எழுதியவர் – கோபிகை

நினைவுகளின் ஊஞ்சலில் விரும்பி ஆடிக்கொண்டிருந்த என்னை, சக பயணியான அந்தப் பெண்ணின் குரல் கலைத்து மீட்டது.

“ஏதாவது சாப்பிடுறீங்களா?”

கையில் ஏதோ ஒன்றை வைத்தபடி கேட்டாள். தலையை மட்டும் ஆட்டி ‘வேண்டாம்’  என மறுத்துவிட்டேன். ஏறிய நேரம் தொட்டு நான் எதையும் சாப்பிடவில்லை என்பதை அவள் கண்டிருக்கவேண்டும். என் மனதில் நர்த்தனமாடிய நினைவின் கோர்வைகள், எதையும் சாப்பிடவிடாமல் செய்திருந்தது. நினைவுகளுக்குள் தரித்திருக்கும் அந்த சுகம் அலாதியானதாக இருந்தது எனக்கு.

பசியை மறக்கவைக்கக்கூடிய வல்லமை அந்த நினைவுகளுக்கு இருந்தது என்பதை நான் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஏனென்றால் அந்த மண்ணில் நான் வாழ்ந்த காலம், என் நினைவில் ஆழவேரோடிக்கிடக்கும் அந்த மணித்துளிகள் எனக்கு பொக்கிசமானவை. எத்தனை தேசத்தைச் சுற்றினாலும் எங்கள் வேர் அங்கேதானே கிடந்தது.

அன்று படம் முடியும் வரை அடிக்கடி மதுவந்தி என்னை நோக்கி பார்வைக் கணைகளை வீசிக்கொண்டே இருந்தாள். அவள் பார்ப்பது புரிந்தாலும் நான் அதைப் பொருட்படுத்தவோ அவளைப் பார்க்கவோ இல்லை. அவள் மீது எனக்கு அப்படி ஒன்றும் அதிக பற்றுதல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. என் மனச்சிம்மாசனத்தில் அவள் இருப்பதை இப்போது உணரும் அளவில் அப்போது நான் உணரவில்லை.

அப்பாவின் உறவுகள் பெரிதாக எங்களுடன் நாட்டம் கொள்வதில்லை. அப்பா, அம்மாவைத் திருமணம் செய்தது அப்பம்மாவிற்கு அவ்வளவாக பிடிப்பில்லை. அப்பாவின் உத்தியோகத்திற்கு ஏற்ற வகையில் சீதனத்துடன் பெண் பார்க்க, அப்பா வேலைக்காக முல்லைத்தீவு வந்த இடத்தில், அம்மாவை விருப்பப்பட்டுத் திருமணம் செய்துகொண்டதாகவும், அதனால் அப்பா வழி உறவுகள் அப்பாவை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அம்மாவின் அம்மா….அதாவது அம்மம்மா சொல்லி நான் கேட்டதுண்டு. அப்பாவின் இரண்டு சகோதரிகளும் வெளிநாட்டில் இருக்க, தம்பி மட்டும் அப்போது யாழ்ப்பாணத்தில் அப்பம்மாவுடன் இருந்தார். அப்பப்பா…அப்பா சிறுவயதாக இருந்தபோதே இறந்துவிட்டதாக, தந்தையின் அன்பை தாங்கள் அதிகம் சுகிக்கவில்லையென அப்பா அடிக்கடி சொல்வார். ஆனால், சித்தப்பா எப்பவாவது அப்பாவிற்கு கடிதம் போடுவார். சித்தப்பாவின் கடிதம் காணும்போது அப்பாவின் முகத்தில் தெரியும் பிரகாசமும் அதைப்பார்த்து அம்மாவின் முகத்தில் தெரியும் வேதனையும்…

 அதுபற்றி அப்போது நாங்கள் சிந்திக்கவில்லை. ஆனால் இப்போது நினைத்தால் அவர்கள் வாழ்ந்த இனிய இல்லறம் பற்றி பெருமிதமாக உணரமுடிகிறது.

அந்த நாட்களில் தான், திடீரென ஒருநாள் அப்பம்மா எங்கள் வீட்டிற்கு சித்தப்பாவுடன் வந்து நின்றா. அவர்களின் வரவு நாங்கள் எதிர்பாராதது. நாங்கள் எதிர்பாராத இன்னொரு விசயமும் அவர்களின் வரவால் நடந்துவிட்டிருந்தது. ஒரு குருவிக்கூடாக கலகலத்த எங்கள் வீடு சோபையிழந்தது.

என் குதூகலமான பொழுதுகளை உடைத்து, என் உள்ளத் தாகங்களை ஓரம் கட்டிவிட்டு, ஒரு இயந்திரத்தைப் போல நான் வாழ ஆரம்பித்தேன்…..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal