எழுதியவர் – தமிழ்செல்வன்

என் சிறுவயதில் கோடை காலம் தான் எனக்கு வசந்த காலம். என் தாத்தா கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டிருந்தார் . நானும் தம்பியும் அம்மாவும் சென்னையில் வசித்தோம். என் அப்பா குவைத்தில் பணிபுரிந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரியில் வந்து 10 நாட்களில் கிளம்பிவிடுவார் .
ஏப்ரல் பிற்பகுதியில் அப்பாவின் அப்பா ராமசாமி தாத்தாவின் ஊருக்கு செல்வோம். அம்மாவும் தம்பியும் அம்மா தாத்தா ஊருக்கு கிளம்பிடுவார்கள்.
நான் அப்பா தாத்தாவின் ஊரில் இருப்பேன். அங்கே ஓட்டு வீடு , பக்கத்திலேயே வயல் . ஆற்றில் குளிக்க நடந்தே போகலாம் . மே மாதம் கூட வெயில் சுடாது. நாட்கள் சீக்கிரம் முடிந்துவிடும் .
தாத்தா தனியாகத்தான் இருந்தார். சமையல் செய்வதும் அவர் தான். மூன்று நாட்களுக்கு ஒரு முறை அசைவம் செய்வார்.அந்த சுவைக்கு வேறு உதாரணம் சொல்லவே முடியாது .
காலை ஆறு மணிக்கு டீக்கடை செல்வோம். அங்கு சீக்கிரம் எழுந்து கொள்வதில் மகிழ்ச்சியே. 7 மணிக்கு குளித்து உடனே காலை உணவு . 9 மணிக்கு வயலுக்கு செல்வோம் . தாத்தா , பிறருடன் சேர்ந்து வயலுக்கு நீர் பாய்ச்சுவார் . களை எடுப்பார். வயலில் மதியம் வரை கூடவே இருப்பேன்.
மதியம் வீட்டுக்கு வந்து சமைத்துக் கொடுப்பார். பின் ஆலமர நிழலில் ,கயிற்று கட்டிலில் கொஞ்சம் தூங்கி எழுவோம். மாலையில் மீண்டும் நடப்போம். அப்போது தான் பல கதைகளை சொல்லுவார் , சில கதைகள் புரியாது.
” இப்போ புரியாது , நீ வளந்ததும் யோசிச்சு பாரு புரியும் ” என்பார் .
அவர் நண்பர்களை சந்திப்பார் .சந்தோசமாக பேசிக்கொண்டிருப்பார், அங்கே பலமாக காற்று வீசும்.எனக்கே பறப்பது போல் இருக்கும்.
தேதி என்ன என்பதெல்லம் அப்போது பார்க்க மாட்டேன். ஆனால் நாட்கள் வேகமாக ஓடிவிடும்.
” நாளைக்கு உங்க அம்மா தம்பி எல்லாரும் வராங்க ,அருண் . உன்ன ஊருக்கு கூட்டிட்டு போறதுக்கு வராங்க ” என்றார் ஒருநாள் .
” தாத்தா , அதுக்குள்ள லீவு முடிஞ்சுதா ”
” ஆமாம் , ஜூன் மாசம் தொடங்கிடுச்சு. 2 நாள்ல லீவு முடிஞ்சுடும் . அடுத்த வருஷம் வா, இல்ல காலாண்டு ,அரையாண்டு லீவு உட்டா , ஒரு பத்து நாள் வந்து இருந்துட்டு போ ”
” இங்கே நீங்க எதுக்கு தனியா கஷ்டப்படறீங்க தாத்தா. என் கூட சென்னை வாங்க. அங்கேயும் நாம 6 மணிக்கு எழுந்து டீக்கடைக்கு போகலாம் , நான் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் வாக்கிங் போகலாம். எனக்கு நிறைய கதை சொல்லுங்க . சன்டே மட்டும் நீங்க கறி சமைச்சு கொடுங்க , நாம சந்தோசமா இருக்கலாம் , தாத்தா ”
தாத்தா 2 நிமிடம் எதுவும் சொல்லவில்லை , ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார் . பின்பு பேசினார் .
” அருண் ,உங்க அப்பா உங்க கூட இல்லாம எதுக்கு தனியா வெளிநாட்டுல கஷ்டப்படறார்”
” அவரு வேலை அங்க தான் , அப்போதான் பணம் சம்பாதிக்க முடியும்.”
” உங்க அப்பா வெளிநாட்டுல சம்பாதிச்சா தான் உங்களால சாப்பிட முடியும். நல்லா படிக்க முடியும். ரைட்டா ”
”ஆமாம் ,தாத்தா.அப்பா அப்படிதான் சொன்னாங்க ”
” ஒரு குடும்பத்துல அப்பா அம்மா உழைச்சா தான் அந்த குடும்பம் சாப்பிடமுடியும் , அதே மாதிரி நாட்டுல விவசாயிங்க உழைச்சாதான் மக்கள் எல்லாரும் சாப்பிட முடியும். நானும் ஒரு விவசாயி. நாங்க உழைக்கறத நிறுத்தவே முடியாது. நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா அருண் ”
நான் தலை ஆட்டினேன் .
தாத்தா சொன்னது எனக்கு நன்றாக புரிந்தது .
[முற்றும் ]

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal