எழுதியவர் – இரா.பூபாலன்.

அவளுக்கு டெய்ரி மில்க்
சாக்லேட்டுகள் மீது
கொள்ளைப் ப்ரியம்
பிறந்த தினத்துக்கு வரும்
பரிசுப் பொருட்களையும் பிரிக்காது
உதடுகள் கன்னமெல்லாம்
மரநிறம் படிந்துகிடக்க
முதலில் உண்டு முடிப்பாள்
ஒரு முழு சாக்லேட்டையும்.
ஒரு பெட்டி டெய்ரிமில்க் போதும்
அவளை வசியமாக்க என
வம்பிழுப்போம் அவளை.
பேரங்காடியின்
மேலடுக்குகளில் டெய்ரிமில்க்குகளை
அடுக்கிக் கொண்டிருந்தவளை
நெடுநாட்களின் பின்னர் சந்தித்தேன்.
இழப்புகளின் துரத்தலில்
பகுதிநேரப் பணிக்குச் சேர்ந்திருக்கிறாள்.
நல விசாரிப்புகளின் பின்னர்
நான் கேட்காமலே
இப்போது டெய்ரி மில்க்குகளை
வெறுத்துவிட்டதாகச் சொன்னாள்
எனக்குள் எதுவோ
சரிந்து சரிந்து விழுந்தது