புதிதாக செயலாளராக நியமனம் பெற்றிருப்பவர் மக்களின் மொழியில் செயலாற்றமாட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அவரின் ஆங்கில அறிவு பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒன்று மட்டும் நிச்சயம். அவர் ஊடாக சிங்கள ஆதிக்கம் பலனடையும் தமிழ் மொழிப் பாவனை நலிவடையும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தில், வடமாகாண ஆளுனராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எமது புதிய சிங்கள பிரதம செயலாளர் ஒரு நல்ல காரியத்தைச் செய்துள்ளார். பிரிந்து வாழ்ந்த எம்முள் பலரை ஒருங்கு சேர வைத்துள்ளார். அந்த அளவில் அவர் சார்பான நல்ல “சர்டிபிகெட்டை” இடை நிறுத்திக் கொள்கின்றேன். ஒரு தமிழரின் பெயரைக் குறிப்பிட்டு அவரைத் தான் ஜனாதிபதி நியமிக்கப் போகின்றார் என விளம்பரப்படுத்திய நிலையில் தமிழ் போட்டியாளர்களும் அரச சார்பு அரசியல்வாதிகளும் அந்த நபருக்கு எதிராகக் கொடுத்த புகார்களையும் வாதங்களையும் பொறுக்க முடியாமலே ஒரு சிங்கள அலுவலரை ஜனாதிபதி நியமித்துள்ளார் என பரவலாகக் கூறுகின்ற போதும் ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது இவ்வாறான ஒரு தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்றால் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்த நியமனத்தைக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு தகுதிவாய்ந்த ஆளுமை மிக்க தமிழ் அலுவலர் ஒருவரை ஜனாதிபதி நியமித்திருக்கலாம். ஆளுமை மிக்கவர்கள் தமிழரிடையே இருக்கும் போது தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான ஒரு நியமனத்தைச் செய்திருக்கின்றார்கள் அரசாங்கத்தினர். தமிழ் மண்ணில் பிரதம செயலாளராகத் தமிழ் தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். இம் மாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் மொழியறியாத ஒருவரை நியமித்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களை ஜனாதிபதி அவமதித்துள்ளார், வஞ்சித்துள்ளார் .

தனது அரசியலுக்கு முதல் இடமும் மக்களின் பிரச்சனைகளுக்குக் கடை இடமும் அளித்துள்ளார். மக்களின் மொழியறியாத ஒருவர் நிர்வாகத் தலைவராக இருந்தால் அவர் மற்றவர்களின் மொழிபெயர்ப்பின் அடிப்படையிலேயே கடமையாற்ற வேண்டியிருக்கும். அவருக்கு வரும் தமிழ்க் கடிதங்கள் மொழிபெயர்த்த பின்னரே அவரால் வாசிக்கப்படுவன. ஆனால் அவை சம்பந்தமான பதில்களை அவர் தமிழ் மொழியில் தனது கையெழுத்துடன் அனுப்ப முடியாது.

அவர் சிங்கள அல்லது ஆங்கில ஆவணங்களுக்கே கையெழுத்திடுவார். அக் கடிதங்களுடன் தமிழ் மொழி பெயர்ப்புக்களை அனுப்பாமல் விட இடமிருக்கின்றது. நான் முதன் முதலில் 1979ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றுச் சென்ற போது தமிழ் அலுவலர்கள் பலர் சிங்களத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்குக் கடிதம் அனுப்புவதை அவதானித்தேன். அதனை தொடர்ந்து அவ்வாறு செய்யாமல் தமிழில் அனுப்புங்கள் என்று ஆணையிட்டேன். ஆணைக்குழுவிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

என்னுடைய நண்பராக இருந்த என் கல்லூரியின் பழைய மாணவரான ஆணைக்குழுச் செயலாளரைச் சென்று சந்தித்தேன். அதற்கு அவர் தந்த பதில் என்ன தெரியுமா? எங்களிடம் மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை. நாங்கள் மொழிபெயர்ப்புக்கு உங்கள் கடிதங்களை வெளியாட்களுக்கு அனுப்ப முடியாது. ஆகவே தான் உங்கள் தமிழ்க் கடிதங்கள் இங்கு மண்டிக் கிடக்கின்றன என்றார். 16வது திருத்தச் சட்டம் அப்போது வெளிவந்திருக்கவில்லை. அது 1988ல் தான் வெளிவந்தது. எனினும் சட்டம் என்னவாக இருந்தாலும் தமது அடாத செயல்களை அரச அலுவலர்கள் இவ்வாறு தான் காரியமாற்றி வந்துள்ளார்கள்.

அதன் பின் எமது தமிழ்க் கடிதங்களுடன் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பியதன் பின்னர் தான் பதில்கள் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே புதிதாக செயலாளராக நியமனம் பெற்றிருப்பவர் மக்களின் மொழியில் செயலாற்றமாட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அவரின் ஆங்கில அறிவு பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முன்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தவருக்கு தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தது. இப்போது நியமிக்கப்பட்டவர் அப்படியான ஒருவர் அல்ல. ஒன்று மட்டும் நிச்சயம். அவர் ஜனாதிபதியின் அல்லது மத்திய அரசாங்கத்தின் கையாளாக இருப்பார் என்று அனுமானிக்கலாம். அவர் ஊடாக சிங்கள ஆதிக்கம் பலனடையும் தமிழ் மொழிப் பாவனை நலிவடையும் எனவும் விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அதோடு முன்னைய பிரதம செயலாளர் மொனராகலையில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய போது நான் அவருடன் தொலைபேசியில் பேசி அவரின் சம்மதம் பெற்று அவரைப் பிரதம செயலாளராக வர சிபார்சு செய்திருந்தேன்.

ஆகவே பிரதம செயலாளர் முதலமைச்சரின் சம்மதத்துடனே தான் நியமிக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சம்மதத்தை ஜனாதிபதியின் நியமனரான ஆளுநர் நல்க முடியாது. மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாது விட்டு தான்தோன்றித்தனமாக ஜனாதிபதி தனக்குகந்தவாறு ஒருவரை நியமிக்க முடியாது. இதற்குத் தற்போதைய ஆளுநர் துணை போனாரோ நான் அறியேன். ஆனால் ஆளுநர் சம்மதம் தெரிவித்தாலும் இவ்வாறான நியமனங்கள் அதிகாரப் பகிர்வை அர்த்தமற்றதாக ஆக்குவன. மேலும் அரசாங்கம் எண்ணியது போல் காணி அபகரிப்புக்கள் இனி விரைவாக நடைபெறுவன என்று எதிர்பார்க்கலாம்.

அரசாங்கத்திற்குக் கிட்டியவர்களுக்கு காணிகள் போய்ச் சேர இடமுண்டு. உள்ளூர் நியமனங்களுக்கும் நிதி நிர்வாகத்திற்கும் பிரதம செயலாளரே பொறுப்பாய் இருப்பார். அரசாங்கத்துடன் தொடர்புடைய பிரதம செயலாளர் இன்று பதவியில் இருப்பதால் எவ்வாறான நியமனங்களும் நிதி நிர்வாகமும் நடைபெறும் என்பது கேள்விக்கிடமாயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே புதிதாக நியமிக்கப்பட்ட சிங்கள அலுவலரை நீக்கி தமிழ்ப் பேசும் ஆளுமை மிக்க ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். இந்த நியமனத்திற்கு முழுமனதான எதிர்ப்பை நாங்கள் இந்தக் கூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துகின்றோம் என்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal