
பொங்கும் பேரன்பை
நிரூபிக்க முயன்று முயன்று
தோற்றுப்போகின்றனர் மனிதர்கள்…
அதற்கான அவசியம்தான்
என்னவென்று யாரும்
சிந்திக்க மறந்துபோயினர்…
எல்லயில்லா ஒன்றுக்கு
எல்லை வகுக்கும் உள்ளங்களால்
எதைக்காட்டிவிட முடியும்?
தனது தனித்திறனைக்
கொட்டித் தீர்த்துயென் அன்பு
புரிகிறதா என்றால்
முற்றிலும் வெகுளித்தனம்
அற்ற புத்திசாலித்தனத்தின்
உச்சமதுயென மெச்சிக்கொள்ளலாம்…
எதிர்பார்ப்பின்றிச் சூழும்
காற்றின் ஸ்பரிசமாய்
எப்படித்தான் எண்ணுவது?
நெருங்கயவர்க்கான
சிறுசிறு நிகழ்வுகள்
வடிகாலாய் அன்பிற்கு
இடம் விரிக்கலாம்…
எங்கோவொரு மூலையில்
யாருக்காகவோ யாரோ அழும்
கண்ணீருக்கது ஈடாவதில்லை…
வாழ்வதற்காக வடிவமைத்தச்
செயல்களைத்தான் பேரன்பென்று
பிதற்றித் திரிகிறோம்…
எப்போதாவது சமயங்களில்
குழந்தைகளையும் பொம்மைகளையும்
உற்றுப் பாருங்கள்…
உயிரிருப்பதாயெண்ணி அந்தப்
பொம்மைக்கிடும் முத்தங்களில்
ஒன்றுகூடப் பொய்யில்லை…
…கா.ரஹ்மத்துல்லாஹ்…
பதிந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்