எழுதியவர் – தயாளன்

அன்னையின்
அணைப்பில் வளர்ந்தது
திண்ணையில்
பாய்போட்டுக் கிடந்தது
சேவல் கூவி எழுந்தது
சேற்று வயலில் நடந்தது
உலக்கையால் அரிசி இடித்தது
உலுத்தம் உருண்டை ருசித்தது
கிழக்கில் சூரியனில் முழித்தது
கிணற்றில் அள்ளிக் குளித்தது
ஓழிந்து பிடித்து விளையாடியது
கிழிந்த
சட்டையோடு கிளித்தட்டாடியது
கோயில் மணி அடித்தது
கொஞ்சும் புறாவை ரசித்தது
காத்தான் கூத்துப் பாத்தது
கைவிளக்கில் படித்தது
ஆடு மாடு மேய்த்தது
ஆடும் மயில் பார்த்தது
காளை கலப்பை பிடித்தது
காடு கரந்தையில் உலன்றது
பசுங்கிளிகள் பேசியது
பள்ளித் தோழிகள் கை வீசியது
பனம் பழங்கள் பொறுக்கியது
பாட்டி பனியாரம் ஊட்டியது
சேலையில் ஊஞ்சல் கட்டியது
சேலன் மாங்காய் தட்டியது
சாலை எங்கும் நடந்தது
பாலைப்பழங்கள் உண்டது
வாழை மரங்களுக்கிடையில்
வான மழையில் நனைந்தது
மாலைப்பொழுதை ரசித்தது
மாட்டுப்பால் குடித்தது
முச்சை அறுந்த பட்டம்தேடி
பச்சை வயல்களில் திரிந்தது
கொவ்வைப்பழங்கள் தின்றது
அவ்வை நிலவிலென நம்பியது
யோகபுரத்தில் படித்தது-காதல்
சுகத்தில் கரைந்தது
தாயத்தில் சண்டை போட்டது-ஈழ
தாயகத்து வானொலி கேட்டது
வேப்பம் குச்சியில் பல் தீட்டியது
சோப்பு நுரையில்
முட்டை காட்டியது
காற்றுவீசி நடந்தது-பாலி
ஆற்றில் மீன் பிடித்தது
கெற்றப்போலோடு திரிந்தது
கிட்டிப்புல்லோடு அலைந்தது
வற்றாப்பளைக்கு போனது
உற்றார் உறவோடு இருந்தது
கொண்டை மரத்தில் ஏறி
பொண் வண்டு பிடித்து வந்தது
அண்டை வீட்டில் நண்பனோடு
சண்டைபோட்டுப் பிரிந்தது
கனமற்ற வாழ்வது-நம்
கைவிட்டுப்போனது
தொலைந்த காட்சிகள் எல்லாம்
இப்போது
தொலைக்காட்சிகளில் மட்டுமே.
த.யாளன்