தன் எண்ணக்களின் வண்ணங்களை எல்லாம் ஒருசேர குழைத்துக் கவிதைகளாக வரைந்திருக்கிறார் கவிஞர். தன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளையெல்லாம் சுவை குன்றாது ஞாபகத் தூறலென கவிதைத்துளிகளை சிதறியிருக்கிறார். இதோ அவரது கவிதைச் சிதறல்களில் ஓரிரு துளிகள்…
“சனத்திரள்களின் கால்களில்
மிதிப்படும் அற்பப்புழு…
சாக்கடையில் வீசப்பட்டுவிடும்
தொப்புள்கொடியறுத்த சிசு…
கூட்டாக வன்புணர்ந்து
கிழிக்கப்படும் யோனி…
சிதைக்கப்படும் ஆலயம்
அது ஒரு வெற்றுச்சொல்
அவ்வளவே”…
ஆம்… நீதி என்பது தர்மதேவதையின் கண்களில் கட்டப்பட்ட கருப்பு துணி.. வேறென்ன பெரிதாய் சொல்லிவிட முடியும்.. அச்சிடப்பட்ட தாள்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டுவிட்டதாலோ என்னவோ .. நீதி என்பது ஒரு வெற்றுச் சொல்லாகவே இருந்து
விடுகிறது.
“எப்படியும் நீயற்ற ஓர்நாளை
பரபரப்பாக வைத்திருக்க
என்னாலும் இயலும் தான்
ஆனாலும்
ஆயிரம் அலைகளை
நொடிக்கொருத் தரம் அனுப்பும் கடலை
வெறித்தபடி
எனக்கான அலைக்கு
இன்னும் காத்திருக்கிறேன்”…
நிச்சயமாக முடியாத காரியம் தான் மனதிற்கு பிடித்த ஒருவரின் நினைவுகளை ஒருகணம் மறத்தலென்பதும்..அது அழகான நினைவுகளாகவும் இருக்கலாம். அழவைக்கும் நினைவுகளாகவும் இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக ஆழமான நினைவுகள்.
” சக பயணியின்
கைக் குழந்தையின்
பிஞ்சுப் பாதங்களைத்
தடவித் தருகிறாள்..
எட்டு ஆண்டுகளாக விளையாத
தன் அடிவயிற்றையும்
அவ்வப்போது
தடவிக் கொள்கிறாள்
அனிச்சையாக”..
வலிகளின் வரிகள். எத்தனை குழந்தைகள் பெற்றாலும் தாய்மை உணர்வு குறைவதேயில்லை. அப்படியிருக்க.. பிள்ளைப் பெற்றவர்களை விட பிள்ளைப் பெறாவருக்கே தாய்மை அதிகமாக ஊற்றெடுக்கிறது என்பது உண்மை தான்.
“அப்பாவைப் போலல்லாமல்
அவர் குடித்திருக்கிறார்
யாரிடமோ உரத்துப பேசுகிறார்.
படித்தும் இருப்பார் என நினைக்கிறேன்…..
எதிரில் நின்று புன்னகைத்தும்
சலனமற்றுக் கடக்கிறார்
அப்பாவின் சாயலில் இருக்கிறார்
அவ்வளவு தான்”…
அப்பாவைப்போல அப்பாவின் சாயலில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் யாரும் அப்பாவாகிவிட முடியாது.. நிதர்சனம். சாயல்கள் எப்போதும் சாயல்களே.. நிஜமாகிட முடியாது.
“இரவின் நீளத்தை
நீட்டித்துக் கொண்டே போகிறது
ஒரு சொல்…
கடைசிச் சொல்லில்
கொஞ்சம் கவனமாயிருந்திருக்கலாம்
கொஞ்சம் கனிவாகவும்”..
ஓர் நாளில் நாம் ஆயிரக்கணக்கான சொற்களைக் கடந்து வருகிறோம். ஆனால் அத்தனையும் நம்மை பாதித்துவிடுவதில்லை. யாரோ ஒருவரின் ஏதோவொரு சொல் மட்டும் நம்மை ஏதோ செய்யும்… ஏதேதோ செய்யும்.. உணர்வுகளைப் பிழியும்.. உறக்கத்தைத் தொலைக்கச் செய்யும்… அந்த ஒரு கனிவற்ற சொல்…
“தாத்தாவின் நினைவிடத்தைப்
பார்க்க வேண்டுமென
ஆசைப்பட்டவளை
வெகுநாட்களுக்குப் பின்
சொந்த ஊருக்குக்
கூட்டிச் சென்றேன்..
ஆச்சரியம்
புதைத்த அப்பா
கட்டிடமாக முளைத்திருக்கிறார்”..
இப்போது விளைநிலங்களெல்லாம் விலைநிலங்களாக்கப்படும் நிலையில் நினைவிடங்களையும் விட்டுவைக்கவில்லை என்பது பெரும் வருத்தத்திற்குறிய விஷயம்தான்… என்பதை எவ்வளவு நேர்த்தியாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.
“அறை நிறைய
தான் வரைந்த வண்ண ஓவியங்களை
ஒட்டி வைத்திருக்ககறாள்..
ஒவ்வொன்றோடும்
மிகக் குறைந்த பட்சம்
ஒரு நிமிடமேனும் உரையாடுகிறாள்…
அறைக்குத் திரும்புகிறேன்
கவிதைகள் காத்திருக்கின்றன
வெற்றுத் தாள்களும்”..
குழந்தைகளின் அனைத்து செயல்களும் நமக்கு நிச்சயம் ஒரு கவிதையை நமக்கு பரிசளிக்கும். அந்த வகையில் கவிஞரின் கவிதைகள் அனைத்தும் அவர் மகள் தந்த வரமென்றே நினைக்கிறேன்.
“இனறைக்கு என்ன வேடம்
என்று கேட்டு தான் விடிகிறது
ஒருநாள்
இன்றைக்கு எந்த நாடகம்
என்று கேட்டப்படிதான்
அதன் முகத்தில்
விழிக்கிறோம் நாம்”…
நிச்சயமாக.. முகமூடிகளை அணிந்தே பழக்கப்பட்டு விட்டது நம் வாழ்க்கை. முகமூடிகளுக்குள் சுயமிழக்கும் சுயநலமிக்க வாழ்க்கையைத்தானே சுதந்திரமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கை என்ற நாடக மேடயில் வாழ பழகவில்லை நாம் வேடமிட்டு நடிக்கத்தானே பழகிக்கொண்டிருக்கிறோம்.
“ஓயாது அழுதுக்கொண்டிருக்கிறது
குழந்தை
சளைக்காது சமாதானம்
செய்கிறாள் அம்மா..
அம்மாக்களுக்கு
நான்கு கண்களும்
ஆறு கைகளுமாக
அரூப உறுப்புகள்
முளைத்துவிடுகின்றன
பகல்களில்”…
ஆமாம்.. அம்மாவிற்கு மட்டும் எங்கிருந்தோ முளைத்துவிடுகிறது எண்ணிலடங்கா கண்களும் கைகளும்… ஆதலால் தானோ என்னவோ தாய்மை போற்றப்படுகிறது. அத்தனை கண்களும் கைகளும் இல்லை என்றாலும் பிள்ளைகளை சமாளிப்பது என்பதும் இயலாத காரியம் தான்.
“இப்ப அழகு
சின்ன வயதில் பேரழகு
என்பாள் அம்மா விகல்பமின்றி
புகைப்படங்களில் இல்லாத
சின்ன வயது நான்
அவ்வளவு அழகாக இருக்கிறேன்
அம்மாவின் நினைவுகளில்”…
அம்மாவிற்கு நாம் எப்போதும் அழகுதான். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா.. குழந்தையின் ஆயுள் குறையக் கூடாதென்று அன்று புகைப்படம் எடுக்காத அம்மாவின் நினைவில் நாம் என்றுமே குழந்தையாகத்தான் இருக்கிறோம் என்பதை அழகாக கூறியிருக்கிறார் கவிஞர்.
“நினைவுகளின்
பேரகழிக்குள் மூழ்கி
ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும்
உருவத்தை இழுத்து வந்து
அருகில் அமர்த்திவிடுகிறது
ஒரு பாடல்”..
நிதர்சனம். ஒவ்வொருவரின் வாழ்விலும் நிகழும் நிகழ்வைத்தான் கவிஞர் இங்கே அழகாய் காட்சிப்படுத்தியுள்ளார். நாம் மறக்க எத்தனிக்கும் ஏதோவொன்றை ஓர் பாடல் நினைவில் நிறுத்திவிட்டு செல்லும் மிகவும் சுலபமாக.
“காணாமல் போனவர்கள்
இல்லாமல் போனவர்களை விடவும்
அதிகம் தொந்தரவு செய்பவர்கள்
அதிகம் அழ வைப்பவர்கள்
நம்மை தண்டிக்க
இல்லாமல் போவதை விடவும்
காணாமல் போவது
சிறந்த வழி என்று தெரிந்தவர்கள்”..
ஆமாம்… இல்லாமல் போனவர்கள் இவ்வளவு இம்சை செய்யமாட்டார்கள். ஆனால் காணாமல் போனவர்கள் தான்.. நம் நினைவில் நின்று கொல்வார்கள்.. ஒரு வார்த்தை பேசியிருந்திருக்கலாமோ… மன்னிப்பு கேட்டு இருந்திருக்கலாமோ… போன்ற பல எண்ணங்களை எப்போதும் நம் மனதில் சுழலவிடுபவர்கள்.. அருமையான படைப்பு.
“மொட்டை மாடி
நெகிழிப்புட்டியில்
வாழ்க்கையை
நிறைத்துக் கொள்ளும் அதை
செடியென்றோ
மரமென்றோ
உயிர் என்றோ
சொல்ல நடுங்குகிறது”…
அதானே.. பரந்து விரிந்த உலகத்தில் சுதந்திரமாய் வாழ்தல் எனும் போதே எவ்வளவு தடைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு சிறு நெகிழிப்புட்டியில் வாழும் தாவரம் எவ்வளவு போராட வேண்டியிருக்கும். அவற்றிடமிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது.

 • அமரர் ஊர்தி… கவிதையில் ஒரு தந்தையின் ஏக்கம் தெளிவாய் வெளிபடுகிறது. ஆம்.. ஆதலால் தான் பதனப்பெட்டி கூட மகன் கேட்ட பெரிய ஜாமின்ட்ரி பாக்ஸாக அவருக்கு தென்பட்டிருக்கிறது.
 • புத்தகப் புழு… கவிதையில் எடைக்குப் போடப்படும் பழைய புத்தகத்திலிருந்து வெளியேறும் புத்தகப்புழு இனி அது எங்கு வாழும்? என்ற கேள்வியில் கவிஞரின் மனிதாபிமானம் வெளிப்படுகிறது..
 • கடந்த காலத்துக்கான அழிப்பான் _ கவிதையில் ஏதேதோ கடந்த கால நினைவுகளை அழிப்பதற்கான அழிப்பானை தேடித் தவிக்கிறார் கவிஞர். ஆம் அழிப்பான்கள் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்.
 • திரும்புதல் சாத்தியமற்ற பாதை _ தன்னம்பிக்கை துளிர்விடுகிறது. நம்மால் மிகவும் விரும்பப்பட்ட ஒருவரால் நாம் எவ்வளவு வெறுக்கப்பட்டாலும்… நாம் திரும்ப திரும்ப அங்கேயேதான் நின்றுக்கொண்டிருப்போம் திரும்பி வர மனமின்றி..
  இப்படி உணர்வுபூர்வமான கவிதைகளை வஞ்சமின்றி வாரி இறைத்திருக்கிறார் கவிஞர். ஆம்.. கவிஞரின் கவிதைகளில் மூழ்கியவர்களுக்கு இது திரும்புதல் சாத்தியமற்ற பாதைதான். மனம் கவிதைகளிலையே லயித்துக் கிடக்கிறது.
  நன்றி.. வணக்கம்.
  வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
  விலை : ரூபாய். 100/-.
  தொடர்பு எண் : 98422 75662.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
இரா.பூபாலன்
3 years ago

மிக்க மகிழ்ச்சி… நன்றியும் அன்பும்

1
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal