
ஒரு நாடு-ஒரு சட்டம் உருவாக்கும் பொறுப்பை, அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தி விட்டு, காவல்துறையைக் கூட கெட்டவார்த்தைகளால் திட்டும் ஞானசார தேரரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பொடி லசி, மதுஷ் போன்ற ஒருவரிடம் அந்த பொறுப்பை வழங்கியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் நல்லது. என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நியாயமான, நீதியான தலைவர் ஒருவர் நாட்டில் உருவாகினால், சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மதவாதம், இனவாதம் அல்லாத ஜனநாயக தலைவர் என்ற வகையில் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கு மிகப் பெரிய உரிமை இருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உலக வங்கியிலும் இதே உரிமை உள்ளது. இந்த சர்வதேச நிறுவனங்களுடன் எம்மால் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.
ஒழுக்கமான சமூக கட்டமைப்புக்கே இந்த நிறுவனங்கள் நிதியுதவி வழங்கும். ஒழுக்கமில்லாத, சட்டமில்லாத, ஒழுக்கக் கேடான, மதவாதம், இனவாத நிலைப்பாடுகளை பரப்பி அதன் பிளவு மூலம் ஆட்சி செய்ய முயற்சிக்கும் நாட்டுக்கு அவை நிதியுதவிகளை வழங்காது.
வெள்ளையர்கள் கூட இப்படி பிரித்தாளவில்லை. பூகோள ரீதியாக பிரித்தனர், அது வேறு விடயம். அரசுகளாக பிரித்தனர். எனினும் இனவாத, மதவாத அடிப்படையில் வெள்ளையர்கள் நாட்டை பிரிக்கவில்லை. இனங்களுக்கு இடையில் அன்றும் ஐக்கியமான ஒற்றுமை இருந்தது.
அந்த ஐக்கியத்தை இல்லாமல் செய்துள்ள ஒழுக்கம் கெட்டுள்ள நாட்டுக்கு அவர்கள் நிதி வழங்க மாட்டார்கள். நாட்டின் தற்போதைய ஆட்சி மாறி, நியாயமான, நீதியான, ஜனநாயக விழுமியங்களை கொண்ட ஒருவர் நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டால் உலக நாடுகள் உதவிகளை வழங்கும்.
இந்த தலைவர் ஜனநாயக தலைவராக இருக்க வேண்டும். அடிப்படைவாத, பயங்கரவாத தலைவராக இருக்கக் கூடாது. குடும்ப சார்பு, சாதியவாத, இனவாத, மதவாத மற்றும் பயங்கரவாத தலைவராக இருக்காது, நியாயமான நீதியான தலைவர் இந்த நாட்டை பொறுப்பேற்றால் கட்டாயம் சர்வதேசத்தின் உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும்.
அப்போதும் எம்மால் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும். தீர்க்கும் முறை எம்மிடம் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அது பற்றி தற்போது கலந்துரையாடி வருகிறது. இதனால், சஜித் பிரேமதாச தொடர்பில் எமக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கின்றது எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.