சிவபெருமானுக்குப் பதினாறு வகையான பூஜைகள் செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அவை;

 1. ஆவாகனம்

இறைவனை வரவழைத்து சிலையில் எழுந்தருளச் செய்வதே ஆவாகனம் எனப்படும். ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக பாவித்து சங்கல்பம் செய்யப்படுகிறது.

 1. ஸ்தாபனம்

இறைவனைச் சிலையில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டுவது ஸ்தாபனம் ஆகும்.

 1. சன்னிதானம்

நாம் வழிபடும் மூர்த்தி, நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜைக்குச் சன்னிதானம் என்று பெயர். இந்தப் பூஜையால் சிவத்தின் அருள் சுரந்து நம்மிடம் நிறைந்து நிற்கும்.

 1. சன்னிரோதனம்

இறைவா என்னிடம் என்றும் கருணையோடு இருக்க வேண்டும் என்று மனம் உருகிப் பிரார்த்தனை செய்வதற்குச் சன்னிரோதனம் என்று பெயர்.

 1. அவகுண்டனம்

கருவறை மூலவர் சிலையினைச் சுற்றிக் கவச மந்திரத்தால் மூன்று கவசம் உண்டாக்க வேண்டும். மூலவர் பூஜைக்குத் தடைகள் வராமல் மந்திரத்தால் அதனை மூட வேண்டும். இதற்காக ஆகம விதிப்படி சோடிகா முத்திரை, காளசண்டீ முத்திரை ஆகிய முத்திரைகளைப் பூஜை செய்பவர்கள் செய்கின்றனர்.

 1. அபிஷேகம்

எண்ணெய், மாப்பொடி, நெல்லி முள்ளி, மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், பால், தேன், தயிர், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம், பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும். அப்போது தேனு முத்திரை காட்டப்படுதல் வேண்டும். கை விரல்களால் பசுவின் மடி நான்கு காம்போடு இருப்பது போல காட்டுவது தேனு முத்திரையாகும். அப்போது இறைவன் இவ்விடத்தில் அமர்ந்து எங்கள் பூஜையை ஏற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

 1. பாத்தியம்

சந்தனம், அருகு, வெண்கடுகு, விலாமிச்சை இந்த 4 பொருட்களையும் பாத்திய நீரில் கலந்து சுவாமி பாதத்தில் இட வேண்டும். ஆன்மாக்களாகிய நாம் சிவபதம் அடையவே இந்தப் பாத்தியம் கொடுக்கப்படுகிறது. அப்போது, நம என்பதோடு கூடிய இருதய மந்திரம் சொல்ல வேண்டும்.

 1. ஆச மனீயம்

ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவல் பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டுச் சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பி இறைவன் பாதத்தில் வைக்க வேண்டும். அப்போது சம்கிதா மந்திரம் சொல்ல வேண்டும். ஆன்மாக்கள் பரமாத்மாவின் முகத்தில் சேர்த்தல் என்ற பாவத்தில் இந்த பூஜை செய்யப்படுதல் வேண்டும்.

 1. அர்க்கியம்

எள், நெல், தர்ப்பை, நுனி, தண்ணீர், பால், அட்சதை, வெண்கடுகு, யவை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி அர்க்கியம் கொடுக்க வேண்டும். மூல மந்திரத்துடன் ஸ்வாகா என்ற மந்திரம் சேர்த்து சொல்ல வேண்டும். அபிஷேகம் ஆரம்பம் – முடிவு, நைவேத்தியம் ஆரம்பம் – முடிவு, தூபம் தீபம் ஆரம்பம் – முடிவு, பூஜைகள் ஆரம்பம் – முடிவு ஆகிய சமயங்களில் அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

 1. புஷ்பதானம்

அழகான பூக்கள், மலர்களால் இறைவனை அலங்கரிக்க வேண்டும். மலர் அலங்காரத்தில் கடவுளை ரசித்துப் பார்க்க வேண்டும். செண்பகம், அருகு, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிரகதி, அரளி, தும்பை ஆகிய 8 வகை பூக்களுடன் அட்சதை சேர்த்து மூல மந்திரத்துடன் வெளவுட் என்ற மந்திரம் உச்சரித்து மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது பேரின்ப வீட்டை அடையச் செய்யும். சுவாமிக்கு பத்மாசனத்தில் ஆவாகனமும், ஆனந்த சயனத்தில் அபிஷேகமும், விமலாசனத்தில் அர்ச்சனையும், யோகாசனத்தில் நைவேத்தியமும், சிம்மாசனத்தில் வஸ்திர சமர்ப்பணமும் செய்ய வேண்டும்.

 1. தூபம்

கருவறை மூலவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபடுவதே தூபம் எனப்படும். இது நமது அஞ்ஞானத்தை கிரியா சக்தியால் அகற்றலாம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அகில், கீழாநெல்லி, சாம்பிராணி, குங்கிலியம் ஆகியவை சிறந்த தூபப்பொருட்களாகும். தூபம் போட்டு இறைவனை வழிபட்டால் பாபம் விலகும் என்பது ஐதீகமாகும். தூபம் காட்டும் போது, ஹிருதய மந்திரத்துடன் ஸ்வாகா என்பதைக் கடைசியில் கொண்டதாக உச்சரிக்க வேண்டும். மூலவருக்கு தூபம் காட்டும் போது, அவர் மூக்குக்கு நேராக காட்ட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

 1. தீபம்

சோடச உபசாரங்களில் தீபம் காட்டுவது என்பது மிக, மிக முக்கியமானது. சுவாமிக்குத் தீபம் காட்டப்படும் போது வழிபட்டால் நம்மிடம் உள்ள ஆணவம் நீங்கி, ஞானம் பெற முடியும். தீபம் ஏற்ற பசு நெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. துணி, பஞ்சு இவைகளில் திரி செய்து தீபம் ஏற்றலாம். தீப வழிபாடு ஞான சக்தியை அதிகரிக்கச் செய்யும். மூலவருக்குத் தீபம் காட்டும் போது, கண்ணுக்கு நேரில் காட்ட வேண்டும். தீப முத்திரை காட்டிய பிறகு மணி அடித்து, மந்திரங்கள் சொல்லியபடி மூலவரின் கிரீடம் முதல் பாதம் வரை தீபம் காட்டப்படுதல் வேண்டும்.

 1. நைவேத்தியம்

சுத்த அன்னம், பாயசம், பொங்கல் ஆகியவை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்க ஏற்றவையாகும். மனிதர்களின் சராசரி குணமாகிய ஆசை, கோபம், மோகம் போன்றவைகளை நாம் அன்னமாக வேக வைத்து இறைவனுக்குச் சமர்ப்பிதையே இது காட்டுகிறது. இறைவனின் 5 முகங்களில் சத்யோஜாதம் முகத்துக்கு எள் அன்னம், வாமதேவத்துக்கு சர்க்கரை அன்னம், அகோரத்துக்கு பாயாசம், தத்புருஷத்துக்கு சுத்த அன்னம், ஈசானத்துக்கு பொங்கல் படைப்பது மிகவும் விசேஷமாகும். இது தவிர ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனுக்கு பிடித்த நைவேத்தியம் மாறுபடும். காய்கறி உணவு வகைகள், பாயாசம், வடை, இனிப்புகள் படைப்பது பொதுவானதாக உள்ளது. இறைவனுக்கு நாம் நைவேத்தியம் படைப்பதால் உலகில் சுபீட்சம் ஏற்படும்.

 1. பானீயம்

இறைவன் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். அது பானீயம் எனப்படும். இதனால் நமது மனதில் உள்ள இவ்வுலக பற்று நீங்கி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 1. ஜெப சமர்ப்பணம்

இறைவனின் மூல மந்திரத்தை 108 தடவை சொல்லி, அதை ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம் செய்வதே ஜெப சமர்ப்பணம் என்றழைக்கப்படுகிறது. ஜெபம், பூஜை ஹோமம் ஆகிய எல்லா புண்ணியைச் செயல்களையும் இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இறைவன் அதை ஏற்றுக் கொண்டு, நமக்கு முக்தி தருவார். பூஜை முறைகளில் நம்மையும் அறியாமல் ஏற்படும் குற்றம், குறைகளை நிவர்த்தி செய்ய இந்த ஜெப சமர்ப்பணம் உதவுகிறது. ருத்ராட்ச மணி கொண்டு மூல மந்திரம் சொல்லி சம்கிதா மந்திரத்தால் முறைப்படி கவசம் செய்து அர்க்கிய தண்ணீரை ஈசனின் வலக்கையில் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

 1. ஆரத்தி

மேள, தாளம் முழங்க, மணி அடித்து ஆரத்தி காட்டப்பட வேண்டும். ஆரத்திக்கான தீபத்தில் பூ போட்டு பார்த்தல், தண்ணீர் தெளித்தல், தட்டுதல், மந்திரம் சொல்லி சுற்றுதல் என்ற 4 வகைகளை செய்தல் வேண்டும். இறைவனுக்கு தீபம் காட்டும் போது முகம், கண், மூக்கு, கழுத்து, மார்பு, கால்கள் என வரிசையாக 3 தடவை சுற்றி காட்டுதல் வேண்டும். தீபத்தில் 16 வகை உள்ளது. பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் காக்கவே மூன்று தடவை தீபாரதனை காட்டப்படுகிறது.

இப்படி 16 வகை உபச்சாரங்கள் ஆகமங்களில் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அனைத்துக் கோயில்களிலும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை, உற்சவம் என்ற அடிப்படையில் 6 வகையான உபச்சாரங்களே செய்யப்படுகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal