எழுதியவர் – தமிழ்செல்வன்

என் தாத்தா ஒரு 20s Kid . அவருடைய காலத்தில் ‘தல ‘ பி யு .சின்னப்பா , ‘தளபதி ‘. எம் கே டி . பாகவதர் . தாத்தா பி. யு. சி யின் தீவிர ரசிகர் . தாத்தாவின் தொழில் ஜோசியம். என் ஜாதகம் பார்த்தோ அல்லது சின்னப்பாவின் படத்தை பார்த்தோ எனக்கு அந்த பெயரை வைத்தார் .
என் பெயர் ”ஜகதல பிரதாபன் ”.
சென்ச்சுரியை தவறவிட்ட தாத்தா சில ஆண்டுகளுக்கு முன் தான் சிவலோக பதவி அடைந்தார் .
ஒரு நாள் அவருடைய பெட்டியை தேடிப்பார்த்தோம், அவருடைய மகன் , மகள்கள் , மருமக்கள் , பேரக்குழந்தைகள் , எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு 40 பக்க நோட்புக்க்கில் ஜாதகம் , அவர்கள் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் கூட முன்கூட்டியே கணித்து துல்லியமாக எழுதி இருந்தார் , ஆச்சரியமாக இருந்தது .அவர்களின் ஆயுள், திருமண தேதி , கணவன் /மனைவியின் பெயரின் முதல் எழுத்து என்று தீர்க்கதரிசன குறிப்புக்கள் நிரம்பி இருந்தன .
என் பெயரில் இருந்த 40 பக்க நோட்டை எடுத்து பிரித்தேன். முதல் பக்கத்தில் நான் பிறந்த நேரம், ஜாதக கட்டம் இருந்தது 2ஆவது பக்கத்தில் ஒரே ஒரு வார்த்தை.38 பக்கங்கள் வெறுமனே எதுவும் எழுதப்படாமல் காலியாக இருந்தது.
இரண்டாவது பக்கத்தில் ” தேவ ரகசியம் ” என்று எழுதி இருந்தார் .
. நாங்கள் வசிப்பது பூங்குளம் , கிராமம் . மலையடிவாரத்தில் எழில் கொஞ்சும் ஊர் . அங்கே JTP fancy ஸ்டார் என்ற அழகிய கடை . அதன் உரிமையாளர் நான் .
கல்லூரி மாணவ மாணவியர் காலை 8 to 9, மாலை 4 to 8 இங்கே படையெடுப்பார்கள் . மற்ற நேரத்தில் ஈ , காக்கை கூட வராது .
சேல்ஸ் கேர்ள் , நிர்மலா . மரியாதையான நேர்மையான பெண் .
இதற்கு முன் ‘குமரேசன் ‘என்பவன் இருந்தான். அவன் பக்கத்து ஊர்க்காரன். தன் வறுமையை சொல்லி வேலை கேட்டுவந்தான். சேர்த்துக்கொண்டேன். பின்னாளில் கடைக்கு வரும் பெண்களுக்கு ஹீரோவாகி விட்டான் .
அவன் லீவு போடும் நாளில் கூட ” குமரேசன் சார் இல்லையா ” என்று விசாரிப்பார்கள் .
2 வருடம் பணி புரிந்து திடீர் என ஒரு நாள் மாயமானான். அன்று என் கடையில் இருந்த 78 ஆயிரம் ரூபாயும் மாயமானது . நான் அவனை கொலைவெறியுடன் தேடிக்கொண்டு இருக்கிறேன் .
நான் மிகவும் வெறுக்கும் பெயர் ” குமரேசன் “‘
நன்றாக விசாரித்து நிர்மலாவை வேலைக்கு சேர்த்து இருக்கிறேன் .
எங்கள் கடைக்கு 2 பக்கமும் ஜவுளிக்கடைகள். என் பள்ளி நண்பர்கள் தான் அதன் உரிமையாளர்கள்.
எங்கள் கடையில் இருந்து சிறிது தூரத்தில் காட்டுப் பகுதி . அங்கே அல்லி மலர்கள் நிறைந்த குளம் ஒன்று இருக்கிறது . எங்கள் ஊரின் பெயர்க்காரணம் அந்த குளம் தான் .
ஆனால் அந்த குளத்தை பற்றி பல அமானுஷ்ய கதைகள் உலவுகின்றன . நான் அங்கு ஒருநாள் சென்று காணாமல் போய்விட்டேன். காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடினார்கள் 2 நாட்களுக்கு பிறகு அதே காட்டில் உறங்கிய நிலையில் மீட்கப்பட்டேன் . அங்கே என்ன நடந்தது தெரியுமா ? சொல்கிறேன்.
சாகச விரும்பியான நான் இரவு சுமார் 8.30 மணிக்கு அந்த குளத்திற்கு சென்றேன். பௌர்ணமி இரவு , அங்கங்கே அல்லிப்பூக்கள் .சுற்றிலும் பல்வேறு பூக்களின் நறுமணம் . இனிமையான தனிமை.
எனக்கு குளிக்க வேண்டும் போல் இருந்தது.ஆடை கலைந்து விட்டு குளித்தேன் . ஒரு மரத்திற்கு பின் சென்று அதே உடைகளை மீண்டும் அணிந்து கொண்டு இருந்தேன். மனித நடமாட்ட சத்தம் கேட்டது . பெண்களின் கொலுசுகள் .பெண்களின் குரல்கள் . பெண்களின் சிரிப்புகள். யாரோ நீரில் குதிக்கும் சத்தம் கேட்டது
ஆடை அணிந்துவிட்டு அங்கே வந்து பார்த்தேன். குளத்தில் அலைகள் நீந்தின.ஒரு பெண்ணின் ஆடைகள். ஆபரணங்கள் பக்கத்தில் பாறையில் வைக்கப்பட்டிருந்தன.
குளத்தில் இருந்து திடீரென ஒரு பெண் வெளிப்பட்டாள்.அவள் 100% எந்த ஆடையும் அணியவில்லை .
நிலவின் ஒளி அவள் உடலை பளிங்காக்கிக் கொண்டிருந்தது. நான் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தேன்.என் நுரையீரல் ஆக்சிஜென் வேண்டுமென்று போராடியது. இதயம் சரவெடிபோல் துடிப்பது எனக்கே கேட்டது .
வேறு ஆணைக்கூட இதற்கு முன் இந்த நிலையில் நான் பார்த்தது இல்லை .
அவள் ஆடைகளை எடுப்பதற்காக வந்து என்னை நேருக்கு நேர் பார்த்தாள் . அவள் நிச்சயம் சாதாரணப் பெண் அல்ல . அவள் முழுவதும் ஆடையின்றி நின்றாலும் அவள் கண்களின் அழகைப் பார்த்து மீண்டு வரவே எனக்கு ஆயிரம் ஆண்டுகள் வேண்டி இருக்கும் .
அவள் சட்டென மயங்கி நிலத்தில் சாய்ந்தாள்.
நான் செய்வது அறியாது தவித்தேன்.முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தேன். பயனில்லை . அவள் ஆடைகளை அவளுக்கு அணிவிக்க முயன்றேன்.எது எப்படி போடுவது என்று கூட புரியவில்லை . அவை சரித்திர காலத்து உடைகள் .
என் கடைக்கு அருகில் இருக்கும் துணிக்கடைக்கு ஓடிச்சென்றேன். ஒரு எளிய மேல்நாட்டு உடை ஒன்று கடனுக்கு வாங்கிவிட்டு குளம் வந்தேன்.மயங்கிய நிலையில் இருந்த அவளுக்கு போட்டுவிட்டேன்.
மீண்டும் முகத்தில் தண்ணீர் தெளித்தேன். இப்போது கண் திறந்தாள். அவள் கண்களில் கண்ணீர் .
” யாருமா நீ , உன் பேரு என்ன ”
”என் பெயர் மாயரூபிணி. செல்வபுரி நாட்டின் இளவரசி , தேவலோகத்தில் இருந்து வருகிறேன் . தோழிகள் உடன் இங்குவந்தேன்.குளிக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்களை குளியல் தைலங்கள் எடுத்துவர அனுப்பினேன்.எங்கள் தேவலோகத்தில் இவ்வளவு அழகான குளம் கிடையாது . உங்கள் பெயர் என்ன ?”
” ஜகதல பிரதாபன், தேவலோகத்தில் நிறைய நாடுகள் இருக்கா ? தமிழ் பேசுவீர்களா ?”
” தேவலோகத்தில் தமிழ் தவிர வேறு மொழிகள் கிடையாது . எனக்கு வேறு மொழிகள் எதுவும் தெரியாது”
” யூ ஆர் லுக்கிங்சோஹாட்டண்ட்கார்ஜியஸ் ”
”என்ன சொல்கிறீர்கள் ,புரியவில்லை ”
” நீ சொன்னது உண்மையானு டெஸ்ட் பண்னேன். சோதனை ”
” எங்கள் நாட்டு வழக்கப்படி பெண்களை வேறு ஆண்கள் ஆடையின்றி பார்த்துவிட்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் அல்லது இருவரும் இறக்க வேண்டும் ”
” ரெண்டு பேருமே இறக்கணுமா ”
”ஆம் ”
” சரி , first option எனக்கு ஓகே திருமணமே பண்ணிக்கலாம். மாயரூபிணி ”
”கொஞ்சம் பொறுங்கள் , ஆடை மாற்றி வருகிறேன். ” ஆடை ஆபரணங்களை எடுத்துக்கொண்டு மரத்திற்கு மறைவில் சென்றாள் .
” அதான் எப்படியும் திருமணம் செஞ்சுக்க போறோமே ,அங்க தான் போயி மாத்தணுமா ?”
” என்ன ?”
”கவனமாக மாற்றுங்கள் என்று சொன்னேன் , இளவரசியாரே ”
அவள் ஆடை மாற்றி விட்டு தேவகன்னிகையாக மீண்டும் வந்தாள். நான் என் வருங்கால மனைவியின் அழகை உரிமையுடன் ரசித்தப் படி இருந்தேன். சில மலர்களை தொடுத்து மாலை செய்தாள் , அங்கே இருந்த பிள்ளையாருக்கு முன் மாலை மாற்றினோம். 3 முறை வளம் வந்தோம் , தம்பதிகள் ஆனோம் .
அப்போது பறக்கும் தட்டு போல் ஒன்று வந்து இறங்கியது . அதில் தமிழில் ”புஷ்பக விமானம் ” என்று எழுதி இருந்தது. 2 பெண்கள் , என் மனைவியின் தோழிகள் இறங்கினார்கள் .
இவள் நடந்ததை சொன்னாள்.
தோழிகள் ” இளவரசருக்கு வணக்கம் ” என்று கும்பிட்டார்கள் .
அவர்களின் நாட்டு மக்களுக்கு என்னை அறிமுகப் படுத்தவேண்டுமென்று என்னை விமானத்தில் அழைத்தார்கள் .ஏறினேன். கிளம்பியது . தோழிகளில் ஒருத்திதான் பைலட் .
மேலே சென்றது. எங்கள் ஊர் கூகிள் மேப்பில் பார்த்தது போல் இருந்தது .
” கொஞ்சம் நிறுத்துங்க , வீட்ல சொல்லிட்டு வந்துடறேன் ”
”ஒரே நாளில் திரும்பி வந்துவிடலாம் . இளவரசே ”
”’ போன் கவரேஜ் கூட இல்லியே , மம்மி நல்லா திட்டப் போறாங்க , பாத்து ஒட்டுமா , நான் வீட்டுக்கு ஒரே பையன் ”
”’ உத்தரவு இளவரசே ”
சிறிது நேரத்தில் செல்வபுரிக்கு அருகில் விமானம் தரை இறங்கியது. எனக்கு புதிய உடைகளை ஏற்பாடு செய்து கொடுத்தாள். அணிந்து கொண்டேன்.ராஜா போல இருந்தேன் .
” மிகவும் அழகாக இருக்கிறீர்கள் ”
” தேங்க்ஸ்டா செல்லம் ”
” மீண்டும் கிளம்பலாம் ” என்றாள் . தோழிகளைக் காணவில்லை.
விமானம் நின்றது 2 நாடுகளுக்கு பொதுவான எல்லைப் பிரதேசம் . எங்களை சில படை வீரர்கள் சூழ்ந்து கொண்டார்கள் 10 பேர் இருப்பார்கள் , . அவர்கள் தான் தோழிகளை சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள் .
மாயரூபிணி சுருக்கமாக சொன்னாள். இவர்கள் எதிரி தேசத்து வீரர்கள்.
நான் இறங்கிச்சென்று” விடுங்கடா ”என்றேன்.
அவர்கள் தோழிகளை விடுவித்து என்னை சூழ்ந்து கொண்டார்கள் .
அவர்களின் படை வீரர்கள், மேலும் சிலர் வந்து கொண்டே இருந்தார்கள் , சுமார் 20 பேர் என்னை ரவுண்டு கட்டினார்கள் .
எல்லார் கையிலும் வாள் .உடல் முழுதும் கவசம். இடது கையில் இட்லி வேகவைக்கும் தட்டு போல் ஒன்றை வைத்திருந்தார்கள் , கேடயமாம். நான் தப்பித்து ஓடக்கூட வழியில்லாமல் சூழ்ந்து கொண்டார்கள் .
இவ்வளவு ஆபத்து இருக்கும் என்று நினைக்கவே இல்லையே .
மாயரூபிணி ஒரு வாளை எடுத்து என்னிடம் வீசினாள் , சரியாக கேட்ச் பிடித்தேன் .
எனக்கு வேறு வழியில்லை சண்டைபோட்டுதான் ஆகவேண்டும். சாகும் முன்பு 4 பேரையாவது வெட்ட வேண்டும் என்று தோன்றியது.
மனதில் எம்ஜியாரை நினைத்தபடி வாளை சுழற்றினேன் . வேகம் கூட்டினேன். எனக்கே ஆச்சரியம் .எதிரிகள் பயந்தார்கள், என்னை நெருங்கி வந்தார்கள் .வெட்டினேன் , சிலருக்கு கை சிலருக்கு மார்பு சிலருக்கு தலை வெட்டுப்பட்டு வீழ்ந்து கொண்டே இருந்தார்கள். நான் இன்னும் வேகமாக சுழற்றினேன்.எனக்கு நம்பிக்கை பிறந்தது.
எதிரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. இப்போது அவர்கள் நூற்றுக்கணக்கில் வந்தார்கள். என்மேல் சிறுகீறல் கூட விழவில்லை .அவ்வளவு லாவகமாக எல்லா திசையிலும் வாளை சுழற்றி சுழன்றேன்.
கடைசி எதிரி வெட்டுப்பட்டு வீழும் வரை நிறுத்தவில்லை. ஒருவழியாக அவர்கள் அனைவரும் இறந்தார்கள் .
நான் விமானம் சென்றேன்.
” மகிழ்ச்சி இளவரசே ” என்றாள் .
” எனக்குள்ள இவ்ளோ திறமை இருக்குன்னு என்னாலயே நம்ப முடில. பாரேன் 200 பேரை ஒரே ஆளா ஜெயிச்சிட்டேன் . போதி தர்மர் DNA வா இல்ல போன ஜென்மத்துல கத்துகிட்ட வித்தையா தெரிலையேடா மாயூக்குட்டி”
” அது மந்திரவாள் யார் கையில் இருந்தாலும் அது தானாக சுழன்று எதிரிகளை வீழ்த்தும் ”
” பாகுபலி ரேஞ்சுல feel பண்ணேனே ஒரே வார்த்தைல என்னை டம்மிபீஸ் னு சொல்லிட்டியே ”
” இந்த மந்திரவாள் ஒரு முனிவர் எனக்கு கொடுத்தது அது எனக்கும் மட்டும் தான் தெரியும் ” என்று சிரித்தாள் .
செல்வபுரி நாடே ஒன்று திரண்டு என்னை அன்புடன் வரவேற்றது .
”ஜகதல பிரதாபன் . வாழ்க ! ” என்று கோஷமிட்டார்கள் . என் மாமனார் மாமியார் மிகவும் அன்பானவர்கள் , மாயரூபிணி அவர்களின் ஒரே மகள் .என்னை இளவரசனாக நாடே ஏற்றுக்கொண்டது .
மறுநாள் நானும் அவளும் தனிமையில் இருந்தோம் .
” நான் ஊருக்கு போகனும் , மம்மி தேடுவாங்க ,டேடி ரொம்ப வருத்தப்படுவாரு , நீயும் வரியா ?”
” நீங்கள் முதலில் விமானத்தில் செல்லுங்கள். ஒரு முக்கிய பூஜை முடித்து விட்டு சில நாட்களில் வ்ருகிறேன் , அதற்கு பிறகு நாம் எப்போதும் பிரியாமல் ஒன்றாக இருப்போம்”
நான் மட்டும் பூமிக்கு வந்தேன்.நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை .
சில நாட்களுக்கு பிறகு மாயரூபிணி என்னைத் தேடி வந்தாள். அவளிடம் ஒரு திட்டம் சொன்னேன்.
அவள் மறுநாள் காலை என்வீட்டிற்கு வந்தாள்.சுடிதார் அணிந்து இருந்தாள். என் க்ளாஸ் மேட் என்று அறிமுகப்படுத்தினேன்.அவள் அழகைக் கண்டு மம்மி ,டேடிக்கு அவ்வளவு ஆச்சரியம் . வேலைதேடிக்கொண்டு இருப்பதாகச்சொன்னாள் . JTP fancy ஸ்டோரில் வேலைக்கு சேர சொல்லிவிட்டேன் .
எங்கள் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்க சொல்லிவிட்டோம் .
தினமும் காலையில் அவளை கூட்டிக்கொண்டு JTP செல்வேன். 8.30 மணிக்கு மேல் ஒன்றாக திரும்பிவிடுவோம் , சில இரவுகள் தூங்க செல்வது போல இடைவெளியில் யாருக்கும் தெரியாமல் செல்வபுரி சென்று விடிவதற்குள் திரும்பி விடுவோம். இப்போது நானே பைலட் .
மாயரூபிணி ,கடையில் வியாபாரம் செய்யக் கற்றுக்கொண்டாள் . நம்ம ஊர் தமிழ் பேசுகிறாள் .வாழ்க்கை சுமூகமாக சென்றது .
டேடி ஒருநாள் சாப்பிடும் போது கேட்டார்
” என்னடா பிரதாபா , அவங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க ,பேசி முடிச்சிருவோமா ” என்றார்
” அவகிட்ட கேட்டு சொல்றேன் ,டேடி” .என்றேன் .
ஒருநாள் செல்வபுரி சென்ற போது மாமனார் ,கவலையாக இருந்தார் .
விஷயம் இதுதான். செல்வபுரியின் பகை நாடு சொர்ணபுரி , இது இந்தியா என்றால் அது பாகிஸ்தான் .
ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தது.நான் அவர்களின் வீரர்களை கொன்றதால் இப்போது மீண்டும் போர் உருவாகும் சூழல். மாம்ஸ் முதியவர் என்பதால் போருக்கு நான் தான் தலைமை ஏற்கவேண்டும். அந்த நாட்டிலும் அவர்களின் புது இளவரசன் தான் தலைமை ஏற்பான்.
போரை அறிவிக்க அவர்களின் ராஜகுரு மட்டும் எங்கள் அரண்மனைக்கு வந்திருந்தார். நாளை போர் தொடங்கிவிடலாம் என்று பேசி முடிவு செய்தார்கள்.
மாயூவை அழைத்தேன் , ” மந்திரவாள் பத்திரமா இருக்கா , எடுத்துட்டு வாடா , செல்லக்குட்டி ”
” ஒரு முனிவர் கிட்ட கொடுத்து வேற ஒரு நாட்டுக்கு பூஜைக்கு அனுப்பி இருக்கேன் , 40 நாள் ஆகுமே ”
” என்னடி சொல்ற , அப்போ அவ்ளோதானா ”
விடிந்தால் போர் ,இரவு தூக்கம் வரவில்லை .
விடிந்தது.இரண்டு நாட்டு ராஜகுருக்களும் கூடி பேசி போரை அறிவித்தார்கள் .
பொது எல்லை பிரதேசத்தில் கூடினோம். இரண்டு பக்கமும் சரியாக 10000 வீரர்கள் மட்டும் இருக்கவேண்டுமாம் . சூரியன் மறைந்தால் ஓய்வு . எந்த அணியில் இளவரசன் முதலில் இறக்கிறானோ அது தோல்வி. உயிருடன் இருப்பவனின் நாடு வெற்றி பெற்றதாம் . அவன் 2 நாடுகளையும் இணைத்து ஆட்சிபுரியலாம் .
நான் என் கையில் இருக்கும் வாளை சுழற்றிப்பார்த்தேன்.நகரவே இல்லை .
அன்று சூரிய உதயம் தாமதமானது. பறவைகள் அலறின. மேகங்கள் மேலும் சூழ்ந்தன .
இரண்டு நாட்டு ராஜகுருக்களும் சகுனம் சரியில்லை என்றார்கள் .
”போர் , கேன்சலா ” என்றேன் .சந்தோஷத்தைக் காட்டாமல் .
”வேறு வடிவத்தில் போர் நடக்கும் ”என்றார்கள்.
” விளக்கம சொல்லுங்கப்பு ” என்றேன்,
” படை வீரர்கள் மோத வேண்டாம் , 2 நாட்டு இளவரசர்கள் மட்டும் மல்யுத்தம் புரியவேண்டும் . வெற்றி பெரும் இளவரசனுக்கு 2 நாடுகள் , தோற்றவன் அல்லது தோல்வியை ஒப்புக்கொள்பவன் ஆயுள் முழுவதும் கைதியாக இருக்க வேண்டும் ”
” இதுக்கு அந்த போரே பரவாயில்லியே, கொஞ்சம் டைம் கொடுங்கப்பா மல்யுத்தம் பயிற்சி எடுத்துட்டுவரேன் ”
” ஒரு மணி நேரம் மட்டும் பயிற்சியாளர் பயிற்சி கொடுப்பார் , இப்போதே போட்டி நடந்தாக வேண்டும் ” என்றார்கள் .
பயிற்சி என்ற பெயரில் மேலும் என்னை பயமுறுத்தினார்கள் .பரீட்சை அன்று முதல்முதலாக புத்தகம் திறந்தால் எப்படி இருக்கும்.
மைதானம் தயார் செய்யப்பட்டது , எனக்கு உடைகள் நீக்கப்பட்டு ஒரு துண்டை இடுப்பில் மல்யுத்த வீரன் போல அணிவித்தார்கள் . முகம், உடல் எங்கும் வண்ணம் பூசினார்கள் .
முதல் மணி அடிக்கப்பட்டது , பயிற்சியாளர் என்னைக் கைபிடித்து மைதானத்திற்குள் இழுத்துச்சென்றார் .
எதிரி இளவரசன் , முதலிலேயே வந்து அவர்களின் பயிற்சியாளர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு இருந்தான் போல தெரிந்தது .
படைவீரர்கள் ஆயுதத்தை போட்டுவிட்டு மைதானத்தை சுற்றி பார்வையாளர்களாக அமர்ந்து இருந்தார்கள்.
சிறிது நேரத்தில் அவர்கள் ஒரே நாட்டின் குடிமக்களாக போகிறார்கள் , அது செல்வபுரியா அல்லது சொர்ணபுரியா என்பது சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.
மீண்டும் மணியடிக்கப்பட்டது. நானும் எதிரியும் நடுவருக்கு அருகில் சென்றோம் ,
எதிரியின் முகத்தைப்பார்த்தேன் ,
” சார் , என்னை மனிச்சுடுங்க சார் , நான் வேணும்னே எந்த தப்பும் பண்ணல , எதிர்ப்பாராத விதமா இங்க வந்து மாட்டிகிட்டேன். நீங்க என்னோட தெய்வம் சார் . என்னை மன்னிச்சுடுங்க சார் ” என்று என் கால்களில் விழுந்து கதறினான் .
”அட, நம்ம குமரேசன். ”
”மாமன்னர் ஜகதல பிரதாபன்.வாழ்க வாழ்க ,”’ என்று மக்கள் கோஷமிட்டனர் .
[ சுபம் ]

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal