எழுதியவர் – தமிழ்செல்வன்

நந்தன் ஒரு கல்லூரி மாணவன். மதுரை வாசி . ஒரு விடுமுறை நாளில் அம்மா கத்திரிக்காய் நறுக்கிக் கொண்டு டீவி பார்க்க இவனும் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
டீவியில் ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது
”தாங்குமோ…ஓ… என் தேஹமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்”
.
” வேற ஏதாவது நல்ல பாட்டு வைடா ”
” ஏன்மா , உனக்கு லவ் சாங் புடிக்காதா ”
” எனக்கு லவ் எல்லாம் புடிக்காது. படிக்கற பையனுக்கு லவ் பத்தி பேச்சு எதுக்கு ”
”நான் லவ் பண்ணா தப்பா மா ”
”தப்பு தான் . முதல்ல படிச்சு முடி , வேலைக்கு போ , நிறைய சம்பாதிச்சு சேர்த்து வச்சுட்டு… ”
” ஸ்ட்ரைட்டா ,அறுபதாம் கல்யாணம் தான் பண்ணிக்கணும் ”
” இப்போ யாரையாவது லவ் பண்றியா ”
” எஸ் ”
” யாரு ”
” மீனாட்சி ”
” எந்த மீனாட்சி . இங்க எல்லார் வீட்ல்யும் 2 மீனாட்சி இருக்காங்களே ”
”நாம கோயில் போவோம்ல ”
” சாமியவா லவ் பண்ற ஆண்டாள் கண்ணனை லவ் பண்ண மாதிரி. எப்பவுமே உனக்கு விளையாட்டு தான்டா ”
”’ இல்ல , அங்க ஒரு புள்ள முறுக்கு விப்பாளே , அழகா இருப்பாளே ”
” நான் கோயிலுக்குவானு சொன்னா வரவே முடியாதுனு சொல்லுவியே , நான் தானே உன்னை தாங்கி தாங்கி கூட்டிகிட்டு போவேன் ”
” முதல்ல கோயில் போக புடிக்கல. இப்போ புடிக்குதுமா . ”
” நீ படிச்சுமுடிச்சுட்டு வேலைக்குப் போ , அதுக்கு அப்புறம் இந்த காதல் பத்தி பேசிக்கலாம் ”
அடுத்த வெள்ளிக்கிழமை அம்மா அவனை கூப்பிடவே இல்லை .ஆனால் நந்தன் பின்தொடர்ந்து சென்றான் .
அம்மா தரிசன வரிசையில் நிற்கும் போது இவன் பிரகாரத்தில் உட்கார்ந்து இருந்தான் .. அங்கே தான் மீனாட்சி முறுக்கு விற்பாள் .
எப்போதும் புடவை தான் அணிந்து இருப்பாள். அவளுடைய முகம் . வசீகரிக்கும் கண்கள் , அவள் உடலின் நளினம் . அளவு மீறாத புன்னகை . இப்படி நந்தனுக்கு காதல் வர பல காரணங்கள் இருந்தன .
சில நாட்கள் முன்பு தான் காதலை சொல்லி இருந்தான்.அவளும் அவனை விரும்பினாள்.
நந்தனும் மீனாவும் முன்பு ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தார்கள் .
”உங்க அப்பா அம்மா என்ன பன்றாங்க , மீனா ”
”அப்பா முன்னாடியே இறந்துட்டாங்க , அம்மா இங்க பூக்கடை வச்சிருக்காங்க ”
”எதுக்கு இங்க முறுக்கு விக்கற .”
”எங்க மாமா கோயில்ல பிரசாத ஸ்டால் வச்சிருக்காரு . ஆனா கூடைல எடுத்துட்டு போயி வித்தா தான் லாபம் வரும்னு என்னை விக்க சொல்றாரு ”
”சம்பளம் கொடுப்பாரா ”
” இல்லை நந்து .அப்பப்போ காசு வேணும்னு கேட்டா கொடுப்பாரு . ரெண்டு வேளை சாப்பிட முடியும் ,அவ்வளவுதான் ”
” அந்த மாமாக்கு பசங்க இருக்காங்களா . உனக்கு முறைமாப்பிள்ளைங்கள கட்டி வைக்கறேனு சொல்லி இருக்காரா ”
”அவருக்கு பசங்க இருக்காங்க. பெரிய இடத்துல வேலை செய்யறாங்க. வேற எடத்துல பொண்ணு தேடிட்டு இருக்காங்க. என்னை கண்டாலே அத்தைக்கு புடிக்காது. அவங்க வீட்டுக்குள்ள கூட விட மாட்டாங்க ,நந்து ”
”நான் படிச்சு முடிச்சதும் .வேலைக்கும் சேந்ததும் கல்யாணம் பண்ணிக்கலாம் மீனா . என்னோட அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என்னோட லைன் க்ளியர் .. எங்க அப்பா அம்மாவை எப்படியும் சம்மதிக்க வச்சிடுவேன் , உங்க அம்மா மாமா சம்மதிப்பாங்களா ?”
”என்னோட கல்யாணத்த பத்தி யோசிக்கற நிலைமைல எங்க அம்மா இல்லை. நகை ,பணம் எதுவும் சேத்து வைக்கல .ஒரு நாள் மீனாட்சியம்மன் கண் தொறந்து பாப்பா , நமக்கு விடிவு காலம் வரும்னு மட்டும் சொல்லுவாங்க ”
”எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும் மீனா . நமக்கு கல்யாணம் முடிஞ்சதும் நாம எவ்வளவு சந்தோசமா இருக்கப்போறோம் பாரு ”

அப்போது மீனாவின் மாமா அங்கே வர ” வரேன் ,நந்து ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் .
அவர்களின் சந்திப்பு வாராவாரம் நிகழ்ந்தது . நந்தன் படித்து முடித்தான். ஓரிரு மாதங்களில் வேலைகிடைத்தது . மீனாவிடம் சில மாதங்கள் காத்திருக்க சொன்னான்
டெல்லியில் வேலைக்கு சேர்ந்தான். பத்து நாட்கள் லீவ் கிடைத்தால் தான் 3 நாட்கள் மதுரையில் தங்க முடியும். அந்த 10 நாட்கள் விடுமுறை கிடைக்க 6 மாதம் ஆனது .
மீண்டும் மதுரைக்கு வந்தான். இப்போது அவன் மிகவும் உடல் மெலிந்து இருந்தான். மீனாவுடன் பேச வசதி இல்லாததால் அவனிடம் 6 மாத பரிதவிப்பு இருந்தது.
அன்று மாலை கோவிலுக்கு வந்தான். மீனாவின் அம்மா போட்டிருக்கும் பூக்கடை அங்கே இல்லை. பிரசாத ஸ்டால் பெயர் மாறி இருந்தது. வேறு வேறு ஆட்கள் இருந்தார்கள்.
ஏமாற்றமடைந்தான் .
ஸ்டாலில் விசாரித்தான். ” இந்த வருஷம் நாங்க தான் ஸ்டால் ஏலம் எடுத்து இருக்கோம்.”
”இதுக்கு முன்னாடி இருந்தவர் எங்க போனாரு தெரியுமா ”
”அவரு திருச்சி பக்கம் சமயபுரமோ ஸ்ரீரங்கமோ ஏதோ ஒரு ஊருனு சொன்னாங்க சரியா தெரில ”
நந்தன் மீண்டும் பிரகாரத்தத்தில் உட்கார்ந்தான். அடுத்து என்ன செய்வது ? எப்படி மீனாவைத் தேடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
தூரத்தில் முறுக்கு விற்கும் மீனாவின் குரல் கேட்டது. நந்தன் நிமிர்ந்து பார்த்தான். மீனாவே தான்.
இப்போது அவள் உருவத்திலும் சின்ன மாற்றம்.. நெற்றி குங்குமமும் , மஞ்சள் கயிறும் அவள் திருமணம் ஆனவள் என்று அறிவித்தது.
அவள் புன்னகையுடன் நெருங்கி வந்தாள். இவன் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
” எதுக்கு மீனா இப்படி பண்ணிட்ட . நீ என்னை காதலிச்சது உண்மை இல்லையா ”
” காதலிச்சது உண்மைதான் நந்து .”
” கோயிலுக்கு நான் சாமி கும்பிடாம உன்னை பாக்கத்தான் வந்தேன். எனக்கு பக்தியை விட காதல் தான் உண்மையான உணர்வா இருந்துச்சு . நீ எனக்காக கொஞ்ச நாள் காத்து இருந்திருக்கலாமே மீனா , என் மேல நம்பிக்கை இல்லையா ”
” மாமாவோட காண்ட்ராக்ட் முடிஞ்சு திருச்சிக்கு போயிட்டாரு. அம்மாவுக்கும் உடம்பு சரி இல்லை படுத்த படுக்கையா இருக்காங்க . இங்க புது ஸ்டால்ல வேலை செய்யற ஒருத்தர். என்னை புடிச்சிருக்குனு சொன்னாரு .போன மாசம் கல்யாணம் பண்ணிட்டோம் . எல்லா செலவும் அவர்தான் . ”
” நமக்கு கல்யாணம் நடந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். நீ மறுபடியும் முறுக்கு விக்க வேண்டியது இருந்திருக்காது”
” இது எனக்கு புடிச்ச வேலை தான் நந்து ”
” நீ நிஜமா சந்தோசமா இருக்கியா ,மீனா”
” அம்மாவை பாத்துக்க முடியுது . இப்போ எல்லாம் 3 வேளை சாப்பிடறோம் நந்து. தெய்வபக்தி , காதல் இது எல்லாத்தையும் விட உண்மையான உணர்வு ஒன்னு இருக்கு , அது தான் பசி ”
” வரேன் நந்து ” புன்னகைத்தபடி மீனாட்சி நடந்து சென்று விற்பனையை தொடர்ந்தாள்.
நந்து மௌனமாக இருந்தான். அவன் மீனாவிடம் கேட்பதற்கு வேறு கேள்விகள் இல்லை . பசியை விட உண்மையான உணர்வு வேறு ஏதாவது இருக்கிறதா என்ன ?
**** ******

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal