
தைவான் மீது படையெடுப்புக்கு சீனா தயாராகிவருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் சீனப் படையெடுப்பிலிருந்து தைவானைப் பாதுகாப்பது அமெரிக்க இராணுவத்தின் அவசரமான மற்றும் முன்னுரிமை கொண்ட பணியாக மாறியுள்ளது என குறிப்பிட்ட அந்த மூத்த அதிகாரி, தைவானை தமது ஆளுமையின் கீழ் கொண்டுவர சீனா சதித்திட்டம் வகுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தைவானின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டுள்ள இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் எலி ராட்னர், இந்த சூழலில் தைவானின் பாதுகாப்பை உறுதி செய்வது அமெரிக்காவின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தைவானின் பாதுகாப்பை வலுப்படுத்துவது என்பது தற்போதைய சூழலில் ஒரு அவசரப் பணியாகும் என குறிப்பிட்டுள்ள அவர், நாம் நமது திறன்களை நவீனமயமாக்குவதுடன் புதிய செயல்பாட்டுக் கருத்துக்களை உருவாக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தைவான் மீதான உடனடி ஆக்கிரமிப்புக்கான எந்த ஆதாரத்தையும் குறித்த பென்டகன் அதிகாரி வெளிப்படுத்தவில்லை என்றே தெரியவந்துள்ளது.
தைவான் அருகே சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகள், பயிற்சிகள் என அனைத்து நடவடிக்கைகளும், படையெடுப்புக்கான ஒத்திகையாகவே பார்க்க வேண்டும் என்கிறார் அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்.
நெடுங்காலத்திற்கு பிறகு முக்கிய அமெரிக்க அதிகாரி ஒருவர், தைவான் மீது சீனா படையெடுக்க இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
இதனிடையே, சமீபத்தில் தான் 750 மில்லியன் டொலர் பெருமதியான ஆயுதங்களை வழங்க தைவானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், 2009ம் ஆண்டு முதல் 32 பில்லியன் டொலருக்கான ஆயுதங்களை அமெரிக்கா தைவானுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.