எழுதியவர் –

டினோஜா நவரட்ணராஜா

காரைநகர்.

     இலங்கையைப் பொறுத்தவரையிலும் முறைசார்ந்த பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி பெரிதும் அதிகமான அளவில் பின்பற்றப்படும் கல்வி நடவடிக்கையாக கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட தேர்ச்சி பெற்ற குழுவினரால் அமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கலைத்திட்டங்கள், பாடவிதானங்கள் பாடசாலை ஒழுங்காற்றுகள் மற்றும் பரீட்சைகள் என தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கினை பின்பற்றுபனவாக இத்தகைய பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி முறைகள் காணப்பட்ட போதிலும் பல்வேறு கருத்துக்களும் குற்றச்சாட்டுகளும் கல்வியை வழங்கும் இக் நிறுவனங்கள் மீது சுமத்தப்படுகின்றன.

அதிலும் முதலாவதாக “நோயாளிகளை வெளியேற்றி சுகதேகிகளுக்கு சிகிச்சை தரும் வைத்தியசாலை” என்ற பெரும் குற்றச்சாட்டு பாடசாலையின் மீது முன்வைக்கப்படுகிறது. இதனை ஏன் எதற்காக என்று நோக்குதல் அவசியமாகும். தரமுயர்த்தும் செயற்பாட்டில் வெறுமனே நூற் கல்வியையும் பரீட்சை அடைவு மட்டங்களையும் மையப்படுத்தியதாகவே பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் காணப்படும் போது மாணவர்களுடைய தனிப்பட்ட திறன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அதோடு விசேட ஆளுமைக்கான அடையாளப்படுத்தல்களும் இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு வகைப்பட்ட உடல் உள ஆளுமைகள் இருக்கின்ற நிலையில் அனைவருக்கும் பொதுவான கலைத்திட்ட முறைமை சற்றே நெருடலாக இருக்கும் அதேவேளை அம்முறையில் தேர்ச்சி பெற்றவர்களை கற்றவர்கள் என்றும் ஏனையோர் கல்லாதவர்கள் என்றும் பேதப் பாகுபாட்டு நிலைமை உருவாக்கப்படுகின்றது. உண்மையில் இதன் மூலம் எத்தனையோ திறன்கள் மற்றும் ஆளுமைகள் மறைந்து கிடக்கும் எத்தனையோ மாணவர்கள் கல்லாதவர்கள் என முத்திரை குத்த படுகின்றனர். அதோடு மட்டும் அல்லாமல் இன்றைய காலகட்ட பள்ளி செயற்பாட்டில் தேசிய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பாடசாலைகளுக்கிடையில் நிகழும் போட்டித்தன்மையானது மாணவர் விருத்தியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகிறது.
இதன்படி பாடசாலைகளுக்கிடையிலான அடைவு விகிதாசார போட்டியை மையப்படுத்துவதால் பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் பாடசாலை சமூகத்தினால் கவனிப்பாரற்று விடப்படும் அதேவேளை ஆகக்கூடிய நூற்கல்வித்திணிப்புக்களால் பாடசாலை இடைவிலகும் மாணவர் தொகை அதிகரிக்கின்றன. அதோடு கற்றல் கற்பித்தலில் இடை மட்டத்திலோ அல்லது பின்தங்கியோ காணப்படும் மாணவர்கள் பரீட்சை பெறுபேற்றை நோக்கிய நூற் கல்விதிணிப்புக்களால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவைதவிர பாடசாலை காலத்தின் பின்னரான வாழ்க்கை நடைமுறையில் பெரிதும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
ஒரு மாணவனுடைய விருப்பு வெறுப்பு மற்றும் உடல் உள ஆயத்த நிலை தொடர்பிலேயே கற்றல்-கற்பித்தல் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையிலும் வகுப்பறை கல்வியை பிரதானமாகவும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் இரண்டாம் தெரிவாகவும் காணப்படும் அதேவேளை வகுப்பறைச் சூழல் பிள்ளைகளுக்கான தனித்துவத்தை அடையாளப்படுத்துவதற்கு போதியளவு வளங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. உதாரணமாக அதிக அளவிலான மாணவர் தொகை, போதிய அளவு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இன்மை, கற்றல் கற்பித்தல் உபகரணங்க தட்டுப்பாடு, நவீன கற்றல் கற்பித்தல் தொடர்பான போதிய தெளிவின்மை, இறுக்கமான கலைத்திட்டம் போன்றவற்றை குறிப்பிட முடியும்.


அத்தோடு அர்பணிப்பற்ற ஆசிரியர் சேவை அணுகுமுறைகள் பாடசாலை மேலும் பின்தங்கச் செய்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களுடனான ஆரோக்கியமான உறவு நிலையை பேணவேண்டும். வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் புதிய புதிய நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மாணவர்களை கற்றலில் விருப்பத்துடன் ஈடுபடுத்த செய்யும் வகையில் ஆசிரியரின் வகுப்பறை மற்றும் பாடசாலைச்செயற்பாடுகள் அமைய வேண்டும். இவ்வாறிருக்க ஆசிரியர்கள் தவறும்பட்சத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான விலகல் மற்றும் மாணவரது பார்வையில் ஆசிரியர் மிகவும் அணுக முடியாத தொலைவில் இருத்தல் போன்ற எதிர்மறையான விளைவுகள் மாணவர் விருத்தியில் தாக்கம் செலுத்துகிறது.
இவைதவிர பாடசாலையின் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு போதிய அளவு இயல்பான சூழலை தருவதில்லை என கூறப்படுகிறது. அதாவது பாடசாலை விழுமியங்கள் திணிப்புகளாக அல்லாமல் ஆரோக்கியமான முறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஒருவர் மேம்படையச்செய்யும் செயல் நிச்சயமாக கற்றலிலேயே தங்கியுள்ளது. அச்செயற்பாடு திருப்திகரமானதாக அமைதல் அவசியம். இந்நிலையில் பாடசாலையானது பெரிதும் பரீட்சை அடைவு மட்டங்களை மட்டும் நோக்கியதாக இல்லாமல் சமூக பிரஜைகளுக்கான வழிகாட்டியாகவும் இருத்தல் நன்று.


பாடசாலை அதிபர் ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோர்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் கூட இதனை கருத்தில் கொள்ளப்படுவது சிறந்தது. குழந்தைகளது சுயத்தை சிதைக்காத கற்றல் கற்பித்தல் பெறுமதி மிக்கதாக அமையும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பாடசாலைகளில் மாணவர்களை நூற்கல்வித் தேர்வில் புறக்கணிக்கும் நிறுவனமாக அல்லாமல் அனைவருக்குமான கல்வி என்பதோடு ஆளுமையை அடையாளப்படுத்தல் கல்வியாகவும் இருத்தல் நன்று.
பெரிதிலும் பாடசாலை தரமுயர்த்தல் செயற்பாடு, ஏனைய பாடசாலைகளுடன் பெறுப்பேற்று ஒப்பிட்டு பாடசாலை தரத்தை மதிப்பிடல், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டும் முன்னிலைப்படுத்துதல், போன்றவற்றோடு சமூக வகுப்பு பாகுபாடு மற்றும் பிள்ளைகளுக்கான குடும்ப பொருளாதார பின்னணி போன்ற காரணங்கள் மறைமுகமாகவும் வெளித்தெரியும் வகையிலும் மாணவர்களது கற்றல் கற்பித்தலில் பெரிதும் தாக்கம் செலுத்துகிறது. அதோடு பாடசாலைக் கல்வியை முற்றிலுமாக பூரணப்படுத்தி அதன் பின்னரும் பல்கலைக்கழகத்திற்கோ கல்வியற் கல்லூரி தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தான் கற்றவர்கள் என்னும் கருத்து சமூகத்தில் காணப்படுதல் பாரிய பாதக எண்ணக்கரு ஆகும்.
அதோடு உயர் கல்வி நிறுவனங்களுக்குள் உள்வாங்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவு மட்டுப்படுத்தப்படும் போதும் மாணவர்களுடைய பாடசாலைக்கற்றல் பெறுமதியற்றதாகவே பெரும்பாலான இடங்களில் சமூகத்தினரால் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புற பிரதேசங்களில் இதனை அதிகளவில் காணலாம். இவைதவிர இன்னும் பல பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் பெற்றோருடைய சமூக வகுப்பு நிலைகள் மாணவர்களுடைய கற்றலில் பெரிதும் தாக்கம் செலுத்துகிறது. உதாரணமாக நாட்கூலி தொழிலாளி ஒருவரின் மகனிடம் ஆளுமை இருந்தும் பாடசாலை இடைவிலகலோடு குழந்தைத் தொழிலாளர் வகுப்பிற்குள்ளும் தள்ளப்படுகின்றான். இதற்கு மாணவனது குடும்ப பின்னணிபிரதான காரணியாக இருப்பினும் பாடசாலையும் இதற்கு பொறுப்பு கூறவேண்டிய இடத்திலேயே இருக்கின்றது.


ஆக முறைசார் கல்வி நிறுவனமான பாடசாலை இன்னும் பற்பல பல்லியல் குற்றச்சாட்டுகளை தவிர்க்க போதிய கற்றல் கற்பித்தல் முறைகளை கலைதிட்டம் போன்றவற்றை உள்வாங்குவது புத்தாக்க முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான படைப்புகளிற்கு காரணமாகும் அதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு நட்டபுமய வளாகமாகவும் திறம்பட்ட எதிர்கால சந்ததிக்கு அடித்தளமிடும் அரணாகவும் அமையும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal