‘கிளிநொச்சி ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் தங்களிடம் எவ்வித அனுமதியோ அல்லது அறிவித்தலோ வழங்காது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது எனவும்’ கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்களம் மற்றும் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் என்பன தெரிவித்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை குறித்த பாடசாலையில் பிரபல தனியார் கண்மருத்துவ நிலையத்தினரால் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பார்வை குறைபாடு உள்ளதாக 71 மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு கண் பாதிப்பு: அறிவிப்புக்கு பின்னால் வெளியான அதிர்ச்சி தகவல்

இவர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை மாணவர் ஒருவருக்கு 300 ரூபா போக்குவரத்து செலவுக்கென அறவிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பேரூந்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த தனியார் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 61 மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கண்ணாடிகளின் விலைகளும் குறிப்பிட்டு பணத்தை தயார் செய்யுமாறும் பாடசாலைக்கு கண்ணாடிகளுடன் வருகை தருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் தமது அதிப்தியை வெளியிட்டுள்ளனர். பார்வையில் எவ்வித பிரச்சினையும் இன்றி கற்றல் செயற்பாடுகள் உள்ளிட்ட தங்களின் நாளாந்த செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் தங்களது பிள்ளைகளின் பார்வையில் குறைப்பாடு இருப்பதாகவும் அதற்காக கண்ணாடி பாவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெறுமதியில் கண்ணாடிகளை சிபார்சு செய்து வழங்கப்பட்டுள்ளது. எனவே இதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறித்த மாணவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் தங்களது வியாபார நோக்கத்திற்காக இந் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் தொடர்பு கொண்டு வினவிய போது “ஊடகங்களில் வெளிவந்த செய்தியினை தொடர்ந்தே தாமும் இவ்விடயத்தை அறிந்துகொண்டதாகவும் அதன் பின்னர் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது ”அவர்கள் கல்வித் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டதாகவும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறத் தேவையில்லை என பதிலளித்தாகவும்” தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்களம் இவ்விடயம் தொடர்பில் தாங்கள் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுள்ள செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலைகளில் இலவசமாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளது கடமைகளில் ஒன்றாகும்.

அந்த மருத்துவப் பரிசோதனைகளில் மாணவர்களில் கண்டறியப்படும் அவதானங்கள் தொடர்பில் உரிய மருத்துவ நிபுணர்களுக்கு பரிந்துரை செய்து அரச வைத்தியசாலைகளில் தேவையான மேற்பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கான பொறிமுறைகள் இலங்கையின் பொதுச் சுகாதாரத்துறையின் சிறப்பு அம்சமாகும்.

அவ்வாறு இருக்கையில் சுகாதாரத்துறையினரது அனுமதி பெறப்படாது தனியார் மருத்துவ நிறுவனங்கள் தமது வணிக நலன்களுக்காக அப்பாவி மாணவர்களைப் பகடைக்காய்களாக்க முற்படுவதனை முளையிலேயே கிள்ளி எறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு பின்னால் வியாபார நோக்கமே இருப்பதாக தாம் பலமாக நம்புவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தங்கள் பிள்ளைகளை அரச மருத்துவமனையில் கண் வைத்திய நிபுணரை கொண்டு பரிசோதிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal