எழுதியவர் – கார்ஜெ

வணக்கம் சொல்லி விட்டு மாணவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள் குந்தவை. ஆங்காங்கே வணக்கம் இடைவெளிவிட்டு காற்றலையின் வழி வந்த வண்ணமாகிப் போனது.

எத்தனை நாள்தான் ‌சொல்லுறது வணக்கம் சொன்னா எல்லாரும் சேர்ந்து ஒன்னா சொல்லுங்கன்னு. ஆசிரியர் சொல்வதை கேட்க கூடாதுனு முடிவு எடுத்திருக்கீங்களா.

“திரும்ப இப்ப நான் சொல்லுற மாதிரி எல்லாரும் சொல்லுங்க” என்று சொல்லி விட்டு, “வணக்கம் ஆசிரியரே” என்று குந்தவை சொல்லவும் மாணவர்கள் அனைவரும் ஒரே வீச்சில் வணக்கத்தைச் சொன்னார்கள்.

இம் இப்பதான் சமத்தா சொன்னீங்க. இனிமேல் தினமும் இதேபோல் தொடர்ந்து காலையில் வணக்கம் சொல்லணும் சரியா என்று சொல்லவும், அனைவரும் “சரிங்க ஆசிரியரே” என்று கூறினர்.

நாளைக்கு மறுநாள் நாடகம் நடிக்கணும்.யாருக்கெல்லாம் விருப்பம் ‌இருக்கோ முன்னாடி வாங்க என்றாள் குந்தவை.

ஆசிரியர் ‌குரல் அடங்குவதற்குள் நிலவை மறைத்த மேகக் கூட்டமாய் ஒட்டுமொத்த வகுப்பும் சுற்றி நிற்க நான், நீ என்று கூச்சலிட்டனர்.

சரி‌ சரி நீங்க எல்லாருமே நடிக்கலாம். முதலில் நான்கு குழுவாகப் பிரிக்கலாம். அதுல யார் யார் என்ன மாதிரியான ஆட்களா நடிக்கலாமுனு பார்ப்போம்.

பாலு என்ற மாணவன் ஆசிரியரே நான் எல்லாரையும் குழுவாகப் பிரிக்கிறேன் என்றான்.

அதற்குள் கீர்த்தி என்ற மாணவன் ஆசிரியரே இவன் குழு பிரிக்க வேண்டாம். இவன் பேட் ஸ்டூடண்ட். வேணுக்குனு தப்புத் தப்பா பிரிப்பான். அதனால வகுப்பு லீடர் குழுவைப் பிரிக்கட்டும் ஆசிரியரே.

மற்ற மாணவர்களும் ஆமாம் ஆமாம் என்று குரலை ஓங்கி ஒலிக்க விட்டார்கள்.

பாலுவிற்கு அழுகையே வந்தது.

குந்தவை அவனைப் பக்கத்தில் கூப்பிட்டு நீ அழுதின்னா அவங்க உன்னப் பத்தி சொல்றது உண்மையாகிடும்.

“பசங்களா ஏன் அவனை கெட்டவனு சொல்றீங்க” ‌என்று கேட்டாள்.

ஆசிரியரே, இவன் எப்பப் பார்த்தாலும் ஏதாவது தப்பு பண்ணிட்டு அடுத்தவங்கள மாட்டிவிடுவான். மத்த கிளாஸ்ல இவன் பண்ற தப்புக்கெல்லாம் யாராவது திட்டும் அடியும் வாங்குவாங்க என்று கீர்த்தி சொன்னான்.

குந்தவை மாணவர்களை அமைதிப்படுத்தினாள்.

“பசங்களா நீங்கள் ‌அனைவருமே நல்லவங்கதான். யாரும் இதுல‌ கெட்டவர்கள் இல்லை. தப்பான செயல், தப்பானவர்கள் என்ற வார்த்தைக்கெல்லாம் உரியவர்கள் நாம் யாரும் கிடையாது. அதனால மாணவர்கள்னா எல்லாருமே நல்ல மாணவர்கள்தான். அதனால் இனி யாரும் பேட் ஸ்டூடண்ட் என்ற வார்த்தையே‌ பயன்படுத்தக்கூடாது. சரியா மாணவர்களே…”

மாணவர்கள் சரிங்க ஆசிரியரே என்று சொல்லிவிட்டு நடிக்க இருக்கும் தலைப்பினைக் கேட்கவும் நாடகத் தலைப்புள்ள பக்கத்தைக் கைகள் புரட்டவும் கண்கள் வாசித்தது.

நல்லாசிரியரும் மன்னனும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x