தமிழகத்தில் கம்பீரமும், கலை நேர்த்தியும், பாரம்பரியமும் ஆதிகாலத் தொழில்நுட்பங்களும் மிக்க மாளிகைகளைப் போல் உள்ள வீடுகளைக் கொண்டதுதான் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள செட்டிநாடு என்கிற பகுதி ஆகும். குன்றக்குடியை மையமாகக் கொண்டு இந்தப் பகுதி அமைந்துள்ளது. சோழ நாட்டின் காவிரிப் பூம்பட்டின – பூம்புகாரை ஆழிப் பேரலை கடல் கொண்ட போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் புலம் பெயர்ந்து பாண்டிய மன்னன் சௌந்திர பாண்டியன் காலத்தில் குன்றக்குடியைச் சுற்றிக் குடியேறி தங்களுக்கும் தன் தலைமுறைகளுக்கும் கட்டிய வீடுகளே, செட்டிநாடு வீடுகள் ஆகும். “ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு” என்கிறப் பாடலில் சொல்லப்பட்டது போல் ஒரு வீட்டை நீங்கள் கண்டதுண்டா?. அதனைக் காண நீங்கள் விரும்பினால் காரைக்குடிக்கு வாருங்கள். ஆயிரம் ஜன்னல் கொண்ட ஒரே ஒரு வீடு மட்டும் இங்கே இல்லை, இது போன்ற சர்வதேசத் தரத்திலான சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இந்தியாவில் செட்டிநாடுப் பகுதியில் மட்டுமே உள்ளது. செட்டிநாடு வீடுகள் என்பவை 96 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு என்றழைக்கப்படும் பகுதியாகும். காலத்தின் மாற்றத்தாலும், சமூகப் பொருளாதார சூழலாலும், நகரிய நாகரீக பெருக்கத்தாலும், 96 ஊர்கள் தற்போது 72 முதல் 75 ஊர்களாய் இணைந்தும் சுருங்கியும் தன்னை மாற்றிக் கொண்டு பாரம்பரியத்தையும் பெருமையையும் தாங்கிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது.

இந்தச் செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. தாங்கள் இருக்கும் இடத்தைக் கோட்டைகள் போல வீடுகள் கட்டி, நகரத்தைப் போல நிர்மாணித்து வாழ்ந்ததால், இந்த வீடுகளின் மனிதர்களைச் சாதியம் என்கிற அடைவு இல்லாமல் நகரத்தார் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றார்கள். 1920 களில் க்யூபிசம் பாணியின் தாக்கத்தால் ஐரோப்பாவில் தோன்றிய அலங்கார கலையை ‘ஆர்ட் டெகோ’ என்றழைக்கிறார்கள். பளிச்சிடும் வண்ணங்களில் சதுரங்களையும், கோணங்களையும் கட்டிடங்களில் சேர்ப்பதே இப்பாணியாகும். செட்டிநாடு வீடுகள் இவ்வடிவத்தின் தாக்கத்தையே பிரதிபலிக்கிறது. இக்கட்டிடங்களுக்கான மூலப்பொருட்கள், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் இறக்குமதி செய்து கட்டியிருக்கிறார்கள். இவர்கள் இத்தாலியின் மார்பில் கற்கள், பெல்ஜியத்திலிருந்து ஜன்னல்களுக்கான கண்ணாடி , தூண்களுக்கு பர்மாவிலிருந்து தேக்கு, விக்டோரியன் நாற்காலிகள், ஐரோப்பா மற்றும் பர்மாவிலிருந்து சரவிளக்குகள், சமைக்கும் பாத்திரங்களை இந்தோனேசியா மற்றும் செகோஸ்லோவியா போன்ற இடங்களிலிருந்தும் இறக்குமதி செய்திருக்கிறார்கள். பல்வேறு நாட்டின் கலைச் சங்கமமாக திகழ்கிறது செட்டிநாடு கட்டிடக்கலை. இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவர்கள் வணிகம் செய்து, பொருள் ஈட்டி கொண்டு வந்து, இது போன்ற வீடுகளைத் தங்களின் பூர்விகத்தில் கட்டிக் கொண்டார்கள்.

செட்டிநாட்டு வீடுகள் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளன. வீட்டுக்கு முன்புற வாசல் ஒரு தெருவிலும் பின்புற வாசல் இன்னொரு தெருவிலும் இருக்குமாறு மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் தரைப்பகுதி தெருவை விட ஐந்து அடி உயரம்வரை கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நீள் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில் இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன. வீடு முழுதும் பல தூண்கள் உள்ளன இந்தத் தூண்கள் பர்மா தேக்கைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீளமான தேக்குமரங்களை இவர்கள் பர்மாவில் இருந்த காலத்தில் சங்கிலியால் கப்பல்களில் கட்டி கடலில் மிதக்கவிட்டு நாகப்பட்டிணம், தொண்டி துறைமுகம் வழியாக கொண்டு வந்த‍தாக கூறுகின்றனர்.

செட்டிநாடு வீடுகளை 4 அல்லது 5 கட்டுகளாக (பகுதிகளாக) பிரிக்கிறார்கள். முதலில் முகப்பு (வரவேற்பறை), இரண்டாவதாக ஆள் வீடு-ஆண்கள் இருக்கும் இடம், மூன்றாவதாக வளவு ( புழங்கும் இடம்-முற்றம்) நடுவில் திறந்த வாசலுடன் வீட்டின் அறைகளைக் கொண்டதாகும், நான்காவதாக பாகமாக இரண்டாங்கட்டு (சாப்பிடும் இடம்), பின்பு மூன்றாம் கட்டு (சமையலறை) கடைசியில் தோட்டமும் கிணறுகளும் உள்ளன. சில வீடுகளில் பந்திக்கட்டு என்கிற சாப்பிடும் இடம் தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் மாடிகளிலும் அறைகள், பரண்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் அமைந்திருக்கும். வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை இருக்கும். அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது. தெய்வச் சிலைகளை நிலையின் மேல் புறத்தில் செதுக்கியிருப்பார்கள். வீட்டின் முகப்பு பட்டாலை (திண்ணை) என அழைக்கப்படுகின்றது. வீட்டின் வரவேற்பு இடம் வீட்டின் முன் பகுதி. இது முகம் போன்ற வரவேற்கும் அழகு பொருந்திய பகுதி என்பதால், முன் கோப்பு அமைந்த பகுதி என்பதால், முகப்பு என அழைக்கின்றனர். வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன. கிணறுகளும் இதை ஒட்டி முன் புறக்கிணறுகளும் உள்ளன.

இந்தக் கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் உருவம் அல்லது கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். முகப்பில் லெக்ஷ்மி, சரஸ்வதி அம்மன் சிலைகளும், கிருஷ்ணர் சிங்கங்கள் இருபக்கமும் காவல் காத்தும், துரை/ காவலர் சிலைகளும் இருக்கும். நிலைகளில் ரிஷப வாகன சிவ பார்வதி சிற்பங்களும் உள்ளன. மேலும் நிலைகளைச் சுற்றி தேக்கு மற்றும் தோதகத்தியில் செய்யப்பட்ட சூரிய மற்றும் சந்திரப் பலகைகள் சிற்பக்கலை நயம் கொண்டு செதுக்கி அமைக்கப்பட்டு உள்ளது. 16- 17 ஆம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்பக்கலை அமைப்புகளே செட்டிநாட்டின் கலைஞர்களுக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளன. குறிப்பாக, கோவில்களில் காணப்படுவதைப் போலவே இங்குள்ள கதவுகளிலும் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பட்டாலையைத் தாண்டினால் வருவது பெரிய வானவெளி கொண்ட வளவு (முற்றம்) ஆகும். வீட்டுக்குள் காற்றையும் வெளிச்சத்தையும் இந்த வானவெளி கொண்டு வருகிறது. வீட்டின் முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும். வீட்டில் தேக்குமரத்தால் ஆன பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள் கொண்டதாக உள்ளது. ஆங்காங்கு உள்ள நிலைகளில், இராமாயண, மகாபாரதக் காட்சிகளை வரிசையாகச் செதுக்கி உள்ளனர். கல்யாணம்,பொங்கல், இறப்பு, சடங்குகள் மற்றும் அனைத்து நிகழ்வுகளும் இங்குதான் நடைபெறுகிறது. பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களைச் சேமிப்பதற்காக இவை உள்ளன. அந்தக் காலத்திலேயே மழைநீர் சேகரிப்புத்திட்டத்தை இங்குள்ள வீடுகளில் பின்பற்றி அமைத்து உள்ளார்கள். வீடு முற்றத்துல விழும் தண்ணியெல்லாம் முன் அல்லது பின் வீட்டுக் கிணத்துக்குப் போய் விழும் மாதிரி அமைப்பு உள்ளது.

அதற்கு அடுத்து இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது. இது உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு – சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். மேலும் பசு மாடுகள் வளர்க்கக் கட்டுத்துறை என்கிற பகுதியும் உள்ளது.

இந்த வம்சாவழியினர் கல்யாணம், பேறுகாலம், நல்லது கெட்டது என்கிற பிறப்பு இறப்பு நிகழ்வுகள் தொடர்பான எல்லாவற்றையும் தங்களின் பூர்வீக வீட்டில் மட்டுமே இன்றும் நடத்தி வருகிறார்கள். வருஷத்துக்கு ஒரு நாள் முன்னோர்களுக்கு “படைப்பு” என்கிற வழிபாட்டைத் தவறாமல் தங்கள் வீடுகளில் அனைவரும் ஒன்று கூடி இன்றும் விட்டு விடாமல் நடத்திக் கொள்கிறார்கள். அது சமயம் வம்சாவழியினர் எந்த நாட்டில் இருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொள்வார்கள். அன்று அந்த வீடுகள் உறவுகளின் பாசத்தால் மிளிரும், அந்த ஒரு நாளுக்காக நினைவுகளுடன் முதுமையைச் சுமந்த பல பெரியவர்கள் இன்றும் அந்த வீடுகளில் தனியாய் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த வீடுகளின் வம்சா வழியினர் இன்று காலத்தின் நிலைப்பாட்டால், உலகம் முழுவதும் பரந்து, பணியும் தொழிலும் ஆற்றி வருவதால், இந்தப் பிரமாண்ட வீடுகள் மனிதர்கள் இன்றி தனியாகத் தவித்துக் கொண்டு நிற்கிறது. நரைத்த மூத்த குடிமக்கள் ஒன்று அல்லது இருவர் மட்டுமே சில வீடுகளில் தனித்து வசித்து வருகின்றனர், பல வீடுகள் பூட்டியே இருக்கிறன. செட்டிநாட்டுக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் கடல் போல பரந்து விரிந்து கிடக்கும் இந்த மாளிகைகள் இன்று கவனிப்பாரின்றி, பராமரிப்பின்றி பொலிவிழந்து கிடக்கின்றன. பல வீடுகள், சேதம் அடைந்துள்ளன, சேதமடைந்து வருகின்றன. இந்த நிலையில், இவற்றின் தொன்மையை அறிந்த யுனஸ்கோ நிறுவனம் பல வீடுகளை பழைய அழகு குறையாமல் புதுப்பிக்க தத்தெடுத்துள்ளது. தமிழக அரசு இந்தப் பகுதியை தொன்மை வாய்ந்த புராதனப் பகுதியாக அறிவித்து உள்ளது. தற்காலத்தில் சில வீடுகளை சற்று மாற்றியமைத்து நட்சத்திர விடுதிகளாக காரைக்குடி, கானாடுகாத்தான், கடியாபட்டி ஊர்களில் வெளிநாட்டினர் வந்து தங்கி பயன்படுத்துகின்றனர்.

மனிதர்கள் வாழும் வீடுகள் மட்டுமல்ல அதையும் தாண்டி தமிழ்நாட்டின் கட்டிடக்கலையின் அடையாளங்களாக பல பாரம்பரியத்தையும் கலைகளையும் உள்ளடக்கிய இந்த வீடுகள் இன்னும் பல நூறாண்டுகள் நிலைக்ககூடியவயாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும். இந்த வீட்டில் வாழ்ந்து வரும் ஒரு சராசரி மனிதன் என்கிற நிலையில் இதை வாசிக்கும் நீங்கள் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு “எங்க வீட்டுக்கு வாங்க” என்று செட்டிநாட்டு ‘விருந்தோம்பல்’ கொண்டு அன்புடன் அழைக்கிறேன். செட்டிநாட்டு அன்பும் விருந்தும் இந்த வீடுகளில் உங்களின் வருகைக்காக மணம் வீசத் தொடங்கி விட்டது. தனியாக இருக்கும் அந்த ஆத்தா, அப்பச்சிகள் உங்களின் வருகையால் ஒரு நாள் மகிழட்டும்.

“வாங்க… வாங்க…”

பேராசிரியர் நா. அருணாசலம்அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal