திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பஞ்சாயத்துக்குட்பட்ட ருக்மணியம்மாள்புரம் கிராமக் குளக்கரையில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கான வழிபாட்டுத்தலமாக ‘கான்சா மாடன் தர்க்கா’ அமைந்திருக்கிறது.

‘கான்சா’ என்பது இஸ்லாமியப் பெயர், ‘மாடன்’ என்பது இந்த ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர். இவ்விரண்டும் இணைந்து இந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக அமைந்திருக்கும் இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதும், ஆடு, கோழி போன்றவைகளைப் பலியிட்டு வழிபடுவதும் நடைபெறுகிறது. ஊத்துமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் இசுலாமியச் சமயத்தினர், ஆடி மாதம் முதல் நாள் மாலையில் இங்கு கொடி ஏற்றிச் சந்தனக்கூடு திருவிழாவை நடத்துகின்றனர். இத்தர்க்காவின் தோற்றம் பற்றி ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்த கான்சா என்ற பெயருடைய வீரனின் நினைவாக உருவாக்கப்பட்டது என்ற பரவலான கருத்து இங்கிருக்கும் மக்களிடையே காணப்படுகிறது. ஊத்துமலை பாளையக்காரர்கள் பூலித்தேவனுக்கு உதவியக் காலகட்டத்தில், அவர்கள் மீது படையெடுத்து வந்த கான்சாகிப், தன்னை எதிர்க்கும் பாளையங்கள் அருகேத் தம் படைகளை நிறுத்தி இருந்த நிலையில் இப்பகுதியிலும் நிறுத்தியிருக்கலாம் என்றும், படையினரோடு வந்து தங்கிய இஸ்லாம் இனத்தவரால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத வாய்ப்புள்ளது.

பாஞ்சாலங்குறிச்சிக்கும் எட்டயபுரத்திற்கும் இடையில் தாமிரபரணிக் கரையோரம் யூசிப்கான் ( கான்சாகிப்) முகாம் அமைத்திருந்த பகுதியில் ‘கான்சாபுரம்’ என்ற ஊர் அமைந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

‘மாவீரன் மருதநாயகம்’ என்ற நூலில் கான்சாகிப் வரலாற்றைத் தந்துள்ள கே. வி. குணசேகரன், ‘போரால் பாதிக்கப்பட்ட பாளையங்களைச் சீரமைத்ததின் மூலம் ‘கான்சாகிப்’ பாளையக்காரர்களால் ‘கான்சா’ என்று அன்புடன் அழைக்கப் பெற்றார்’ என்ற செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். அதனை நோக்கும் போது, அவ்வாறு நன்மை பெற்ற பாளையங்களுள் ஒன்றாக ஊத்துமலை பாளையமும் இருந்திருக்கலாம். ஊத்துமலை பாளையக்காரர்களால் இது உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியோ, ‘மனங்கள் ஒன்றுபட்டால் மதங்கள் எதுவும் பிரச்சனையாக இருப்பதில்லை’ என்ற மேலான சிந்தனை உடையவர்களாக இப்பகுதி மக்கள் இருந்து வருவது பாராட்டுக்குரியது.

ஆதாரம்: ‘ஊத்துமலை ஜமீன்’ நூல்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal