முள்மீதும் கல்மீதும் விழுந்து காயப்படாதவன் பூக்களைப் பார்ப்பதற்குக்கூடத் தகுதியற்றவன். எதிரி பலசாலியோ, திறமைசாலியோ வெற்றியோ தோல்வியோ கடைசி வரை போராட வேண்டும் என்கிற விதியின் கீழ் வாழ்கிற உயிரினங்களில் ஒன்று கழுதைப்புலி. “இங்க சிங்கம் நிம்மதியா வாழணும்னாலும் நான்தான் முடிவு பண்ணணும். சிறுத்தை நிம்மதியா வாழணும்னாலும் நான்தான் முடிவு பண்ணணும்” என்கிற அளவுக்கு மற்ற விலங்குகளுக்குச் சிம்மசொப்பனமாக இருப்பவை கழுதைப்புலிகள். வேட்டையாடுகிற விஷயத்தில் சூழ்ச்சியை மட்டுமே நம்பி காய் நகர்த்துகிற கழுதைப் புலிகளின் சர்வைவல் கதைகள் பலரும் அறியாதது.

60-லிருந்து 80 வரை இருக்கிற கழுதைப்புலிகள் கூட்டத்தில் பெண்தான் எல்லாமே. பெண்ணைத் தவிர்த்து ஆண் கழுதைப்புலிகளால் எந்த ஒரு விஷயத்தையும் முன் எடுக்கவே முடியாது. பெண் கழுதைப்புலிதான் தலைவியாக இருக்கும். ஆண் கழுதைப்புலிகளுக்கும் பெண் கழுதைப்புலிகளுக்கும் உடலளவில் எந்த வேறுபாடுகளும் கிடையாது. ஆண் கழுதைப்புலிகளுக்கு இருப்பதைப் போன்ற ஆண் குறி பெண் கழுதைப்புலிகளுக்கும் உண்டு. இதற்குப் போலி ஆண் குறி என்று பெயர். `சூடோபெனிஸ்’ (Pseudopenis) என்று சொல்லுவார்கள். உடலோடு ஒட்டியிருக்க வேண்டிய பெண்குறி, ஹார்மோன் கோளாற்றால், சில இன்ச் நீளத்துக்கு வெளியே நீண்டு காட்சி தரும். பெண் தன்னுடைய குட்டிகளைப் போலி ஆண் குறி வாயிலாகத்தான் பிரசவிக்க முடியும். பிறப்புதான் ஒவ்வொரு உயிரின் சர்வைவலின் முக்கியமான பகுதி. ஆனால் அது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. சம்பந்தப்பட்ட இரண்டு உயிர்களுக்கும் அது இரண்டாம் ஜனனம்தான்.

கழுதைப்புலியின் 23 இன்ச் அளவுக்கு விரிவடைகின்ற போலியான ஆணுறுப்பில் 2 கிலோ எடை கொண்ட குட்டியை பிரசவிப்பது மனித இனம் நினைத்துப் பார்க்க முடியாத துயரம். ஆனாலும், பிரசவ காலம் முடிந்தால் பெற்றெடுத்துத்தானே ஆக வேண்டும். இந்தத் தருணத்தில் இரண்டு பேரில் ஒருவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். முதல் குட்டியைப் பிரசவிக்கும் பெண் கழுதைப்புலிகளில் 15% இறந்துவிடுகின்றன என்கிறது ஓர் ஆய்வு. சில குட்டிகள் பிறக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விடுகிற சம்பவங்களும் நிகழும். சில நேரங்களில் காயம் ஏற்படுகின்றன. இனப்பெருக்க நேரத்தில் மூன்றிலிருந்து நான்கு குட்டிகள் வரை ஈனுகின்றன. உண்மையான சர்வைவல் போராட்டம் இதற்கு பிறகுதான் ஆரம்பமாக இருக்கிறது. அதிலும் ஆணாய் பிறந்த குட்டிகளின் நிலைமை பரிதாபத்துக்குரியது. குட்டிகள் ஈன்ற நாளிலிருந்து நான்கு வாரங்கள் வரை அவை மண்ணுக்குள் வளை தோண்டி வசிக்கின்றன. வேறு யாரையும் அங்கு அவை அனுமதிப்பதில்லை. யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுடனேயே போராட வேண்டிய நிலை ஒவ்வொரு உயிரினத்துக்கும் வரும், அதில் கழுதைப்புலிகளும் விதிவிலக்கல்ல. குட்டிகளில் யார் பெரியவன் என்கிற சண்டை சிறு வயதிலேயே கழுதைப்புலிகளுக்குள் வந்து விடும். தாய் கழுதைப்புலிகளுக்கு இயற்கையில் குட்டிகளுக்கு பாலூட்ட இரண்டு முலைக்காம்புகள் மட்டுமே இருக்கும். இரண்டு காம்புகளில், இருக்கிற நான்கு குட்டிகளில் யார் முதலில் பால் அருந்துவது என்கிற சண்டை குட்டிகளுக்குள் நடக்கும். இதில் பலம் பொருந்திய பெண் குட்டிகள் ஆண் குட்டிகளுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றுவிடுகின்றன. சில நேரங்களில் சண்டையின் முடிவில் ஆண் குட்டிகளைப் பெண் குட்டிகள் கொன்றுவிடுகின்றன. தன்னுடைய இனத்துக்குள் `சண்டை செய்து’ தப்பிப் பிழைக்கிற ஆண் குட்டிகள் மிக சிலவே. ஆண் குட்டிகள் வலிமை மிகுந்த பெண் குட்டிகளோடு சண்டையிட்டு வெல்ல வேண்டும்.

60-லிருந்து 80 வரை இருக்கிற குழுவில் புதிதாகப் பிறந்த குட்டியின் வாசனையை வைத்து மற்ற கழுதைப்புலிகள் குட்டிகளைக் குழுவில் சேர்த்துக்கொள்கின்றன. தாயிடம் பால் குடித்து வளர்கிற குட்டிகள் வளைகளில் பாதுகாப்பாக இருக்கும். இரை தேடிச் செல்கிற தாய் கழுதைப்புலி திரும்பி வரும் பொழுது இரையோடு திரும்பிவரும். பால் சுவையில் ஒரு கட்டத்தில் மாமிச சுவைக்கு மாறுகின்ற காலகட்டம் குட்டிகளுக்கு மிக முக்கியமான காலகட்டம். இனி அவை பால் குடிப்பதற்குத் தயாராக இல்லை. இங்கும் ஆண் குட்டிகளின் நிலை பரிதாபம்தான். இரைக்காக மற்ற பெண் குட்டிகளுடன் போராட வேண்டிவரும். கிடைப்பதை உண்டு சர்வைவல் ஆவதே அவற்றுக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும். எல்லாவற்றிலும் இருந்து தப்பிப் பிழைக்கும் ஆண் குட்டிகள் பருவம் அடைகிற வரை தாயுடன் இருக்கின்றன. பருவம் வந்ததும் ஆண் குட்டிகள் குழுவிலிருந்து பிரிந்து செல்கிற ஆண் கழுதைப்புலிகள் வேறு ஒரு கூட்டத்துடன் இணைந்துகொள்கின்றன. அதிலும் ஆண் கழுதைப்புலிகளுக்கு சிக்கல்தான். இன்னொரு குழுவில் நினைத்தவுடன் இணைந்துகொள்ள இயலாது, அதற்கும் ஆண் கழுதைப்புலிகள் சண்டை செய்தாக வேண்டும். மற்ற குழுவில் உள்ள கழுதைப்புலிகளை அவ்வளவு எளிதில் இன்னொரு குழுவில் எந்தக் கழுதைப்புலிகளும் ஏற்றுக்கொள்ளாது. சண்டை செய்துதான் அவற்றோடு சேர வேண்டும்.

கழுதைப்புலிகளின் பலமே அவை சேர்ந்து இருப்பதுதான். தனித்தனியாக இருப்பது போலவே தோன்றும். ஆனால், இரை சிக்கிவிட்டால் ஒரு வித ஓசையை வெளிப்படுத்தி மொத்த குழுவையும் வரவழைத்துவிடும். வேட்டையாடுகிற எல்லா தகுதிகளும் இருந்தாலும் கழுதைப்புலிகள் அவ்வளவு எளிதில் வேட்டையாடுவதில்லை. சிங்கமோ சிறுத்தையோ ஒரு இரையை வேட்டையாடும் வரை கழுதைப்புலிகள் காத்திருக்கும். சிங்கம் இரையை வேட்டையாடி வீழ்த்திவிட்டால் மொத்த கழுதைப்புலிகளின் கூட்டமும் சிங்கத்தை சூழ்ந்து வெறுப்பேற்றும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சிங்கமோ சிறுத்தையோ வேட்டையாடிய இரையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட வேண்டியதுதான். அப்படிக் கிடைக்கிற “ப்ரீ மீல்”தான் கழுதைப்புலிகளின் சர்வைவலுக்கு உதவியாய் இருக்கிறது.

மற்ற விலங்குகள் கழுதைப்புலிகளிடம் சண்டையிடாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் “சண்டை செய்ற அளவுக்குக் கழுதைப்புலிகள் தகுதியானவை இல்லை” என நினைப்பதுதான். கழுதைப்புலிகள் பலம் வாய்ந்த தாடையை கொண்டவை எப்படியான விலங்கின் எலும்பையும் கடித்தே உடைத்து விடுகிற அளவுக்கு பலமானவை. எலும்பை உடைப்பவன் (Bone crushers) என்கிற பட்ட பெயரும் இவற்றுக்கு உண்டு. மற்ற விலங்குகளின் குட்டியை வேட்டையாடி அவற்றைக் கொல்வதுதான் இவற்றின் முக்கியப் பணியே. சிங்கமும் கழுதைப்புலிகளும் ஒரே எல்லைக்குள் வாழ்வதால் ஒரே உணவுக்காக இரண்டுமே சரிவிகித அடிப்படையில் சண்டையில் ஈடுபடுகின்றன. அதனால்தான் இரு விலங்குகளும் எதிரியின் குட்டிகளைக் கொன்றுவிடுகின்றன. கழுதைப்புலிகளிடம் சிங்கக் குட்டிகள் கிடைத்துவிட்டால் சின்னாபின்னமாக்கிவிடும். கழுதைப்புலிகளுக்குப் பயந்துதான் சிங்கமும் சிறுத்தையும் தன்னுடைய குட்டிகளை இரவு பகலாக பாதுகாப்பான இடத்துக்குத் தூக்கிக்கொண்டு திரிகின்றன.

சர்வைவல் ஓர் உயிரை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும். அதில் பயணித்து பிழைப்பதும் இறப்பதும் அதனதன் திறமையை அடிப்படையாகக் கொண்டதுதான்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal