இலங்கையை ஊழலில் இருந்து விடுவிப்பதாகஅரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள சபதம் அரசு தரப்பில் உள்ள சிலர் உட்பட பலரை எரிச்சலடைய செய்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், அரசாங்கத்தில் உள்ள சிலராலும் வெளியாட்களாலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விமர்சிக்கப்படுகிறார். ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதாலேயே ஜனாதிபதி மீது அவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இந்த நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதாக அரச தலைவர் விடுத்துள்ள சபதம் அரசு தரப்பில் உள்ள சிலர் உட்பட பலரை எரிச்சலடைய செய்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர்கள் அரச தலைவர் மீது சேற்றை வீசுகிறார்கள். ஆனால் நாங்கள் அரச தலைவரை தொடர்ந்தும் பாதுகாப்போம்.
இதற்கிடையில், அரசியல் இலாபத்திற்காக அப்பாவிமக்களை கொலை செய்தவர்கள் சிலர் இன்னும் ஜனநாயகத்தின் வெற்றியாளர்களாக மாறுவேடமிட்டு உயிருடன் இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.