துக்கள் அடிப்படையிலே வேதங்களையும் தொடா்ந்துவந்த உபநிடதங்களையும் குருமாா்களின் அறிவுரைகளையும் அத்திபாரமாக வைத்தே வளா்ச்சிபெற்றிருக்கின்றன என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.

மனிதன் நாகரீகத்திலே வளா்ச்சிபெற்றுவந்த இந்தக் காலப்பகுதியிலே நல்ல பல கோட்பாடுகளுடன் இன்னும் பல மதங்கள் தோற்றம்பெற்றன. இவ்வாறு தோற்றம்பெற்ற மதங்கள் மனிதனின் உடல், உள, சமூக, ஆன்மீக நன்னிலைக்கான பாதையைக் காட்டிநிற்கின்றன.

ஆதிகால மருத்துவமுறைகளிலே சித்தமருத்துவமானது மிகவும் முக்கியமான மருத்துவமுறையாகக் கருதப்படுகிறது. இது அன்றுதொட்டு இன்றுவரை பலருக்கு ஆரோக்கியத்தை அள்ளிவழங்கிக்கொண்டிருக்கிறது. இது திராவிடா்களின் மருத்துவமுறையாக வளா்ச்சி பெற்றிருப்பதால் இன்றும் தமிழா்களுக்கு பெருமைசோ்த்துநிற்கிறது. இந்த சித்தமருத்துவமானது எப்படித்தோற்றம்பெற்றது? இதன் அடிப்படைக் கருத்துக்கள் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன? இதற்கும் மதம், ஆன்மீகம் என்பவற்றிற்கும் என்ன தொடா்பு இருக்கிறது? என்பதை நோக்குவோம்.

சித்த மருத்துவத்தின் தத்துவங்ள் ஆரம்பத்திலே சிவனினால் சக்தியிடம் கையளிக்கப்பட்டு சக்தி அதனை நந்தியிடம் கொடுத்து நந்தி அதனை சித்தர்களிடம் சேர்ப்பித்தார் என்று பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தத்துவங்கள் ஆரம்பத்திலே18 சித்தர்களினால் கையாளப்பட்டிருக்கினறன. இந்த சித்தர்களிலே முக்கியமானவராக அகத்தியர் இருந்திருக்கிறார். இந்த அகத்தியரின் தலைமையிலேயே சித்த மருத்துவத்து முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சித்த மருத்துவத்துறையின் தோற்றம் பற்றிய இந்த கருத்துக்களை நம்புகிறோமோ என்பது முக்கியமல்ல. இது அவசியமும் இல்லை. ஆனால் அக்காலத்திலிருந்தே மதமும் மருத்துவமும் ஒருங்கிணைந்து செயற்பட்டிருக்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விள்குகிறது.

உலகினதும் ஏன் இந்த அண்டசராசரங்கள் அனைத்தினதும் இயக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது energy என்று சொல்லப்படுகின்ற சக்தி என்பது உலகறிந்த உண்மை. சக்தி இன்றி எதுவும் இயங்க முடியாது. அந்த சக்திதான் சிவனின் சரிபாதி என்றும் அவள்தான் அனைத்தயும் இயக்கிக்கொண்டிருக்கிறான் என்றும் இந்து மதம் சொல்கிறது. இந்த உடல் இயக்கமும் சக்தியும் தான் மருத்துவத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது.

மருத்துவக்கலையை ஆயகலைகள் அறுபத்தினான்கில் ஓன்றாக வைப்படுத்தியிருக்கிறார்கள். மனிதனின் சிந்தனை ஓட்டத்தில் ஏற்படும் குளப்பமான நிலையே பல உடல் சம்பந்தமான அறிகுறிகளுக்கும் நோய்களுக்கும் அடிப்படை காரணங்களாக அமைகின்றன என்பதை பல ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. அனைத்து மதங்களுமே மனிதனின் சிந்தனை ஓட்டத்தை நெறிப்படுத்தி சுகப்படுத்தும் அற்புதமான மருத்துவக்கலையை கற்பித்து நிற்கின்றன. எல்லா மதங்களிலுமே அற்புதமான மருத்துவக் கருத்துக்கள் பொதிந்திருக்கிறன்றன.

தற்போதய மருத்துவ உலகு நோய்த்தடுப்பு முறைகளிலேயே அதிதீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. உலக சுகாதார செலவினங்களிலேயே பெரும்பகுதி நோய்த்தடுப்பு மருத்துவத்தை நோக்கி திசை திருப்பப்பட்டிருக்கிறது. மதங்கள் இந்த நோய்ததடுப்பு மருத்துவம் சம்பந்தமான தெட்டத்தெளிவான கருத்துக்களை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றது.

நவீன மருத்துவமுறைப்படி ஒருவர் நோய்வாய்ப்படுவதை தவிர்ப்பதற்கு சில அடிப்படை அறிவுறுத்தல்களை முன்வைப்பது வழக்கம். அவற்றின் சில முக்கியமான அம்சங்களாவன. தினமும் ஒழுங்கான உடற்பயிற்சி இதனை காலையில் செய்து கொள்வது சிறந்தது.

மாச்சத்து அதிகமுள்ள உணவுவகைகளை குறைத்து புரதச்சத்து மற்றும் நார்த்தன்மையுள்ள உணவுவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் மேலதிக உணவைத் தவிர்த்தல்.வீட்டுச் சுற்றாடலையும் உடலையும் சுத்தமாக பேணுதல்.

புகைத்தல், மது அருந்துதல், தகாத பாலியல் தொடர்புகள் போன்றவற்றை தவிர்த்தல்.சுத்தமான உடைகளையும் அங்கிகளையும் அணிதல்.

விட்டமின் D தொகுப்பிற்காகவும் உடற்சுகாதாரத்திற்காகவும் மெல்லிய சூரிய ஒளியில் நடமாடுதல். ஒழுங்கான மன அமைதிக்கான நடைமுறைகள் மற்றும் சுவாசப்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுதல்.

இந்த நடைமுறைகளை கடைப்பிடித்து வந்தால் நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், இருதய நோய்கள், கிருமித் தொற்றுகை, மன அழுத்தம் அதிகரித்த கொலஸ்ரரோல், நிறை அதிகரிப்பு போன்ற பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். இந்த அடிப்படை சுகாதார அறிவுரைகள் அனைத்தையும் மதங்கள் தமது மத அனுட்டான முறைகளில் அப்படியே குறிப்பிட்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

உதாரணமாக தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து கோயிலுக்கு சென்று கோயிலை 3 தடவை வலம்வந்து ஆசனங்கள், அட்டாங்க பஞ்சாங்க நமஸ்காரங்கள் செய்து இறைவணக்கம் செய்ய வேண்டும். என்று இந்துமதம் சொல்லுகிறது. இங்கே உடைச்சுத்தம், உடல்சுத்தம், உடற்பயிற்சி, மன அமைதி என்ற நான்கு சுகாதார அறிவுரைகள் அடங்கி இருக்கின்றன. பஞ்சமாபாதங்களை தவிர்க்குமாறு மதங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றன. இந்த பஞ்சமா பாதங்களில் அடங்கியிருக்கும் கள், காமம் எனப்படுகின்ற மது அருந்துதல் தகாத பாலியல் தொடர்புகள் என்பவற்றை தவிர்த்து விடுவதன் மூலம் AIDS போன்ற பல கொடிய தொற்றுநோய்களிலிருந்தும் ஈரல், நரம்புகள், சம்பந்தமான நோய்களிலிருந்தும் எம்மை தற்காத்துக்கொள்ள முடியும். விரத காலங்களிலே மாப்பொருள் தவிர்த்து பால், பழங்கள், உண்ணும் மரபு அன்றிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. பால், பழங்களிலே வினைத்திறன் கூடிய புரதங்களும் விட்டமின்களும், கனியுப்புக்களும், நார்ப்பொருள்களும் இருப்பதுடன் இது உடல்நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்ககூடிய ஒரு நிறை உணவாகவும் விளங்குகிறது.

சூரிய நமஸ்காரம் எமது வழிபாட்டு முறைகளில் முக்கியமானது. இது காலையில் சூரிய ஒளியிலிருந்து சூரியனைநோக்கி நமஸ்காரம் செய்யும் ஒரு முறையாகும். இதனையே மேலைத்தேச நாடுகளிலே மருத்துவத் தேவைகளுக்காக சன்பாத் என்று செய்துவருகின்றார்கள். இதன் மூலம் பல எலும்பு பல் சம்பந்தமான நோய்களை தடுக்கமுடியும்.

எனவே அன்றுதொட்டு சுகாதார மருத்துவ அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் மதங்களே செய்துவந்திருக்கின்றன. மத ஈடுபாடும் ஆன்மீக ஈடுபாடும் மக்களுக்கு ஒரு ஆரோக்கியமாக பாதையை காட்டி நிற்கின்றன.

கடவுளைப் பக்தியுடன் மனமுருகி, மனம் ஒருமித்து தியானித்து வழிபடும் முறை அன்று தொட்டு எல்லா மதங்களிலுமே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் பல தீமைகள் நீங்கும், நாம் காப்பாற்றப்படுவோம், சுகம்பெறுவோம், பல நல்ல விடயங்கள் நடைபெறும், மனம் சாந்திபெறும் என்ற நம்பிக்கை மதநம்பிக்கை உடைய அனைவரது மனங்களிலும் குடிகொண்டிருக்கிறது. இவை உண்மைதான என்ற கேள்வியும் பலரது மனங்களிலே எழத்தான் செய்கிறது. ஆனால் இவை உண்மை என ஆராச்சிகள் நீரூபித்து வருகின்றன.

மனம் ஒருமித்து மனமுருகி தியானித்து வணங்குவது என்பது Meditation, Realization சுவாசப்பயிற்சி என்ற மருத்துவ விஞ்ஞானப்பதங்களுக்குள் அடங்குகிறது. இவற்றில் ஏற்படும் அனுகூலங்கள் பல இவற்றை ஒழுங்காகச் செய்துவந்தால் மனப்பாரம் குறைவதுடன் பல கொடிய நோய்களிலிருந்தும் காப்பற்றப்படுவதுடன் உடலில் நல்ல பல மாற்றங்கள் நடப்பதற்கும் இது வழிகோலும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மதவழிபாட்டுமுறைகள் மனிதனை உடற்பலமும் ஆன்மீக பலமும் பொருத்தியவனாக ஒரு ஆரோக்கியமுள்ள மனிதனாக வாழ்வதற்கு வழிசமைத்து நிற்கின்றது.

நோய்த்தடுப்பு மருத்துவம் சம்பந்தமாகமட்டும் மதங்கள் வழிகாட்டி நிற்கவில்லை. நோய்களை குணமாக்கும் மருத்துவத்திலும் மதங்கள் பெரும்பங்காற்றி இருக்கின்றன. ஏன் தற்பொழுது ஆற்றிக்கொண்டிருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சைவச் சித்தர்களாலும் ஞானிகளாலும் நோயை குணமாக்கும் சில இரசாயனப் பதார்த்தங்களும் கனியுப்புக்களும் உலோகங்களும் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. வேதகாலத்திலே தோன்றிய அதர்வண வேதத்தின் உபவேதங்களில் ஒன்றாக ஆயுர்வேத மருத்துவம் கருதப்படுகிறது. சமஸ்கிருத மொழியிலே எழுதப்பட்டுள்ள இந்த மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்கும் பல மார்க்கங்கள் குறிப்பிடப்படிருக்கின்றன.

பண்டைய யுத்தங்களிலே காயமுற்றோருக்கு பல சத்திர சிகிச்சைகள் நாடாத்தப்படதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதற்கு அவர்கள் செப்பு கத்திகளை பயன்படுத்தி இருக்கின்றார்கள். இரும்புக் கத்திகளை பாவித்தால் துருப்பிடித்து அதிலே ஏற்புவலி போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வளரும் ஆபத்து அதிகமாகக் காணப்பட்டதால் தொற்று நீக்கும் வசதிகளற்ற அந்தக் காலத்திலே புத்திசாதுரியமாக பாதுகாப்பான செப்புக் கத்திகளை அந்தச் சித்தர்கள் பாவித்திருக்கிறார்கள்.

அதர்வண வேதத்தின் உபவேதமாகிய ஆயுர்வேத மருத்துவத்தை சில நூல்கள் தமிழர்களின் மருத்துவமாகவும் சித்தரித்திருக்கின்றன. சிலப்பதிகாரத்திலே இளங்கோவடிகள் தமிழ் மருத்துவர்களை ஆயுர்வேதர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்து வரும் யோகாசனப் பயிற்சிமுறையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் சைவசித்தர்களே இன்றும் இந்த யோகாசனப் பயிற்சிமுறை பல தொற்றுநோய்களின் கட்டுப்பாட்டிற்கு பெரும் பங்காற்றி வருகிறது.

ஒருவனுக்கு கடுமையான கஷ்டங்களும் மனத்தாக்கங்களும் மன அழுத்தமும் ஏற்படுத்தும் பொழுது அதுசம்பந்தமாக இறைவனிடம் முறையிட்டு அழும் மரபு வேதகாலத்திலிருந்தே அதாவது கி.மு 1500 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றது. சங்ககாலப் பகுதியிலே (கி. பி. 7ம் நூற்றாண்டு) தோன்றி திருமுறைகளில் இந்த மரபை நாம் தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

கிறிஸ்த்தவ மதத்திலும் தமது கஸ்டங்களையும் உள்ளக்கிடக்கைகளையும் இறைவனிடம் பாரப்படுத்தி முறையிட்டு வழிபடும் மரபு 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றது. இவ்வாறு கவலைகளை முறையிட்டு மனமுருகி வழிபடும் பொழுது மனக்கஷ்டம் நீங்கி சுகம் பெற்று மன அமைதியும். பல நன்மைகளும் உண்டாகும் என்று மதங்கள் கூறுகின்றன. இவை தற்பொழுது உண்மை என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. இந்த முறையின் ஒரு வடிவம் நவீன மருத்துவச் சிகிச்சை முறையிலே உலகேங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை Counseling அல்லது உளவளத்துணை என்று சொல்லுவார்கள்.

இந்தச் சிகிச்சை முறையிலே மனக்கஷ்டத்திற்கும் வேதனைக்கும் உட்பட்டிருப்பவர் தனது மன உணர்வுகளை ஒரு அனுபவஸ்தர் (Counselor) ஒருவருடன் அப்படியே முழுமையாகப் பகிர்ந்துகொள்வார். இதன் மூலம படிப்படியாக அவருக்கு ஒரு சிந்தனைத் தெளிவு ஏற்பட்டு தனது சால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு நிலைக்கு வருவார். இங்கு Counselor ஆகப் பணியாற்றுபவர் நோயாளியின் பிரச்சினைகளின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பார். எமது வழிபாட்டு முறையிலே அந்த அனுபவஸ்தர் அல்லது Counselor இன் ஸ்தானத்திலே கடவுள் இருக்கிறார். அவர் பலருடைய மனச்சுமைகளை நீக்கி ஆன்மிக பலத்தைக் கொடுப்பதுடன் நோயுற்றவரின் இரகசியத்தன்மையையும் பாதுகாக்கிறார். இறைவன் நாம் கூறுபவற்றை கிரகித்துக்கொண்டிருக்கிறான் என்றை நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இதனால் நாம் எமது மனக்கஷ்டங்களை இறைவனுடன் பகிர்ந்துகொண்டு தெளிவு பெறுகிறோம்.

எனவே மதநம்பிக்கை மனிதனை பூரணப்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பதுடன் மதமும் மருத்துவமும் மனிதனின் சுகாதார மேம்பாட்டிற்கான இரண்டு கண்களாகவும் இருக்கின்றது.

மனிதனை இறைவன் பகுத்தறிவுடன் படைத்திருக்கிறான் எனவே மதக்கருத்துகளும் மனிதனின் பகுத்தறிவால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் மட்டுமே அவை மனிதனை வழிநடத்தும். எனவே மதக்கருத்துக்களும் விஞ்ஞானமயப்படுத்தப்படவேண்டும் என்ற ஒரு தேவை எழுந்திருக்கின்றது. சொல்லப்படும் ஒரு கருத்தை எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மனம் ஏற்றுக்கொள்ளமாட்டாது. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. காரணம் அப்படிப்பட்ட ஒரு மனதுடன்தான்கடவுள் மனிதனைப் படைத்திருக்கிறான். எதற்கும் காரணத்தையும் விளக்கத்தையும் ஆதாரத்தையும் துடும் மூளைதான் மனிதனுக்கு அமயப்பெற்றிருக்கிறது.

எமது அடுத்த சந்ததியினருக்கு மத நம்பிக்கையும் அதிலிருக்கும் பற்றுறுதியும் குறைவடைந்து செல்வது ஒரு வேதனையான விடயம். இதற்கு காரணம் என்ன?. மதநூல்களிலே காலத்துக்கு ஒவ்வாத பிழையான பல கருத்துக்களும் கலந்து காணப்படுகின்றனவா? என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. உதாரணமாக சிறுத்தொண்டநாயனார் தனது 5 வயது பிள்ளையை வெட்டி ஒரு துறவிக்கு கறிசமைக்கிறார். அந்தப் பச்சிளம் பாலகனை கொல்லும் உரிமையை அவருக்கு யார் கொடுத்தது. மனித உரிமைகள் பற்றியும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் பேசப்படும் இந்தக் காலத்திலே இந்தக் கதையை எவரது மனம் ஏற்றுக்கொள்ளும்.

கடவுள் மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்தது அதனை பத்திரமாக வைத்திருப்பதற்கு அல்ல. மதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் சம்பந்தமாக அலசுவது தெய்வக்குற்றம் ஆகாது. பகுத்தறிவை பாவிப்பது பாவமாகாது. மதநூல்களில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை களைவது அதன் அடிப்படை கருத்துக்களும் விஞ்ஞானவடிவம் கொடுப்பதும் தவறான செயலாகாது.

சிந்துவெளியிலே இருந்த வழிபாட்டு முறைகளுக்கும் வேதகாலத்து வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உபநிடத காலத்திலே சமயக்கருத்துக்கள் மீள ஒழுங்கமைக்பட்டிருக்கின்றன. சங்க காலத்திலே மதக்கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு பல விடயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன. எனவே காலத்திற்கு காலம் காலத்திற்கு ஏற்றாற் போல மீளாய்வு செய்யப்பட்டுவரும் சமயக்கருத்துக்கள் தற்போதய காலத்திற்கு ஏற்றவகையிலும் மிளாய்வு செய்யப்பட்டு விஞ்ஞானமயப் படுத்தப்படுவது தவறான செயலாகாது.

கடவுள் எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட உண்மையான பெரும் சக்தி. அதில் சந்தேகமில்லை ஆனால் அவர் சம்பந்தமான விடயங்களை நூல்களாகவும் இலக்கியங்களாகவும் பதிர்ந்து வைத்தவர்கள் மனிதர்களே. எனவே அவற்றில் இருக்கும் சில மாறுபாடுகள் எமது மதநம்பிக்கைகளை குலைப்பதற்கு இடம்கொடுக்கமுடியாது. மதநூல்களில் இருக்கும் அரிய மருத்துவக் கருத்துக்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவேண்டிய தேவையும் இருக்கிறது.

ஒரு இளம் மனிதனுக்கு மாரடைப்பினால் திடீர்மரணம் ஏற்படும் முறையை திருமூலர் என்ற சித்தமருத்துவத்தை வடிவமைத்த 18 சித்தர்களில் ஒருவரான இந்த மருத்துவர் தனது திருமந்திரத்திலே பதிந்து வைத்திருக்கிறார். தற்போதைய மருத்துவ உலகிலே இவ்வாறான பதிவுகளை “கேஸ் றிப்போட்” என்று சொல்லுவோம். எனவே திருமூலரின் இந்தப் பதிவை உலகின் முதலாவது கேஸ் றிப்போட் என்று கருத முடியும். அவர் தனது அந்தப்பதிவிலே…

“அடைப்பணிவைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடியாருடன் மந்தணம் உண்டார்

இடப்பக்கமே இறை நொந்தது என்றார்.

கிடக்கப்படுத்தார் கிடந்தொளிந்தாரே ”

சுகதேகியாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு இளம் மனிதன் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென இறந்துபோனதை தெளிவாக திருமூலர் திருமந்திரத்திலே பதிந்துவைத்திருக்கிறார்.

சமணசமயத்தை சேர்ந்தவராக கருதப்படும் திருவள்ளுவர் தனது திருக்குறளிலே

“நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்று மருத்துவத்தின் தத்துவத்தை அப்படியே 2வரிகளில் சொல்லியிருக்கிறார். அதாவது நோயை அதன் குணம் குறிகளிலிருந்து அறிந்து அது ஏற்பட்டதற்கான காரணத்தையும் அறிந்து எல்லாவற்றையும் தீர்ப்பதற்கான உபாயங்களையும் அறிந்து மருத்துவம் செய்தல்வேண்டும் என்று சொல்லிருக்கிறார். இவருக்கு அன்றே இதைச் சொல்லிக்கொடுத்தவர் யார்??

கடுமையாக நோய்வாய்ப்பட்டு ஒருவர் படுக்கையில் இருக்கும் பொழுது பண்ணிசை பாடும் அல்லது திருமுறை ஓதும் மரபு அன்றுதொட்டு இருந்துவருகிறது. கிறிஸ்தவ மதத்திலும் ஏனைய மதங்களிலும் கூட இந்த மரபு இருந்துவருகின்றது. அமைதியான இசையானது உடல்வலியையும், மனவலியையும் குறைத்து ஒருவர் குணப்படும் வீதத்தையும் அதிகரிக்கும் என்று நவீன ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன.

எனவே மதநூல்களில் பொதிந்திருக்கும் அரிய மருத்துவக் கருத்துக்கள் அதிலே கலந்துபோயிருக்கும் ஒருசில தவறான கருத்துக்களினால் அடிபட்டுப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

சி. சிவன்சுதன் வைத்திய நிபுணர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal