எழுதியவர் – தமிழ்ச்செல்வன்

லாக்டவுன் காலத்தில் என் எல்லை என் தெருவுக்குள் முடங்கிவிட்டது
என் மகள் ரேணு வின் எல்லை எங்கள் வீட்டிற்குள் முடங்கிவிட்டது.
ஒரு நாள் என்னிடம் கேட்டாள் .
” எப்போ பார்க் மறுபடியும் திறப்பாங்க ”
”இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் ”
”சரிப்பா ” என்று படம் வரைய தொடங்கிவிட்டாள் .
நோட்புக் வாங்கிப்பார்த்தேன் .
பட்டாம்பூச்சிகள் .பட்டாம்பூச்சிகள் .பட்டாம்பூச்சிகள் .
மீண்டும் வரைய தொடங்கினாள் .மூன்றாம் வகுப்பு முடித்து இப்போது வீட்டிற்குள் முடங்கி இருக்கிறாள் .
முகத்தில் விளையாட்டுத் தனம் தொலைத்த சோகம் தெரிகிறது .
” அப்பா ,பட்டாம்பூச்சி எல்லாம் எவ்வளவு நாள் உயிரோட இருக்கும் ”
”சில வகை ஒரு நாள் தான் இருக்கும் , சில வகை ஒரு வருஷம் இருக்கும் ” கூகுளிடம் பார்த்து பதில் சொன்னேன் .
” பார்க் எப்போ திறப்பாங்க அப்பா ”
” எதுக்கு ரேணு , விளையாடப் போகணுமா . போர் அடிக்குதா ?”
”அப்பா என்னை திட்டாதீங்க . நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் ”
” திட்ட மாட்டேன் , என்ன தப்பு பண்ண சொல்லு ”
” பார்க்ல ஒரு ஓரமா ஒரு கூண்டு இருக்கு தெரியுமா ”
”ஆமா பாத்திருக்கேன் , ஒரு காலி கூண்டு ஓரமா இருக்கும். முன்னாடி அதுல கிளி ஏதாவது வளத்திருப்பாங்க ”
”அன்னைக்கு விளையாடிட்டு இருந்தேன்ல . நீங்க ஓரமா பெஞ்சுல உக்காந்து இருந்தீங்க ல்ல . அப்போ ஒரு பூமேல ஒரு பட்டாம்பூச்சி உக்கந்து இருந்துச்சு . நான் பின்னாடியே மெதுவா போனேன். அப்படியே சைலெண்டா பட்டாம்பூச்சியை புடிச்சுட்டேன் . அந்த காலி கூண்டு உள்ள போட்டு பூட்டிட்டேன் ”
”எதுக்கு ரேணு உள்ள வச்சு பூட்டின , அது பாவம்ல ”
”அது உள்ள வச்சி பூட்டி அது கூட பேசிப் பேசி friend ஆகலாம்னு நினைச்சேன் பா . அப்புறம் சாரி சொல்லி தொறந்து விட்டுட்டா அது எப்பவுமே என்னோட friend ஆ இருக்கும்ல அதான் பூட்டினேன் பா ”
”அப்புறம் என்னாச்சு ரேணு ”
”அதுக்கு அப்புறம் நாம பார்க் போகவே இல்லப்பா , இந்தியாக்கு கொரோனா வந்துச்சுனு நாம எங்கேயுமே போகலப்பா ”
”சரி ரேணு , கவலைப் படாத . இன்னொரு நாள் பார்க் போயி பாக்கலாம் ”
”அது செத்து போயிருக்குமாப்பா . அதுக்கு பசிக்கும் னு 2 பூ தான் உள்ள பரிச்சு போட்டேன் . இப்போ அதுக்கு ரொம்ப பசிக்கும்ல ”
அவளை திசை திருப்ப முயன்றேன் முடியவில்லை. தினமும் 10 முறையாவது இதைத் திரும்ப திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தாள் .
ஒருநாள் முடிவு செய்தேன் .
” ரேணு , நான் இன்னைக்கு பார்க் போறேன். அந்த கூண்டைத் திறந்து விட்டுட்டு வரேன் . நீ நிம்மதியா இரு ,சரியா ?”
” நானும் வரேன்பா ”
”வேண்டாம் ரேணு . குழந்தைங்க வெளிய போகக்கூடாதுனு சொல்லி இருக்காங்க. நான் மாஸ்க் போட்டுட்டு ஓரமா நடந்து போயி பாத்துட்டு ,திறந்து விட்டுட்டு வந்துடறேன் ”
”அப்பா ,பார்க் தான் மூடி இருப்பாங்கல ”
”எப்படியும் அந்த செடிக்கு எல்லாம் தண்ணி ஊத்த ஒருத்தர் வருவாரு. அப்போ அவர்கிட்ட கேட்டுட்டு உள்ளே போறேன் மா ”
” அந்த கூண்டை தொறந்து விட்டுட்டு அந்த பட்டாம்பூச்சியை உங்க போன்ல போட்டோ எடுத்துட்டு வாங்கப்பா ”
”ஓகே ரேணு ”
மாலை ஐந்து மணிக்கு பூங்கா சென்றேன். பூட்டி இருந்தது. உள்ளே ஒரு அறையில் தான் காவலாளி தங்கி இருப்பார் . வெளியில் நின்று பார்த்தேன் . ஒருவர் அங்கேயே அடுப்பு மூட்டி சமைத்துக்கொண்டு இருந்தார் .
” கொஞ்சம் இங்க வாங்க . ” என்றேன் .
”என்ன விஷயம் சார் ”
”பொண்ணோட மோதிரம் ஒன்னு . தொலைச்சுட்டா . வீட்ல தேடிப்பாத்தோம். கிடைக்கல. இங்கதான் விட்டேன்னு சொன்னா . ஒரு பத்து நிமிஷம் தொறந்து விட்டிங்கன்னா தேடி பாத்து எடுத்துட்டு போயிடுவேன் ”.
”இப்போ தொறக்கக் கூடாதுங்க .போலீஸ் பாத்தா பிரச்சனை ஆயிடும் . நான் வேணா தேடிப் பாக்கறேன். கிடைச்சா உங்களுக்கு போன் பண்றேன் . நம்பர் குடுத்துட்டு போங்க சார் ”
”பரவாயில்லீங்க , ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் திறந்து விடுங்க. இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சவர் தான். போலீஸ் வந்தா நான் சொல்லிக்கறேன். அஞ்சு நிமிஷம் என் திருப்திக்காக தேடிப் பாத்துட்டு போயிடறேன்”
அவர் திறந்து விட்டு தன் சமையலைத் தொடர்ந்தார். நான் உள்ளே சென்று 5 நிமிடத்தில் திரும்பினேன் .
”கிடைச்சுதா சார் . ”
”இல்லீங்க . பரவாயில்ல. வேற எங்கையாவது விழுந்துச்சோ என்னவோ ?”
”கவலைப்படாதீங்க , கஷ்ட்டப்பட்டு உழைச்ச காசு எங்கையும் போகாது . நிச்சயம் கிடைக்கும்”
”ரொம்ப நன்றிங்க , நான் போய்ட்டு வரேன் ” என்று
சொல்லி கிளம்பி வீடு வந்தேன் . குளித்தேன்.
ரேணு தூங்கிக்கொண்டிருந்தாள் . எழுந்ததும் கேட்டாள் .
”அப்பா , அந்த பட்டாம்பூச்சி என்னாச்சுப்பா ”
”நான் பார்க் போனேனா , வாட்ச்மேன் அங்கிள் கிட்ட ரொம்ப அர்ஜெண்ட்ன்னு சொல்லிட்டு உள்ளே போனேன்”
”அப்புறம் ”
”கூண்டுல பாத்தா உள்ள பட்டாம்பூச்சி படுத்து கிடந்துச்சு ”
”செத்துடுச்சாப்பா ” அவள் குரலில் அதீத சோகம் .
” நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். பாத்தா அது பசில மயங்கி கிடந்து இருக்கு. அதை தூக்கி ஒரு பூ மேல உக்கார வச்சேன் ”
”ம்ம்ம் , அப்புறம் என்னாச்சுப்பா ”
” அந்த பூக்குள்ள இருந்து தேன் குடிச்சதும் அதுக்கு சக்தி வந்திருக்கும் போல இருக்கு . உடனே பறந்து போச்சு ”
”அப்பாடா ,தேங்க் காட் . அது சாகல . போட்டோ எடுத்தீங்கலா . காட்டுங்கப்பா ”
என் போன் காட்டினேன் . திறந்த கூண்டு இருந்தது .
”பட்டாம்பூச்சியை போட்டோ எடுக்கலியாப்பா ”
”அதுதான் பறந்து போச்சே . அதான் கூண்டு மட்டும் எடுத்தேன் ரேணு ”
”சரிப்பா . இந்த லாக்டவுன்ல வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்போதுதான் கஷ்டம் புரியுது . இனிமேல் எந்த மிருகம் .பறவை , பூச்சி எதுவுமே கூண்டுக்குள்ள பூட்டி வைக்கவே கூடாதுப்பா , எல்லாத்தையும் சுதந்திரமா விட்டுடனும் ”
”ஆமா ரேணு” என்றேன் .
”தேங்க்ஸ்ப்பா ” என்று என் கன்னத்தில் முத்தமிட்டாள். நீண்டநாட்களுக்கு பிறகு அவள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன் .
அந்த கூண்டிற்குள் பட்டாம்பூச்சி உயிரில்லாமல் கிடந்தது என்ற உண்மையை சில வருடங்களுக்கு பிறகு அவளிடம் சொல்ல வேண்டும் அல்லது சொல்லாமல் விட்டுவிடவேண்டும் என்று முடிவு செய்தேன் .


[முற்றும் ]

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal