எழுதியவர் – பாரதி கிருஷ்ணகுமார்

இன்றைக்கும் இப்போதும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு என்றுதான் எல்லோரும், விளையாட்டாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். வீரமெனில் எத்தகைய, எவருக்கான வீரம்? பொருத்தமும் பொருளும் கொண்டதா இந்த வீரம்? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. விளையாட்டு என்றாலும் எத்தகைய விளையாட்டு? யாருக்கான விளையாட்டு? விளையாடுகிறவர்கள் யார்? வேடிக்கை பார்க்கிறவர்கள் யார்? வெற்றி, தோல்வி எப்படி தீர்மானிக்கப்படுகிறது? விளையாட்டின் விதிகள் யாவை? என்றெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது.
எதுவாக இருந்தபோதிலும், பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்காக எந்த யோசனையுமின்றி, எந்தக் கேள்வியுமின்றி, எந்த விசாரணையுமின்றி அதைத் தடையின்றி எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென எவரும் நிர்பந்திக்க இயலாது. நிர்பந்திக்கவும் கூடாது. பெரும்பான்மையினரால் கொண்டாடப்படும் மனிதர்கள், கருத்துக்கள், பிம்பங்கள் இவைகளுக்கு எதிராக எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், கண்ணை மூடிக் காலில் விழுந்து வணங்கியே தீரவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் வற்புறுத்துவதும் பாசிஸத்தின் தொடக்கநிலை நோய்க் கூறுகள். தொழுநோய் முதலில் தேமல் போலத்தான் தொடங்குகிறது. பிறகு முற்றி, உறுப்புகள் அழுகி உதிர்ந்து போவது போலவே, சில்லரைத்தனமான சிறுபிள்ளைத்தனமான எதிர்ப்புகளும் பாசிஸத்திற்கே வழி வகுக்கும்.
இந்த உலகில் மாற்றுச் சிந்தனைக்கு என்றைக்கும் எப்போதும் இடம் இருக்க வேண்டும். இடம் இருக்க வேண்டும் என்றால், ஏதோ பெரும்பான்மையின் கருணையினால் ஒதுக்கித் தரப்படுகிற சிறிய இடமென்று பொருளில்லை. தனித்த இடம். தனித்துவமான இடம். உலகம் தட்டையென்று எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தபோது, உலகம் உருண்டை என்று கலிலியோ சொன்னது மாற்றுச் சிந்தனை. மாற்றுச் சிந்தனைகள் இல்லாவிட்டால் உலகில் மாற்றங்களே நிகழ்ந்திருக்காது. மாற்றுச் சிந்தனைகள் என்பது ஒருபோதும் எதிர்மறை சிந்தனைகள் அல்ல. ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுப்பவைகளே மாற்றுச் சிந்தனைகள்.


ஆதியில் நாடோடிகளாகத் திரிந்த மனிதர்கள் எல்லா விலங்குகளையும் வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை உண்டு, தோலை உடுத்தி வாழ்ந்திருந்தனர். பிறகு, நாடோடிகளாய்த் திரிவது நின்று, மனிதன் ஓரிடத்தில் நிலைபெற்று நின்று வாழத் தொடங்கிய பின்னரே, அவர்கள் வேளாண் சமூகமாக உருக்கொண்டனர். அவர்கள் கால்நடைகளை, சில விலங்குகளைத் தம்மோடு வைத்து வளர்க்கவும் பராமரிக்கவும் கற்றுக்கொண்டனர். அதற்கென காடுகளுக்குள் நுழைந்து தேவையான கால்நடைகளை விரட்டிப் பிடித்துக்கொண்டு வருகிற ஒருவன், இயல்பாகவே வீரன் என்று போற்றப்பட்டான். இறைச்சிக்கு வேட்டையாடுவதை மறைந்திருந்து நிகழ்த்திவிட முடியும். வைத்திருந்து வளர்க்க வேண்டுமானால் வேட்டையாடிப் பிடிக்க முடியாது. விரட்டித்தான் பிடிக்கவேண்டி இருந்திருக்கும். அப்படி வீரத்தோடு விரட்டிப் பிடித்துச் சேர்த்த கால்நடைகளால் ஒருவனது உழவுத் தொழில் மேம்படுகிறது. உணவுத் தேவைகள் நிறைவேறுகிறது. அவனிடத்தில் செல்வம் சேருகிறது. அதனாலேயே தமிழில் ‘மாடு’ என்றால் செல்வம் என்று தமிழர்கள் அதனைப் பெயர்ச்சொல்லாகவும் குறித்திருக்க வேண்டும். எவனிடத்தில் செல்வம் சேர்ந்ததோ அவனைப் பெண்கள் விரும்பியிருக்க வேண்டும். அவனுக்குப் பெண் கொடுக்க பெண்ணின் சுற்றத்தார் இயல்பாகவே ஆசைப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, ஆநிரைகளை ஒன்றாகவோ மொத்தமாகவோ கவர்ந்து வரும் ஒருவனுக்கு பெண்ணை மணம் முடித்துத் தரும் பழக்கம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.
‘கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை
மறுமையும் புல்லாளே, ஆயமகள்’
(கலி.முல்லை.103 63-64)
என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது. கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளங்களில் ஒன்று. ஆனால், அதே நடைமுறை இன்றைக்கும் பொருந்துமா என்று யோசித்தால், பொருந்தாது என்பதே எளிய முடிவு.
கவர்ந்து வந்த விலங்குகளை, கால்நடைகளைத் தன் தேவைக்கு ஏற்ப இனவிருத்தி செய்து அவைகளின் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்ட பிறகு வேட்டையாடுதலின் தேவை குறைய ஆரம்பித்தது. அதனாலேதான் பிற்காலத்தில் வேட்டையாடுதல் என்பது அரசர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் வேடிக்கைக்கும் விளையாட்டுக்குமான செயலாக இருந்ததேயன்றி, அது அடிப்படைத் தேவைகளைச் சார்ந்ததாக அமையவில்லை.
விலங்குகள் இயற்கையை அழித்து உண்ணும் பண்புடையவை. தனக்கு பசிக்கிற போது ஒரு விலங்கு தான் உண்ணும் தாவரத்தையோ அல்லது இன்னும் ஒரு விலங்கையோ அழித்து உண்ணும். தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்யும், சேமித்து வைக்கும் பண்பு ஆகப்பெரும்பான்மையான விலங்குகளுக்கு இல்லை. ஒரு சிங்கத்திற்கு மான் இறைச்சி எத்தனை விருப்பமானதாக இருந்த போதும் ஒரு சிங்கம் மான் பண்ணை வைத்துக்கொள்வதில்லை. ஆனால், மனிதன் அப்படியில்லை. அதையே, “இரை போடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடே..” என்று சுருக்கமாகச் சிறப்புறப் பாடினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
நவீன விஞ்ஞானம் இனவிருத்திக்கு மேலும் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்த பிறகு, வேட்டையாடி விலங்குகளைச் சேகரிக்கும் அவசியம் மனிதனுக்கு எப்போதோ இல்லாது போய்விட்டது.
இன்றைக்கு மாறிய காலச் சூழலில் ஏறுதழுவுதல் என்னும் அசலான வீரவிளையாட்டே ஜல்லிக்கட்டு என உருமாற்றம் கொண்டிருக்கிறது. பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இது நிகழ்த்தப்படுகிறது. இஃது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. அதே சமயம் இன்றைக்கும் அது வீரவிளையாட்டா? பண்பாட்டின் அடையாளமா? முந்தைய அளவுகோல்கள் இன்றைக்கும் இதற்குப் பொருந்துமா..? என்றும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
பத்து ஏக்கர் நிலமும் பம்புசெட்டும் என்று நன்செய் விவசாயம் செய்துகொண்டிருக்கும் எந்த நிலவுடமையாளரும் மாடுபிடிக்கக் களத்தில் இறங்குவதில்லை. எனில், அவர்களில் யாருமே வீரர்களே இல்லை என்று பொருள் கொள்ளுதல் தகுமா? அவர்கள் மாடுகளை வளர்க்கிறவர்களே தவிர பிடிக்கிறவர்கள் இல்லை. பிடிக்கிறவர்கள் எல்லோருமே ஏதுமற்ற விவசாயக் கூலிகள். ஒரு விதத்தில் மாடுபிடிக் களமே, வர்க்கப் போராட்டத்தின் களமாகக் காட்சி தருகிறது. ஆம். இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்குமான யுத்தம். இல்லாதவன் தன்னையே களத்தில் நிறுத்துகிறான். இருக்கிறவன் தனக்குப் பதிலாக தான் வளர்க்கும் மாட்டை நிறுத்துகிறான்.
இதுவே, இந்த விளையாட்டு சமமற்ற விளையாட்டு என்பதைப் புலப்படுத்துகிறது. பட்டியில் அடைக்கப்பட்டு வாடிவாசலின் வழியே வெளியே வரும் ஒரு மாட்டுற்கு எதிராக முப்பது நாற்பது பேர் நிற்பதும் விளையாட்டின் சமம் அற்ற தன்மையையே காட்டுகிறது. தங்கள் சாதிப் பெருமையை, நிலவுடமையை, அதிகாரத்தை, ஆணவத்தை வெளிப்படுத்தவும், நிலைநிறுத்திக் கொள்ளவும்தான் இங்கு பலர் மாடு வளர்க்கிறார்கள். சாதிய அடையாளங்களைப் பாரதூரமாக மிகச் சிறிதேனும் காப்பாற்ற உதவும் எந்த ஒன்றும் அது எத்தனைப் புனிதமாகப் போற்றப்பட்ட போதும், அது தகர்க்கப்பட வேண்டும்.
அதனாலேதான் மேல் சாதிக்காரர்கள் கூடி வளர்க்கும் கோயில் மாட்டை மாடு பிடி களத்தில் யாரும் பிடிக்கக் கூடாது என்கிற தடை எப்போதும் இருக்கிறது. தனிப்பட்ட மேல்சாதிக்காரர் வளர்க்கிற மாட்டை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பிடித்தால் அவனைக் கொல்வதும் கடந்த காலங்களில் பெருமளவு நடந்திருக்கிறது. கொல்வதற்கு மாட்டின் கொம்புகளைத்தான் ‘மகராசர்கள்’ பயன்படுத்தி இருக்கிறார்கள். மாடுபிடிக்கும் களத்தில், ஒருவன் மாடு குத்தி இறந்தால் குற்றநடைமுறைச் சட்ட வழக்கு ஏதும் இல்லை என்பது மிக நீண்ட காலமாய் இருந்த நடைமுறை. இந்த நடைமுறை பல கொலைகளுக்கு கடந்த காலத்தில் வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. வாடிவாசலின் வழியே மாடுகளை வெளியே அனுப்புகிற போது கூட வளர்ப்பவரின் சாதி பார்த்து, அந்த சாதியை மாட்டுக்கு ஏற்றி, சாதிப்படி நிலையின் ஆதிக்க வரிசையிலேதான் மாடுகள் அவிழ்த்து விடப்படும் என்பதும் அவமானகரமான உண்மை.
விவசாயக் கூலிகளான மாடுபிடிக்கும் இளம் வீரர்களின், குடும்ப நிலைமைகள் எப்போதும் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்ததில்லை. மாடுபிடிக்கும் வீரர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்று அவரது மனைவியிடம், “உங்கள் கணவர் மாடுபிடிப்பதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்..?” எனக் கேட்டபோது, வட்டார வழக்கில் திகழும் ஒரு கலப்படமில்லாத கெட்ட வார்த்தையோடு உரையாடலைத் தொடங்கினார். “அவனுக்கென்ன அவன் ஆம்பளைன்னு காமிக்க போயிட்டான்… நான் பொம்பள, மூனு புள்ளைகள வச்சிக்கிட்டு எங்க போயிக் காட்டுவேன்… மாடு முட்டி செத்துப் போயிட்டான்னா, குடும்பம் தெருவுல நிக்குமே… அது வீரமா..? நெசம்மா வீரம்னா, வேலைக்குப் போயி சம்பாதிச்சு கஞ்சிக்குத் துன்பம் இல்லாம காப்பாத்துறதுதானே வீரம்… இருக்குறவன் அஞ்சு ரூபாயும் பத்து ரூபாயும் வேட்டிலயும் துண்டுலயும் வச்சு, மாட்டுக்கொம்புல சுத்தி விடுறான்… அத எடுக்கப்போயி இவன் குத்துப்பட்டு செத்தான்னா குடும்பம் ஒண்ணுமில்லாம நிக்குமே.. வரட்டும் அவன், என் தாலிய அறுக்கப்போனவன் தாலிய, நான் அறுக்குறேன்…” என்று மீண்டும் ஒரு கெட்ட வார்த்தையோடு நிறைவு செய்தார்.
இது தமிழர் பண்பாடு, வீரவிளையாட்டு என்று பெருமை பேசுகிறவர்கள் நிலமற்ற ஏழை விவசாயியான மாடுபிடிக்கும் இளைஞனுக்கு பெண் கொடுப்பார்களா? ஒருபோதும் இல்லை. கல்லூரிகளில் படிக்கும் நவநாகரீகமான தமிழச்சிகள் யாராவது அந்த வீரர்களைக் கல்யாணம் செய்துகொள்ள இன்றைக்கு முன்வருவார்களா? எப்போதும் இல்லை. மாடுபிடி களத்தின், பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் பண்பாட்டுக் காவலர்கள், தங்கள் பெண்பிள்ளைகளை அந்த வீரர்களுக்கு மணம் முடித்துக் கொடுப்பார்களா? என்றைக்கும் இல்லை.
ஜல்லிக்கட்டுக்கென வளர்க்கும் காளைகளையோ, விரல்கூடப் படாமல் வளர்ப்பார்கள். அதை எந்த வேலைக்கும் பயன்படுத்தமாட்டார்கள். அதன் இயற்கைத் தேவைகளையும் கூட அதற்கு அனுமதிப்பதில்லை. களத்தில் இறக்குவதற்கு முன்பு அதற்குப் போதையூட்டும் பொருட்களைத் தந்து வெறி ஏற்றுவதும் வாடிக்கையான பழக்கம்தான். எனவே, களத்தில் இறக்கிவிடப்படும் ஒரு மாடு வெற்றிபெறும் வரை இயற்கையான வாழ்க்கையை ஒருபோதும் வாழ்ந்துவிட முடியாது. ஜல்லிக்கட்டு நடைபெறும் களத்தில், அந்த விளையாட்டின் விதிகளும் சமம் அற்றவை. ஒரு மாட்டின் பின்னே நாற்பது ஐம்பது பேர் விரட்டிப்போவதும், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒரு மாட்டைப் பிடித்துக்கொண்டு இருந்துவிட்டால் மாடு தோற்றதென்றும், மனிதன் வென்றான் என்பதும் ஏற்புடைய விதிமுறைகள் அல்ல. அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்தும், பேரிரைச்சலைக் கேட்டும் அஞ்சி மிரண்டு ஓடுவதைத் தவிர, அந்த பரிதாபமான விலங்கு தன் மீது ஏற்றப்பட்ட எந்த சாதீய அடையாளங்களையும் அறிந்து கொண்டதில்லை.
