பெரியபுராணத்தை எழுத ஆரம்பித்த சேக்கிழார், நேரடியாக திருவாரூர் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கவில்லை. அவர் முதலில் குறிப்பிட்டது மனுநீதிச் சோழன் கதையைத்தான். நீதி, நேர்மை இரண்டிலும் சிறந்து விளங்கிய அந்தச் சோழ மன்னனின் பெருமைகளை முதலில் உரைத்த சேக்கிழார், இப்படியான மன்னன் ஆண்ட பூமிதான் திருவாரூர் எனக்குறிப்பிட்ட பின்னர் திருவாரூர் கதைக்குள் நுழைகிறார்.

தமிழர்கள் வாழும் பூமியான தாயகத்தின் வரலாறும் எதிர்காலத்தில் காவியமாக எழுதப்படும் பட்சத்தில் இப்படி நீதி வழுவாமல், எவரின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், துணிந்து நின்று நேர்மையாகப் பல தீர்ப்புகளை வழங்கிய ஒரு நீதியரசரின் பெருமைகள் அங்கே முன்னுரையாகக் கொடுக்கப்படுமேயானால் அது கண்டிப்பாக கௌரவ நீதியரசர் இளஞ்செழியன் அவர்களாகவே இருக்கும்.

மிகவும் குறைந்த வயதில் இந்நாட்டிலே நீதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர் கௌரவ இளஞ்செழியன் அவர்கள். அவருடைய வாழ்வின் ஒரே நோக்கம் நீதியைப் பாதுகாக்கின்றமையே அன்றி வேறில்லை.

எந்தவொரு பதவியைப் பொறுப்பேற்று வருபவர்களும் தங்கள் செயற்பாடுகளால் பின்னாளில் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொள்வார்கள். ஆனால் இளஞ்செழியன் அவர்கள் தனது கடமைகளைப் பொறுப்பேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்தபோதே பலத்த எதிர்பார்ப்புக்களுடன் பொதுமக்களால் வரவேற்கப்பட்டவர்.

அந்த எதிர்பார்ப்புக்களையும் மிஞ்சித் தன் சேவைகளை நிறைவேற்றியும் காட்டியவர். ஒரு சிறுபான்மை இன நீதியரசர் பல்லின மக்களாலும் பாராட்டியும் கௌரவிக்கப்பட்டும் இருந்தார் என்றால் அது மாண்புமிகு இளஞ்செழியன் அவர்களாக மட்டுமே இருக்க முடியும்.

வெறும் சொற்ப காலங்கள் மட்டுமே யாழ் மேல்நீதிமன்ற நீதியரசராகப் பணியாற்றிய இளஞ்செழியன் அவர்கள் யாழ் மண்ணுடன் மிக நெருக்கமாக பல்வேறு காரணங்கள் இருந்தன.

  • மாணவி வித்தியா படுகொலை வழக்கில் ட்ரயல் அட்பார் விசாரணையில் ஒரு நீதிபதியாக இருந்தமை
  • வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகளை முடக்க கடும் சட்டங்களை கொண்டுவந்தமை
  • நகரை உலுக்கிய பரந்துபட்ட கஞ்சாப் பயன்பாடு பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை
  • குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் முதல் குற்றவாளிகள் பெற்றோர் எனத் துணிச்சலுடன் அடையாளப்படுத்தப்பட்டமை
  • விசாரணைகளை வெறும் சாட்சியங்களோடு மட்டும் நோக்காது மனிதநேயத்துடன் நோக்கியமை
  • நீதியை நிலைநிறுத்த பணபலமும் அரசியல் செல்வாக்கும் தேவையில்லை என்று நிரூபிக்கப்பட்டமை
  • பொது மேடைகளில் நகைச்சுவையாகப் பேசிச் சபையை கலகலப்பாகப் பேணும் வல்லமை

என்று பலவற்றைச் சொல்லலாம், நீதிக்கு சாட்சிகளும் ஆதாரங்களும் மட்டுமே தேவை என்ற பொதுவான கோட்பாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான ரீதியிலும் வழக்குகளை நோக்குவதில் சிறந்தவரென இந்நீதியரசரின் பெருமைகள் சர்வதேச ரீதியில் இன்றுவரை பேசப்படுகின்றன. வவுனியா மாவட்ட நீதிபதியாக இவர் இருந்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவரைப் பிடித்து சிறையில் தள்ளாது, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஊடாகக் கலந்துரையாடி சுயதொழில் செய்து பிழைப்பதற்காக ஆடுகள் பெற்றுக் கொடுத்த சம்பவம் மிகப் பெருமெடுப்பில் ஊடகங்களில் பாராட்டபட்டமை மனிதாபிமானம் நிறைந்த நீதித்துறைக்கோர் சான்றாக அன்று அமைந்தது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுத் தண்டப் பணம் செலுத்தப் பணிக்கப்பட்ட சில ஏழைக் குற்றவாளிகளின் தண்டப் பணத்தைத் தானே செலுத்திய சம்பவங்களும் இளஞ்செழியன் அவர்களின் வரலாற்றில் உண்டு.

தன்னுடைய ஓய்வு நேரங்களில் சட்டம், நீதி பற்றி அறிவு குறைந்த பாமர மக்களின் கடிதங்களையும் கவனமாகப் படித்துத் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் ஒருவராகவும் இந்நீதியரசர் இருந்திருக்கிறார். நீதிகளை வழங்கும் ஒருவருக்கு இதயம் கல்லினால் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அவர் வழங்கும் தீர்ப்புகளும் பக்கச்சார்பின்றி சரியானதாக இருக்கும் என்று சொல்வார்கள்.

ஆனால் இவரின் வாழ்க்கைத் தத்துவங்களோ முற்றிலும் வேறுபாடானவை என்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நகரில் நிகழ்ந்த இவரின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் ஹேமச்சந்திரவின் மரணமே சான்று.

தன்னுடைய பதவி, புகழ் என்று சகலதையும் புறந்தள்ளி தன்னுயிரைக் காத்து மரணத்தைத் தழுவிக்கொண்ட ஒரு மெய்ப்பாதுகாவலருக்காய் கதறியழுத ஒருவரின் வரலாறு எங்கும் எதிலும் இதுவரை வந்ததில்லை.

ஏதோ தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதுபோல இறந்தவரின் மனைவியைக் கையெடுத்துக் கும்பிட்ட கைகளை யாழ்ப்பாணம் இன்றுவரை மறந்திருக்காது. “மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ் வந்தேன்.

இரண்டுபேருடன் மட்டும் திரும்புகிறேன்” என்று யாழ்நகரை விட்டு மாற்றலாகிச் சென்றபோது பிரிவுபசார நிகழ்வில் அவர் ஆற்றிய நெகிழ்ச்சியான உரைக்கு அன்றைய ஊடகங்கள் வெகுவாக முக்கியத்துவம் கொடுத்திருந்தன. (ஹேமச்சந்திரவின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு நீதியரசர் இற்றைவரைக்கும் உதவிகள் செய்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது) கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இலங்கை மேல் நீதிமன்ற சங்க தேர்தலில் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டு இலங்கை மேல் நீதிமன்ற சங்க உப தலைவராக நீதிபதி இளஞ்செழியன் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இளஞ்செழியன் அவர்கள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக தற்போது இடமாற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவரின் சேவைகள் மேலும் வளர்ந்து குற்றங்களற்ற புனித நகரமாக வவுனியா மாற வாழ்த்தும் அதேவேளை இளஞ்செழியன் அவர்களின் பிறந்தநாளையும் வாழ்த்திவிடுவோம்.

❤️மழைக்காலத்தில் வெயில் போல

❤️வெயில் காலத்தில் தூறல் போல

❤️இருட்டுக்குள் ஒளிரும் ஒரு சந்தனக்குச்சி போல சில நேரங்களில் சில மனிதர்கள் வந்து போகிறார்கள். ஆழ்மனதில் சம்மணமிட்டும் கொள்கிறார்கள்…இளஞ்செழியன் அவர்கள் போல.

ஆக்கம் – ரஞ்சித் தவா

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal