டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி தான் வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 24) நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் உலகிற்கே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என கணித்திருந்த முன்னாள் வீரர்கள் சிலர் தங்கள் கருத்துகளை மாற்றியமைத்துள்ளனர்.

ஆனால் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ இப்போதும் தனக்கு இந்திய அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் போன்ற உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களாலே விக்கெட் எடுக்க முடியாமல் போன நிலையில், வேற யாரால் விக்கெட்டை எடுத்துவிட முடியும். என்னை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தேர்வு சரியானதாகவே இருந்தது.
ஆனால் பாகிஸ்தான் அணி மிக சிறப்பாக விளையாடிவிட்டது. இந்திய அணி குறை சொல்ல முடியாது. பாகிஸ்தானின் வெற்றிக்கு பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டம் தான் காரணம். இந்திய அணியில் விராட் கோலி மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார், கே.எல் ராகுல் இந்த போட்டியில் சொதப்பியிருந்தாலும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய விதத்தை மறந்துவிட முடியாது.
இந்திய அணி நிச்சயம் தோல்வியில் இருந்து மீண்டு வரும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவே இறுதி போட்டிக்கும் தகுதி பெறும் என நம்புகிறேன் என பிரட் லீ தெரிவித்துள்ளார்.