இந்திய விவசாயம் கால்நடைகளையும் மனித உழைப்பையும் முற்றிலுமாகச் சார்ந்திருந்த போது எந்த கிராமத்திற்குப் போனாலும் கழுத்து மணிகள் குலுங்க மாடுகள் அணிவகுத்துப் போவதை ஒரு தலைமுறை பார்த்திருக்கிறது. உழவுக்கும் அறுப்புக்கும் எந்திரங்களை அனுமதித்த பிறகு, மரபான இந்திய விவசாயத்தில் கால்நடைகளின் பங்கு குறைந்து போயிற்று. ஒரு மாட்டை வளர்ப்பதற்கு எவ்வளவு தீவனம், எவ்வளவு தண்ணீர், எவ்வளவு கருணை, எவ்வளவு அன்பு வேண்டுமென்பதை அறியாமல் உணராமல் மாடுகளை வளர்த்துவிட முடியாது. விவசாயத்திற்கு மாடுகள் பயன்படாத காலம் வந்துவிட்ட பிறகு, சாதீய அடையாளங்களைக் காப்பதற்கு மட்டும் ஜல்லிக்கட்டு மாடுகள் பயன்படும் என்றால் அதை எதிர்ப்பதைத் தவிர வேறு மாற்று வழியில்லை.
எல்லாம் சங்க காலத்தில் இருந்தது. தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்தே இருந்தது. தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருந்தது என்பதனால், ஜல்லிக்கட்டு இப்போதும் இருக்க வேண்டும் என்றால், சங்கத் தமிழர் வாழ்வில் சாதி இல்லாமல்தானே இருந்தது, சாதி இல்லாமல் வாழச் சம்மதமா..? சங்கத் தமிழர்கள் காதலித்து தானே கல்யாணம் செய்துகொண்டார்கள், அதையே கடைப்பிடிக்கலாமா..? சங்கத் தமிழர் வாழ்வில் பெண்களின் கழுத்தில் தாலி இருந்ததில்லையே, கழற்றிவிடலாமா..? ஒப்புக்கொள்வீர்களா..? பழமைகளைப் போற்றுவது, பழமை சார்ந்த குறிப்புகளை, செய்திகளை ஆவணப்படுத்திக்கொள்வதில் பிழையில்லை. ஆனால், தங்கள் அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும் இசைவானவைகளை மட்டும் காப்பாற்றிக்கொண்டு தங்களுக்கு பொருத்தமற்றவைகளை நிராகரிப்பது நேர்மையற்ற செயல். தங்களுக்கு ஏற்றவைகளை மட்டுமே கடைப்பிடிப்பதும், அதன் வழியே தங்களது சாதி அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதுவதையும் ஏற்கவே இயலாது.
எனில், ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடந்த மாபெரும் எழுச்சியை நீங்கள் நிராகரிக்கிறீர்களா? என்று ஒருவர் கேட்கக் கூடும். அதனையும் தெளிவுப்படுத்தி விடுகிறேன். ஜல்லிக்கட்டுக்கான இன்றையத் தலைமுறையின் போராட்டத்தை, போர்க்குணத்தை, வீரியத்தை நான் மனதார வாழ்த்தினேன். வாழ்த்துகிறேன். ஆனால், அந்தப் போராட்டத்தின் கருப்பொருளாக ஜல்லிக்கட்டு மட்டுமே இருந்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. உண்மையில் இந்த வாழ்க்கை இந்தத் தலைமுறைக்கு விதித்த, பல நூறு பிரச்சனைகளோடு மல்லுக்கட்டியக் கோபம்தான் ஜல்லிக்கட்டுக்கானப் போராட்டமாக வெளிப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்வது போல வெளியில் தெரிந்த பனிக்கட்டிதான் ஜல்லிக்கட்டு போராட்டம். அது உள்ளுக்குள் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஒரு குமுறும் எரிமலையை கர்ப்பத்தில் சுமந்திருந்தது. மின்விளக்குகள் இல்லாதபோதும் அலைபேசிகளின் ஒளியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்தனர். அந்த ‘மெரினா’வுக்குள் எல்லா நேரமும், அனைத்து வயதுப் பெண்களும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் சென்று திரும்பினார்கள் என்பதுதான் தமிழனின் பண்பாட்டு அடையாளம். காவல்துறையே இன்றி, ஒரு பெரும் இளைஞர் கூட்டம் சுயக்கட்டுப்பாடோடு நாட்கணக்கில் கூடி நிற்க முடியும் என்று நிலைநிறுத்தியது தமிழனின் வீரம்.
அரசும் அதிகார வர்க்கமும் அதிர்ந்து போனது அந்தக் கூட்டத்தைப் பார்த்து மட்டும் அல்ல. கூட்டம் வைத்த கோரிக்கைப் பற்றியும் கூட அல்ல. மாறாக, அந்தக் கூட்டம் தன்னைத்தானே ஒழுக்கமுடன் காப்பாற்றிக்கொண்டு சட்டம் ஒழுங்கையும் சிறப்புற பேணிக்காத்தது என்பதே அதிகார வர்க்கத்திற்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது. எனவே, அதை சீர்குலைக்க வேண்டுமென்று அது திட்டமிட்டதையும், நடத்திய நாடகத்தையும் அனைவரும் அறிவோம். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றத்தின், அரசின் அனுமதி வந்து சேர்ந்தது. போராட்டமும் முடிவுக்கு வந்தது. அறவழியில் நின்று போராடியவர்களின் மீது போடப்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் இருப்பது வேதனைக்குரியது. அந்த வழக்குகளை அரசு திரும்பப் பெற்றே ஆக வேண்டும் எனக் கேட்பதும் நம் எல்லோரின் கடமை. அன்றைக்கு அடக்குமுறைகள் அவிழ்த்துவிடப்பட்டதும், இன்றைக்கு வழக்குகள் நீடிப்பதும் எதிர்காலத்தில் இத்தகைய பேரெழுச்சிகள் உருவாகக் கூடாது என்பதைத் தவிர வேறில்லை.
ஜல்லிக்கட்டுக்கென நடந்த அந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்ற பலர், ஜல்லிக்கட்டைப் பார்த்ததே இல்லை. அது எப்படி நடக்கும் என்றும் அதன் உள்ளே இயங்கும் நுட்பமான சாதி, வர்க்க அரசியல் குறித்தும் அறிந்தவர்கள் இல்லை. எனவேதான், அந்தப் போராட்டம் தொடர்ச்சியற்றதாக நிற்கிறது. ஜல்லிக்கட்டை விடவும் மாணவர்களின், இளைஞர்களின் வாழ்க்கையைப் பெரிதும் சீர்குலைக்கும் பிரச்சனைகளை முன் வைத்து அவற்றை தீர்க்கும் பேரியக்கங்கள் உருவாகாமல் போனது. போர்க்குணம் சிறந்தது. உரிமைகளுக்காக போராடுவதும் சாலச் சிறந்தது. ஆனால், எதற்காக எதன் பொருட்டு யாருக்காக எவ்வாறு எவ்விதத்தில் போராடுகிறோம் என்கிற ஆய்வும், தெளிந்த அறிதலும்தான் போராட்டங்களின் நிலைத்த வெற்றிக்கு துணை செய்யும். இல்லையேல், வாடிவாசலை விட்டு வெளியே வந்ததும் திகைத்து மிரண்டு யாரையேனும் குத்திச் சாய்த்துவிட்டு திசை தெரியாமல் ஓடுகிற விலங்கின் தடுமாற்றமே மனிதருக்கும் வாய்க்கும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal