எழுதியவர் – வழக்கறிஞர் சி. அன்னக்கொடி

காத்தாம்மாவுக்கு ஆட்டுக்குட்டின்னா அம்புட்டு உசுரு.அது அவளுக்கு பொறந்தாம் பொறப்புலயே வந்துச்சுன்னு சொல்லலாம். சின்ன நண்டு கணக்கா இருக்கயிலே ஆட்டுக்குட்டிகளை ஓட ஓட வெரட்டி வெளையாடவும்.அதைத் தூக்கிக்கிட்டு எங் கண்ணுகளா பொன்னுகளான்னு தூக்கிக்கிட்டு கொஞ்சுவாள்.
பாக்குற சனமெல்லாம் அடி ஆத்தி ஆட்டுக்குட்டியாப் பொறக்க வேண்டியவ எங்குட்டோ பிள்ளையாப் பொறந்துட்டான்னு கேலி பண்ணி சிரிப்பாக.
அந்த ஊருல ஒரு வெசனமெடுத்த சிறுக்கி காத்தம்மா ஆத்தாளைப் பாத்து ஒரு கேள்வி கேட்க பெரிய கலவரம் ஆயிப்போச்சு.
காத்தம்மா அப்பன் ஒரு கிருசுகிட்டபய எது நல்லது எது கெட்டதுன்னு தெரியாம கோவப்படுறபய. அன்னைக்கு பட்டைச் சாராயம் வேற அடிச்சுட்டு ஒக்காந்திருக்கேன்.
அவன் இருக்கயில அந்த வார்த்தையைச் சொன்னா சும்மா இருப்பானா.
பெரிய சண்டை நாறிநசங்கழிச்சுப் போச்சு தெருவே கூடிப் போச்சு.
அப்படி என்ன கேள்வி கேட்டுப்புட்டா.
அது இருக்கட்டும் காத்தம்மா அப்பனைக் கொஞ்சம் அப்பிடியே திரும்பிப் பார்ப்போம்
காத்தம்மா அப்பன்ஒரு கிருசு கெட்டபய. கள்ளு பட்டய மோந்து பாத்தேலே போதும் எவன்கூடயாவது எகிறிக்கிட்டு நிப்பபான். குடிச்சிட்டா ஒவ்வொருத்தனுக்கும் ஒரு குணம் இருக்கும்.ஒருத்தன் குடிச்சான்னா சிரிச்சிக்கிட்டே இருப்பான். இன்னொருத்தன் யாரைப் பாத்தாலும் அவகளைக் கட்டிபிடிச்சு அழுவான்.இன்னொருத்தன் செவனேன்னு போற கரட்டாண்டிகிட்ட கூட வம்புச் சண்டை இழுப்பாய்ங்க. காத்தம்மா அப்பன் கொஞ்சம் குடிச்சிட்டாலே போதும் படார்ன்னு தீக்குச்சி எடுத்து எதுலாயவது. பத்தவைக்கனுமுன்னு பாப்பான். அவன் கை முனுமுனுன்னு சும்மாவே இருக்காது. அப்படித்தேன் ஒரு தடவை குடிச்சுட்டு வரயில கருப்பண செட்டியார் வைக்கப் படப்பு . ஊருலயே பெரிய படப்பு அதுதேன்.ஊருல யாரு மாட்டுக்கு கூலம் இல்லேன்னாலும் அதுலதேன் போய் பிடுங்கிப் போடுவாங்க.

யாராவது கருப்பணஞ் செட்டியாரிடம் போய்ச் சொன்னா. வீட்டுக்கு கூரை மேயவா பிடுங்கிட்டு போறாங்க. வாயில்லா ஜீவனுக்குத்தானப்பா. போயிட்டு போறாய்ங்க.அந்த படப்பு இருபது பாகம் இருக்கும். ஓடுனாக்கூட மூச்சு வாங்கும். அந்தப் படப்பு வழியாத்தேன் பாதை. குடிச்சுட்டு தள்ளமாடிட்டு வாரான் காத்தம்மா அப்பன். கொஞ்சம் தன்னுசாரு வேற இல்லை. அப்படியே படப்புக்கிட்ட வந்தவன் தள்ளாடி அந்த படப்பு மேலேயே விழுந்துட்டான். உடனே படப்பு மேல விழவும் சட்டை இல்லாத உடம்புக்கு அதுக்கும் அந்த கூலம்பட்டு சுள்சுள்ன்னு அரிச்சிருச்சு. கொசுக்கடிச்சது மாதிரி மேலயும் கீழயும் சொறிஞ்சான். அப்படியே தட்டு தடுமாறி எந்திரிச்சு அந்த படப்பைப் பாத்தான்.

நாம் பாட்டுக்கு சூசுவான்னு போறவன் மேல எருமை மாடு மாதிரி மேல வந்து விழுற.ஒனக்கு என்ன திமிர் இருந்தா எம் மேல வந்து விழுவ.நீ இருந்தாத்தான எம் மேல வந்து விழுவ. இன்னைக்கு உன் சோலிய முடிச்சுப் போடுறேன் அப்படின்னு சொல்லிக்கிட்டு இடுப்புல இருக்குற தீப்பெட்டியை எடுத்தான். அதை எடுக்குறதுக்குள்ள அவன்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. வேட்டியும் துண்டா அவுந்து விழுந்துருச்சு.
அப்படியே மேல பாக்குறான் வானத்துல வெள்ளிக பூராம் மல்லிகைப் பூப்போல வானமடங்க பூத்துக் கெடக்கு.அப்படியே பாத்துட்டு என்ன தீயை பத்த வைக்க முடியலைன்னு கேலி பண்ணி சிரிக்குறீங்களான்ன்னுட்டு உங்களை என்ன செய்யுறன்னு பாருன்னு கீழே கெடந்த கல்லை எடுத்து தட்டு தடுமாறி எறியிறான். அந்த கல்லு இருட்டுல எங்கே போயி விழுந்துச்சுன்னு தெரியலை.
அந்நியாரம் பாத்து ஒரு வெள்ளி சர்ன்னு கீழே விழுந்துச்சு.

உடனே காத்தம்மா அப்பன்காரன் இருந்துக்கிட்டு நான் அந்தக் காலத்திலே அமாவாசை இருட்டுல நான் நெலாவையையே கல் எறிஞ்சு கீழ விழத்தட்டுனவன் இந்த இத்தூண்டு வெள்ளி எம்மாத்திரம். அப்படின்னு அவனா பேசிட்டு திரும்பிப் பாக்குறான் படப்பு அப்படியே யானைகணக்கா நிக்குது. அதைப்பாத்தவன் அது என்னமோ உசுரோட நடமாடுற ஜீவன் மாதிரி நெனைச்சுக்கிட்டு இன்னும் நீ போகலையா. அப்படின்னுட்டு தீக்குச்சியை ஒரு வழியா எடுத்தாச்சு. ஆனா அதை தீப்பெட்டியில உரச முடியலை. தீப்பெட்டி ஒரு பக்கம் போவுது தீக்குச்சி ஒரு பக்கம் போவுது.
அப்பவும் விடலை என்னடி வில்லா எங்கிட்டேயே சேட்டைபண்ணுற . இம்முக்கூண்டு இருந்துக்கிட்டு என் வசத்துக்கு வரமாட்டிக்கியா ஒன்னைய மாதிரி எத்தனை ஆளைப் பாத்துருப்பேன். அப்படின்னு தீக்குச்சியை ஒரு வழியாக ஒரசிட்டான். அந்த நேரம் வெள்ளியெல்லாம் லேசா மறைஞ்சிருச்சு மேகம் கூடிருச்சு அங்கங்கே மின்னல் வெட்டுது.எப்படியாவது இந்த படப்பைக் காப்பாத்திர முடியாதா ன்னு நிலா அங்கிட்டு இங்கிட்டுமா ஓடித்தவிக்குது.

ஆனாலும் இதையெல்லாம் மீறி அந்த படப்பில் ஒரு வழியா வச்சுட்டான்.
தீ காத்துக்கும் அதுக்கும் அப்படியே பறக்குது. வானத்தையே முட்டுது.
பக்கத்துல இருக்குற மரம் மட்டையெல்லாம் பிடிச்சு திமு திமுன்னு எரியுது.நல்லவேளை ஆனைக்குள்ள வீடுக ஒன்னுமில்லை.
இதைப் பாத்த ஊருச்சனமேவாயில்லா ஜீவன் வகுத்தல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டான்னேன்னு சட்டி பானைன்னு கையில் சிக்குனதை எடுத்துட்டு ஓடிவருதுக.

படப்பு ஊருக்கும் அதுக்கும் ஒரு அரை மைல் தூரங்கிறகிறதானல வந்தும் பிரயோசனமில்லாமப் போச்சு.
பொம்பளைகல்லாம் நெஞ்சுல நெஞ்சுல அடிச்சு அழுகுதுக. ஆம்பளைகபூராம் கருப்பணஞ் செட்டியாரைச் சுத்தி கேதம் விசாரிக்கிறது மாதிரி உக்காந்து இருக்காங்க.
இதை எவன் வச்சான்
எவன் வச்சான் தேடுறாங்க
காத்தம்மா அப்பன் சிக்கலை.
கூட்டம் கலைய மாட்டேங்குது பொங்கலுக்கு நாடகத்தைப் பாக்க வந்த கூட்ட மாதிரி உக்காந்து இருக்காங்க.
கருப்பணஞ்செட்டியாருதேன்
ஆளுகளைப் பாத்து.
விடிய விடிய உக்காந்து இருந்தாப்புல வெந்த படப்பு வந்துறப் போவுதா .
காலையில அவங்க அவங்க வேலையைப் பாக்கப் போனுமில்லை. எல்லாரும் எந்திரிச்சு வீட்டுக்கு போங்க மத்ததை காலையிலபேசிக்கிருவோமுன்னாரு.
எல்லாரும் போயிட்டாங்க. கருப்பணஞ் செட்டியாருக்கு மட்டும் தூக்க வரலை. இந்த ஊருல நமக்கும் எதிரி இருக்கானா.நம்ப முடியலையே. மனசார யாருக்கும் கெடுதலை செய்யலையே . இந்த தியை வச்சவனுக்கு என்ன கெடுதலையைப் பண்ணனுனோமுன்னு தெரியலையே. அவன் எவன்னு தெரிஞ்சா நான் என்னப்பா தீங்கு செஞ்சேன்னு கேட்டுட்டாத்தேன் அந்த படப்புத் தீயைவிட மனசுல வேகமாக எரியுற அந்த தீயை அணைக்க முடியும் அப்படின்னு நெனைச்சுக்கிட்டே வாசலிலே ஒக்காந்துட்டாரு. கண்ணுபட்டுன்னு போடலை.
கோழி கூப்பிட்டுருச்சு பொம்பளைகல்லாம் எந்திருச்சு மாட்டுச் சாணியை எடுத்து குண்டாச் சட்டியில போட்டு தண்ணிய ஊத்தி கலக்கி தொழிக்கிறாக. அப்ப பொம்பளைக பூராம் கூடி கூடி இதைப் பத்தித்தான் பேசுறாக.
அந்த நேரத்துல ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுல ஒளிஞ்சவன் மாதிரி கருப்பணஞ் செட்டியாரு கொட்டத்துல இருந்து எந்திரிச்சு வாரான். வேட்டியும் இல்லாம சட்டையும் இல்லாம ஒரு முண்டம் எந்திரிச்சு வந்தது மாதிரி வாரான். ராத்திரி தீயை வச்சுட்டு அப்படியே தள்ளமாடிட்டு வந்து படுத்தவனால எந்திரிக்க முடியலை. இடுக்கியில எலி அம்புட்டது மாதிரி அம்புட்டுட்டான்.
பிறகென்ன ஊர்க் கூட்டம் கூடுச்சு. கருப்பணஞ்செட்டியாரு எவ்வளவோ வேணாமுன்னு சொல்லியும் ஊருக்காரங்க விடமாட்டேன்னு நட்டுக்க நின்னுட்டாங்க. அபதாரத்தைக் கட்ட வழியில்லை . வாய்தாக் கேட்டான் மகுமை வரிக்கு வேணா வாய்தாக் கொடுக்கலாம். தீயை வச்சுட்டு குமரிப் பொண்ணு மாதிரி நின்னுட்டாப்புல வாய்தாக் கொடுக்க முடியாது. விக்காத வித்தாவது செத்த நாழிகையில கட்டனும். இல்லாட்டி ஊரைவிட்டு தள்ளிவச்சுருவோம் பாத்துக்கிருவோம்.

அந்த நேரம் கருப்பணஞ்செட்டியாரு வீட்டு வரைக்கும் போயிட்டு வாரேன்னு எந்திரிச்சு போனாரு.
அங்கே போனா வீட்டுக்குள்ளே ஒரே அழுகைச் சத்தம். படப்பு வெந்ததுல மனசு தாங்காம அழுவுறாமுலன்னுட்டன்னு உள்ள போனா காத்தம்மா ஆத்தா அழுதுக்கிட்டு ஒக்காந்திருக்காள். செட்டியாரு பொண்டாட்டி அவளை தேத்திக்கிட்டு இருக்கா.
நம்ம படப்பை அவன் புருஷன் தீயைவச்சுப்புட்டான். நம்மதானே அழுவனும் இவர் எதுக்கு அழுவனும். செட்டியாருக்கு புரியலை.
செட்டியாரு போய் பக்கத்துல நின்னவுடனே காத்தம்மா ஆத்தா செட்டியாரு காலைப்பிடிச்சுட்டு ஒரே அழுகை.
செட்டியாரு இருந்துக்கிட்டு எனக்கு இதெல்லாம் பிடிக்காது. அப்படி இருந்தாலும் இப்ப என் கையை மீறிப் போயிருச்சு . நானே சொல்லிக்கூட ஊருக்காரங்கக கேக்கமாட்டேனுட்டாங்க. இப்ப என் காலைப் பிடிச்சா நான் என்ன செய்யுறது.
அபதாரத் தொகை பெரிய தொகையா போட்டுட்டாங்கய்யா. கழுத்துல காதுலகூ ஒன்னுமில்லை அய்யா. உங்க வயலுக்கு நடுவாட்டம் கெடக்குற அந்த அஞ்சு மரக்கால் வெதப்பாட்டை எடுத்துக்கிட்டு பணத்தை கொடுங்கைய்யா. நீங்கள் சொல்லுற இடத்தில எம் புருசனைக் கையெழுத்து போடச்சொல்லுறேன் அப்படின்னு சொல்லிட்டு சாரை சாரையாக கண்ணீர் விட்டாள்.
இதைக் கேட்ட செட்டியாரு ஒரு நாழிகை எதுவும் பேசலை. எந்திரிச்சு மச்சு வீட்டுக்குள்ளே போயி பணத்தை எடுத்து காத்தம்மா ஆத்தாகிட்ட கொடுத்தாரு.
பணத்தை வாங்குன காத்தம்மா ஆத்தா கையெடுத்து கும்பிட்டு நீங்கள் எப்பக்கூப்பிட்டாலும் வந்து கைநாட்டு வச்சுரோமுய்யா.
சரி இப்ப போயி பணத்தை கட்டுன்னு சொன்னாரு.
காத்தம்மா ஆத்தா ஓடிப் போயி அபதாரத்தைக் கட்டினாள்.
ஊருக்காரங்களுக்கு ஒரே ஆச்சரியம்.இம்புட்டு தொகையை எங்குட்டு பொரட்டுனான்னு. குசு குசுன்னு பேசிக்கிறாங்க.
எதையும் கண்டுக்கிடலை அபதாரத்தைக் கட்டிட்டு புருஷனைக் கூட்டிட்டு வந்துட்டா.
செட்டியாருட்ட காட்டை எழுதித் தாரேன்னு சொல்லி பணம் வாங்குன விசயம் ஊருக்குள்ள கசிஞ்சிருச்சு.
செட்டியாருக்கு அந்த காட்டு மேல ஒரு கண்ணாவே இருந்துருப்பாரு போலுக்கு.
இவன் காட்டை வித்து கூலத்தை வாங்கிட்டான்.
செட்டியாரு கூலத்தை வித்து காட்டை வாங்கிட்டாரு. கூட்டிக் கழிச்சு பாத்தா செட்டியாருக்கு லாபந்தேன் அப்படின்னு பேசிக்கிட்டாங்க.
இன்னும் சில பேரு செட்டியாருதேன் கள்ளை வாங்கிக் கொடுத்து கணக்கு பண்ணிட்டாரோ அப்படின்னு நரம்பு இல்லாத நாக்கு கண்டபடிக்கு பேச ஆரம்பிச்சுருச்சு.
இரண்டு நாம் பொழுது கழிஞ்சிச்சு காத்தம்மா ஆத்தா புருசனைக் கூப்பிட்டுட்டு செட்டியாரு வீட்டுக்கு போயி எம் புருசன்கிட்ட கையெழுத்து வாங்கிக்கோங்கய்யா.
சிரிச்சாரு செட்டியாரு
என்னங்கய்யா சிரிக்கிறீங்க.
கம்மாயிக்கு தண்ணீ வந்துருச்சு உம் புருசனை நாத்தப் பாவச் சொல்லு.
அய்யா என்ன சொலுறுங்கய்யா.
என் அய்யா சாவயில அவரு நெறையாச் சொன்னாரு அது எதுக்கு சொன்னாருன்னு அப்ப தெரியலை.அதை எதுக்கு சொன்னாருன்னு இப்படத்தின் தெரியுது.
அய்யா சொன்னது அப்படியே பதிஞ்சு நிக்குது.
காத்தம்மா வீட்டுலதாண்டா நான் வளந்தேன். பெத்ததுதான்டா உங்க ஆத்தா நெஞ்சுல போட்டு வளத்ததுபூராம் காத்தம்மாதான்டா. அப்ப நம்ம வீட்டுல ரொம்ப கஷடம்ப்பா. கஞ்சிக்குகூட வழியில்லை.காத்தம்மாதேன் என்னைய நெஞ்சுல சுமந்தா அது யாருன்னு கேக்குறியா அதான்டா நடுக்காட்டுக்காரன் அப்பத்தா தான்டா.அவங்க வீட்டுல வந்து எது கேட்டாலும் இல்லைன்னு மட்டும் சொல்லிராதே அப்படின்னு சொல்லிட்டு சத்தியம் வாங்கிட்டு செத்துருக்காரு.
அய்யா உங்க படப்புல எம் புருசன் தீயை வச்சுருக்காரு. அய்யா.
உண்மைதான் அதுக்கு மேல எங்க அய்யா சொல்லிட்டு போயிட்டாரே.காத்தம்மாதேன் எங்க அய்யனைக் காத்த ஆத்தா
அப்போது காத்தம்மா ஆட்டுக்குட்டியைப் பத்திக்கிட்டு ஓடிவாரா.
செட்டியாரு வாத்தா எம் அப்பத்தான்னு ஓடிப் போயி தூக்கி கொஞ்சுனாரு.
இதெல்லாம் இருக்கட்டும் அந்த வெசனமெடுத்த சிறுக்கி என்னா கேள்வி கேட்டான்னு சொல்லாமப் போனா எங்க தலை வெடிச்சருனுமுன்னு சொல்லுறது எனக்கு கேக்குதய்யா.
அவ கேட்ட கேள்வி இதுதான்.
ஏன்டி உம் பிள்ளை எந்த நேரமும் கோழிக் குஞ்சோடயே திரியிறாளே.
நீ இவளை உம் புருசனுக்குத்தேன் பெத்துப் போட்டீயா உன்னையையே சுத்திக்கிட்டே திரியுமே அந்த மோளைக் கெடாய்க்கு பெத்து போட்டியா.
இதுக்கு சண்டை வராம அவளுக்கு கோழி அடிச்சு கொழம்பா ஊத்துவாங்க.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x