மெய்ஞ்ஞான தேடலில் ஈடுபாடு உள்ளவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்களுள் சிவானந்த போதம் எனும் நூலும் ஒன்று.
குருவிடம் சரணடைந்த சீடன், மெய்ப்பொருள் குறித்த தனது சந்தேகங்களை யெல்லாம் கேட்க, சற்குரு வானவர் சீடனின் ஐயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து, சீடனின் மனத்தில் கப்பியுள்ள அறியாமை எனும் இருளை நீக்கி, அவன் உள்ளத்தில் அறிவெனும் சோதியை ஏற்றி வைக்கிறார்.
சிவானந்த போதம் என்னும் இந்நூல், வினா விடை வடிவில் இடையிடையே உரையாடல் உரைநடையில்- வசனத்தில் இருந்தாலும் இந்த நூலில் 83 பாடல்கள் உள்ளன.
எளிமையான முறையில் தான் பாடல்கள் உள்ளன.
இந்நூலில் இருந்து ஒரு பாடல்.
“அன்புடனே உடல் பொருள் ஆவி மூன்றும்
அறுதியாய் அளித்து விட்டு நீதானையா
தென்புடனே அடிமையெனச் சத்தியஞ்செய்
சிதறாமல் நில்லப்பா தீக்ஷை வைப்போம்
பின்புந்தன் செவிதானே யோனியாகப்
பேசுமென்ற நாவுதான் லிங்கமாச்சு
இன்பமுடன் அனுபோகத்திருக்க வென்றே
இருசெவியில் உபதேசம் ஏற்றுவோமே.”
சிவானந்த போதத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஞான ரத்தினங்கள்.
குருவானவர் சீடனுக்கு தீட்சை அளிக்கும் முன்பு, குருதட்சிணையாக சீடன் சமர்ப்பணம் செய்ய வேண்டிய காணிக்கை எதுவென குறிக்கிறது.
உடல் பொருள் ஆவி மூன்றையும் சற்குருபிரான் அவர்களுக்கு தத்தம் செய்து கொடுத்து அன்புடனே அடிமைபோல் காத்திருக்க வேண்டும். அதன்பின்னரே ஆசான் உளம் கனிந்து தீட்சை அளிப்பார்கள்.
அதற்கடுத்து மெய்ஞானத்தில் பரிபாஷை சொல்லாக இருக்கும் ” சிவலிங்கம்” குறித்து விளக்கம் தரப்பெறுகிறது.
சிவலிங்கம் குறித்து தத்துவ அறிஞர்கள் ஆண் பெண் இவர்களின் குறி – யோனி என விளக்கம் தந்து பேசியும் எழுதியும் வந்துள்ளனர்.
ஆனால் சிவானந்த போதம் நூலில், சிவலிங்கம் என்பது, மெய்ஞானத்தை அருளுகின்ற ஆசானின் நாவு தான் லிங்கம்.
அந்த அருளமுதத்தை துய்க்கும்- இன்பத் தேன் வந்து பாயும் சீடனின் காதே- செவியே யோனியாகும் என மெய்ப்பொருள் விளக்கம் தருகிறது.
இது குறித்து மெய்வழி ஆண்டவர்கள் திருவாய்மொழியில்
” மாணவனின் ஆவிடை யோனியில் ஆசானின் நாத ரூப லிங்கம் போகிக்க போகிக்க ரிஷி பிண்டம் உருவாகிறது.
இப்பிண்டம் இரவு தங்காது. உடனே பிறந்து விடும்.
இதைத்தான் ரிஷிபிண்டம் ராத்தங்காது என்பர்.
குருதேவரின் புணர்ச்சியினால் சமாதி நிலை எய்தினவனது மூச்சு வெளியே ஓடாது.”
இந்த போகம் சிவபோகம். இந்த அனுபவம் சிவானுபவம். இந்த இன்பம் சிவானந்தம்.
இது குறித்து விவரித்து கொண்டே போகலாம்.
இந்த மெய்விளக்கம் உறுதிபட, மேலும் இன்னொரு சித்தர் பாடல்வழி கண்டு தெளியலாம்.
சுப்பிரமணியர் ஞான சைதன்யம்-108 எனும் நூலின் பாடல் எண் 74.
“நின்றதோர் குருவப்பா நன்றாய்க் கேளு
நீதியுடன் சொல்லுகிறேன் விபரமாக
அன்றதோர் குருவினது நாவே லிங்கம்
அதிகமுள்ள சீஷனது காதே யோனி
சென்றதோர் குருவினது உபதேசம் விந்து
சிறப்புடனே கேட்கிறதோர் சிஷ்யன் நாதம்
என்றதோர் அறிவுமனம் அறிந்தால் இன்பம்
ஏகமெல்லாம் ஞான கெற்பம் பிறந்த வாறே.”
இப்படி சிவானந்த போதம் என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஞான முத்துக்கள்.
எம்பெருமானார் ஞான சூரியன் ஸ்ரீலஸ்ரீ சாலை யுகவான் ஆண்டகை அவர்கள், தங்கள் மெய்ஞான சபையில் சிவானந்த போத பாடல்களுக்கெல்லாம் விளக்கம் தந்து அருளிய தைக் கேட்டதெல்லாம் வாழ்வின் வசந்த காலம் தான்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal