குறிப்பறிதல் …….

ஒரு கணவனுக்கு தேவையானதை மனைவியோ ,

மனைவிக்கு தேவையானதை கணவனோ ,

வாய் திறந்து கேட்பதற்கு முன்னரே தேவையை தீர்ப்பது தான் நல்ல தம்பதி.

சாப்பிட்டு முடியும் வரை குறை சொல்லாத கணவனும் ,

சாப்பாடு முடியும் வரை கேட்பதற்கு முன்னரே அனைத்துமே எடுத்துக்கொடுக்கும் மனைவியும் கூட நல்ல உதாரணம் தான் ,வள்ளுவர்,வாசுகி போல் .

எனக்கு தெரிந்து ஒரு ஜோடி இருந்தார்கள்.ரொம்ப உன்னதமாக .இதோ !!

அக்கிரகாரத்தில் குடியிருக்கும் பொழுது நண்பரின் அப்பாவும், அம்மாவும்.

கீழும் ,மேலுமாக வீடு .நண்பனின் உடன்பிறந்தவர்கள் நான்கைந்து சகோதரிகள். மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் அவர்களின் குழந்தைகள் எல்லாமே நண்பரின் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.

மாடி முழுவதும் அல்லோலகல்லோலம். பொருளாதாரம், வியாபாரம், அடுத்து எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும்? என்றெல்லாம் கலந்துகட்டி ஓடிக்கொண்டிருக்கும்.

அந்த நேரம் தாத்தா, மற்றும் பாட்டியின் பழைய ஞாபகங்களை தாத்தா பேரக் குழந்தைகளுக்கு சொல்வார்.

அதை கேட்கும் பொழுது அந்த வயதிலும் பாட்டியின் முகமும் சிவந்து விடும். அந்தளவுக்கு வெட்கம் வழிந்தோடும்.

சில மாதங்கள் கழித்து தாத்தாவுக்கு உடல்நலம் சரியில்லை. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்த்தோம்.

மாலையிலிருந்து நள்ளிரவு வரையிலும்கூட உடன் இருந்தோம். அப்போது சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட பெட்பேன் உபயோகியுங்கள் என்று நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் தாத்தா மறுத்துவிட்டார் .

அட போங்கடா!! நான் கடைசிவரையிலும் இவளை அந்த வேலைக்கு பணிவிடை செய்யுமாறு சொல்ல மாட்டேன், என்றவர் குளுக்கோஸ் டியூப் கையில் எடுத்தவாறு பாத்ரூம் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வேட்டியை நன்றாக இருக்கி கட்டிக்கொண்டு மீண்டும் படுக்கைக்கு வந்துவிட்டார்.

எங்கள்அனைவரையும் வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்.

நாங்கள் தயங்கியபோது

வாழ்வும் நன்றாக இருக்கணும் .

சாவும் நன்றாக இருக்கணும் .

யாரையும் கஷ்டப்படுத்த கூடாது

என்றவாறே படுத்துக்கொண்டார் .

நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். அதிகாலை 5 மணிக்கு தாத்தா இறந்து விட்டார். நாங்கள் எல்லோரும் அழுதவாறு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாட்டியின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை.

பேரன் ,பேத்திகள் ,பிள்ளைகள் அண்டை வீட்டார் அனைவரும் எடுத்துச் சொல்லியும் பாட்டிஅழ மறுத்துவிட்டார்.

நாங்கள் தாத்தாவை சுடுகாட்டிற்கு நல்லடக்கத்திற்கு கொண்டு சென்று விட்டோம்.

மறுநாள் காலை தீ ஆற்றும் காரியம். பால் ஊற்ற வேண்டும், என்று நாங்கள் எல்லாம் தயாராகி, தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை எழுப்புவதற்கு முயன்றோம் .

ஆனால் பாட்டி தூக்கத்திலேயே இறந்துவிட்டார்.

ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத பாட்டி, தாத்தாவை ஒருநாள்கூட விட்டு பிரியாமல் அதே 24 மணி நேரத்தில்தாத்தாவுடனேயே சென்றுவிட்டார்.

நிறைய படங்களில் பார்த்தது போல் அல்லாமல் நிஜத்திலும் நான் பார்த்த உண்மை காதல் ஜோடி தாத்தாவும், பாட்டியும் தான்.

சரிதானா ?நான் சொல்றது ?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal