பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர் மாரியப்பன் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி அங்கு தொடங்குகிறது.
இதில் பங்கேற்க 9 பிரிவுகளில் 54 இந்திய மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இம்முறையும் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இந்த தொடரின் அணி வகுப்பின் போது இந்திய தேசியக்கொடியை மாரியப்பன் தங்கவேலு ஏந்திச்செல்ல உள்ளார். ஒலிம்பிக் தொடரில் இந்திய கொடியை ஏந்தப் போகும் முதல் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆவார்.
இதற்கிடையில் பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக போட்டி குழுவுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடி வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் தாயாருடன் பேசிய பிரதமர் “உங்கள் தியாகத்தால் மட்டுமே மகனால் சாதிக்க முடிந்தது” என உருக்கமாக கூறினார்.
அதற்கு பதிலளித்த மாரியப்பனின் தாயார் சரோஜா தங்கள் மகன் பதக்கம் வாங்கவேண்டுமென இறைவனை வேண்டுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி மாரியப்பனுக்கு என்ன உணவு பிடிக்கும் என கேட்டதற்கு, நாட்டுக்கோழி சூப் மிகவும் பிடிக்கும் என அவர் பதிலளித்தார்.