பிறந்துள்ள ஜனவரி மாதம் 2022 ஆம் ஆண்டின் முதல் மாதமாக பல விதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான பலன்களை ஜாதக ரீதியாக ஒவ்வொரு ராசிக்காரர்களும் அனுபவிப்பது உண்டு. 

12 ராசியினருக்கும் ஜனவரி மாதத்தில் நிகழ இருக்கும் பொது பலன்கள் என்னென்ன? 

புது வருடத்தில் காத்திருக்கும் துரதிஷ்ட சம்பவங்கள்! யாருக்கெல்லாம் திருமண யோகம் தெரியுமா?? ஜனவரி மாத பலன்கள்

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் சிறந்த மாதமாக இருக்கிறது. புத்தியைப் புகட்டும் புதன் பகவான் சாதகமான இடத்தில் அமர்ந்து இருப்பதால் தெளிவான பேச்சாற்றலை கொடுக்க இருக்கிறார். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கையாளும் வாய்ப்புகள் அமையும். வியாபாரிகள் வழக்கத்தை விட அதிக தனலாபம் காண்பீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய வேலைகளை பொறுப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கிரகங்களின் சுப பார்வை அதிகமிருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தில் கவனம் தேவை. குடும்பத்தைப் பொறுத்தவரை பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. காதலிப்பவர்கள் அடுத்த கட்டத்திற்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு விடா முயற்சி தேவை, எதுவும் உங்களுக்கு சுலபமாக கிடைத்து விடாது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடு செய்வது நல்லது. முடிந்தால் மரக்கன்றுகளை நட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு மாற்றங்களை கொடுக்கக் கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. நிழல் கிரகங்களாக இருக்கும் ராகு கேது முடிவுகளை எடுப்பதில் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுப்பது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் வீண் கர்வத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அதீத தன்னம்பிக்கை எல்லா சமயங்களிலும் கை கொடுப்பதில்லை.

வியாபாரத்தில் இருப்பவர்கள் மாத தொடக்கத்தில் மந்த நிலை இருந்தாலும் போகப்போக வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். புத்தி புகட்டும் புத பகவான் உங்களுடைய விடாமுயற்சிகளுக்கு உரிய பலன்களை வாரி வழங்க இருக்கிறார். கணவன் மனைவி உறவில் அமைதி இருக்கும். காதலிப்பவர்கள் எதையும் ஒருவரிடம் ஒருவர் மறைக்காமல் இருப்பது நல்லது. பொருளாதாரம் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும். செவ்வாய் கேது இணைந்து இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: விக்கினங்கள் தீர்க்கும் விநாயகரை வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். சுறுசுறுப்பு அடைய சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு ஏற்றம் தரும் முக்கிய மாதமாக அமைய இருக்கிறது. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்களை கொடுக்க இருக்கிறார். முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்தவும். ஒருமுறை எடுத்த முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்யாதீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்கள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு. விரும்பிய வேலை அமையும்.

சுக்கிர அருள் இருப்பதால் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொறுமையுடன் இருப்பது பல விஷயங்களை எளிதாக்கி தரும். காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள வலுவான சந்தர்ப்பங்கள் உருவாகும். வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ராசியாதிபதி எட்டாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துவார்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி அனுமன் வழிபாடு செய்து வாருங்கள் நன்மைகள் நடக்கும். வாயில்லா ஜீவராசிகளுக்கு பிஸ்கட்டுகள் போடுங்கள் அதிர்ஷ்டம் உண்டாகும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனுடன் சுக்கிர பகவான் இருப்பதால் சவால்கள் நிறைந்த மாதமாக அமைய இருக்கிறது. இதுவரை நீங்கள் சந்தித்து வந்த போட்டிகள் தொடரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். வியாபாரத்தில் உள்ளவர்கள் நீண்டகால ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் பணியும் நடைபெறும். மாணவர்கள் தங்களுடைய செயல்திறனை முழுவீச்சாக வெளிப்படுத்துவது நல்லது.

கணவன் மனைவிக்கு இடையே கடினமான பல சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். மனதை பக்குவப் படுத்திக் கொள்வது நல்லது. பெண்களுக்கு அதிகம் அமைதி தேவைப்படக்கூடிய மாதமாக இருக்கிறது. காதலிப்பவர்கள் நேர்மறையான அணுகுமுறையால் வெல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், எனவே அக்கறை அதிகம் தேவை.

பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வாரங்கள் நன்மைகள் நடக்கும். வாழ்வில் வெற்றி பெற ஏழை குழந்தைகளுக்கு உதவி புரியுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கியமான திருப்பங்கள் கொண்ட மாதமாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் வெற்றிகளை அடைய குரு அருள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிபுரியும் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சீரான நிலை இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் மகத்தான வெற்றியை பெற விடா முயற்சி தேவை. கணவன் மனைவிக்கு இடையே தோழமை உணர்வு ஏற்படும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை அனுகூல பலன் கொடுக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். காதலிப்பவர்கள் மேலும் தங்களின் காதலில் உறுதியாக மாறுவீர்கள். சாதக மற்ற கிரகங்களின் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்வீர்கள். பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பீர்கள் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: வியாழன் கிழமையில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்க பசுவுக்கு வாழைப்பழம் தானம் கொடுங்கள்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கக்கூடிய மாதமாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்கும். எதிர்கால திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய் தாக்கம் இருப்பதால் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டியதாக இருக்கும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவு செய்ய முனைவீர்கள் மேலும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கடின உழைப்பை காட்ட வேண்டிய காலகட்டமாக அமைய இருக்கிறது.

கடும் விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை திறம்பட சமாளிப்பீர்கள். காதலிப்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி ஒன்று சேரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சுமுகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். சனி மற்றும் புதன் பகவான் சேர்க்கையால் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் முயற்சிப்பது நல்லது.

பரிகாரம்: பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சிப்பது நல்லது. உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களுக்கு பொருளுதவி செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கக்கூடிய மாதமாக அமைய இருக்கிறது. வரவுக்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். நினைத்த இடங்களிலிருந்து பணவரவில் இடையூறுகள் இருக்கும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்வது நல்லது. சுயதொழில் புரிபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களை பெறும் யோகமுண்டு. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வணிக ரீதியான புதிய அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் அதிர்ஷ்டங்களை அனுபவிப்பீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

சுபக்கிரகங்களின் அருட்பார்வையால் மாணவர்களுக்கு மனதை ஒருமைப்படுத்தும் சக்தி உண்டாகும். சுக்கிர பலம் இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். காதலிப்பவர்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை சந்திப்பீர்கள். சுபகாரியத் தடைகள் விலக கூட்டு முயற்சி எடுப்பீர்கள். சூரியன் செவ்வாயுடன் இணையும் பொழுது மாதக்கடைசியில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: காயத்ரி மந்திரத்தை 108 முறை தினமும் உச்சரித்து வாருங்கள் நன்மைகள் பெருகும். நபர்களுக்கு அன்னதானம் செய்ய நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மாதத் துவக்கத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும், அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கிய நகர்வு சிறப்பாக அமைய இருக்கிறது. எடுத்த முடிவுகளிலிருந்து பின் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட காலப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிரடி மாற்றங்கள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள்.

சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதில் முன்னேற்றம் காணலாம். ஒரு சிலருக்கு புதிய தொழில் துவங்குவதில் சாதக பலன் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். காதலிப்பவர்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி திறன் மட்டுமல்லாமல் இதர திறன்களிலும் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிறுசிறு குறைகள் நீங்கும்.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் பெரியோர்களுக்கு வஸ்திர தானம் செய்து வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும் மாதமே இருக்கிறது. சனி பகவான் கொடுக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபட சோம்பலை துரத்தி அடிப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர போராடுவீர்கள். கூட்டு முயற்சி வெற்றியை தரும்.

குடும்பத்தில் அமைதி நிலவ பேச்சில் இனிமை தேவை. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருப்பது நல்லது. காதலிப்பவர்கள் தங்கள் காதலை வலுவாக்க சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கவனமாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ஒருசிலருக்கு அனுகூல பலன் தரும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள் என்பதால் உணவு கட்டுப்பாட்டில் அக்கறை தேவை.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமையில் துர்க்கை அம்மனுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபடுவது நன்மைகளை கொடுக்கும். அதிர்ஷ்டம் பெற எளியவர்களுக்கு போர்வை தானம் செய்வது நல்லது.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்க கூடிய அமைப்பாக இருக்கப் போகிறது. இதுவரை தட்டிச் சென்ற விஷயங்கள் உங்களைத் தேடி வந்தடையும். தொழில் ரீதியான முன்னேற்றம் கடினமாக இருக்கும் என்பதால் கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டி வரும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம். இடமாற்றம் குறித்த விஷயங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கொண்ட லட்சியத்தில் வெற்றி காணும் யோகம் உண்டு. வேலை தேடி அலைபவர்களுக்கு திருப்தியான வேலை அமையும்.

கணவன் மனைவிக்கு இடையே சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது. காதலிப்பவர்கள் வெற்றிபெற உறுதியுடன் போராடுவது அவசியமாகும். மாணவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சியில் தடைகள் ஏற்படலாம் என்பதால் மூச்சு பயிற்சி செய்வது நல்லது. குடும்பத்தில் முக்கிய முடிவுகளை பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் எடுப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கக் கூடிய வல்லமை இருக்கும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. செலவுகளை கட்டுக்குள் கொண்டு வருவது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும். கவலைகள் நீங்க கணவனை இழந்த பெண்களுக்கு உதவிகளை புரிந்து வாருங்கள்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர கூடிய அற்புத அமைப்பாக இருக்கிறது. முடியவே முடியாது என்று நினைத்த காரியங்கள் கூட முடிவுக்கு வரும். பத்தாம் இடத்தில் செவ்வாய் பகவானுடன் ராகு – கேது இருக்கும்பொழுது செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வழக்கத்தை விட லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சட்ட ரீதியான பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. மாணவர்கள் சுபக்கிரகங்களின் ஆளுமையால் வெற்றி வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் இலக்கை நோக்கி பயணிப்பதில் தளர்வை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தகுந்த சமயங்களில் நல்ல நண்பர்கள் உடைய நட்புக்கரம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை நிதானத்துடன் கையாளுவது நல்லது. காதலிப்பவர்கள் சிறுசிறு விஷயங்களை பெரிதாக்காமல் இருப்பது நல்லது. திருமண தடைகள் விலகும், நல்ல வரன் அமையும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் அலட்சியம் காண்பித்தால் தேவையற்ற வீண் விரயங்களை சந்திக்க வேண்டி வரும்.

பரிகாரம்: சோமவாரத்தில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வர நன்மைகள் நடக்கும். பறவைகளுக்கு தானிய தானம் போடுங்கள் நிம்மதி பிறக்கும்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சவால்கள் நிறைந்த மாதமாக அமைய இருக்கிறது. உங்களுடைய திறமையை வெளி உலகிற்கு கொண்டு வரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. மூடிமறைக்கப் பட்ட விஷயங்கள் வெளியில் வரும். உங்களை சுற்றி இருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் பத்தாமிடத்தில் சுபகிரகங்கள் கொண்டிருப்பதால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நெருங்கியவர்கள் மூலம் ஆதரவுகள் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் உயரும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. தேவையற்ற வார்த்தைகள் தேவையற்ற இழப்புகளை கொடுக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த விரிசல்கள் நீங்கும். பொருளாதாரம் முன்னேற்றம் அடைய கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிறுசிறு பிரச்சனைகள் நீங்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி தீர்த்தம் பருகி வர தீராப் பிணி தீரும். அதிர்ஷ்டம் பெற ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வாங்கிக் கொடுங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal