
பின்னால் கொல்லைப் பக்கத்திலிருந்து ஏதோ ஒரு பெருஞ்சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தாள் முல்லை. பகலெல்லாம் வேலை செய்த அலுப்பில் பக்கத்தில் அடித்துப் போட்டதைப் போல் சுருண்டு கிடந்தாள் பொன்னி. அந்த வீட்டு வேலைக்காரி. முல்லைக்கு எல்லாம் அவள்தான். அதுவும் குழந்தை பிறந்த இந்தச் சில நாட்களாய்ப் பொன்னிக்கு மூச்சுமுட்ட வேலை. இரவெல்லாம் அப்பப்போ ‘நை நை’ என்று சிணுங்கிக் கொண்டிருக்கும் குழந்தை கூடக் கண்ணயர்ந்து உறங்கிக் கிடந்தது. மாடக்குழியில் கைவிளக்கு ‘முணுக் முணுக்’-கென்று எரிந்துகொண்டிருந்தது. முதலில் கேட்ட சத்தம் இப்போது கேட்கவில்லை. இருப்பினும் முல்லைக்கு மனசு கேட்கவில்லை. “அடீ, பொன்னி” என்று உரத்தும் இல்லாமல், குசுகுசுவென்றும் இல்லாமல் அடித்தொண்டையில் குரலெழுப்பிக் கூப்பிட்டாள் முல்லை. திடுக்கிட்டு எழுந்த பொன்னி, “என்ன மதினி, கூப்பிட்டியா?” என்று கேட்டாள். “பின்னாடி என்னமோ ஒரு சத்தம் கேட்டிச்சு, அத என்னாண்டு போய்ப் பாரேன்” என்றாள் முல்லை. எழுந்து உட்கார்ந்து சேலையைச் சரிசெய்துகொண்டு, அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தவாறு பொன்னி எழுந்து போனாள். பின்கதவுத் தாழ்ப்பாளை நீக்கி மெல்லத் திறந்து பார்த்தாள்.
பார்த்தவள் திடுக்கிட்டாள். பின்பக்க முள்வேலி சாய்ந்து கிடந்தது. மெதுவாக எட்டி வலப்பக்கம் பார்த்தாள். அங்கே கட்டிக்கிடந்த எருமையைக் காணோம்! புரிந்து கொண்டாள். கதவை மீண்டும் அடைத்துத் தாளிட்டுப் படுக்கைக்கு வந்தாள். “அந்தச் சனியந்தான், அத்துகிட்டுப் போயிருச்சு” என்றாள். “என்னாடி சொல்ற, நம்ம அன்னத்தாயியவா?” என்று கேட்டாள் முல்லை. “ஆமா, நீதான் அன்னத்தாயி, அன்னத்தாயி-ன்னு கொஞ்சிக்கிடணும், விசுவாசங்கெட்ட நாயி, வெடுக்கின்னு பிடுங்கிக்கிட்டுப் போயிடுச்சில்ல, அதுவும் அர்த்தச் சாமத்தில” என்றாள் பொன்னி.
“இந்த நேரத்துல அது எங்கடி போயிருக்கும்?”
“கழுத கெட்டாக் குட்டிச் சுவரு, அந்தப் பாழாப்போன சகதிக்குள்ள போயி, ‘சதக், சதக்’-குன்னு செடிகொடியெல்லாம் ஒளப்பி, குளத்துல கெடக்குற பூவப் பறிச்சுத் திங்கத்தான்”
“ஏண்டி, அத நல்லாக் கட்டிப் போடலியா?”
“கட்டெல்லாம் நல்லாத்தான் போட்டிருந்தேன். இத்தாந்தண்டிக் கயறு. அதையுமில்ல அத்துட்டுப் போயிருக்கு, வரட்டும் பேசிக்கிறேன்”
“ஏண்டி, அதுக்கு இங்க என்னடீ கொற வச்சோம்?”
“திமிரு மதினி, கொள்ளத் திமிரு. இவ என்னா செங்சுருவா-ங்கிற தெகிரியம். நீ தூங்குத்தா, பிள்ளத்தாச்சிக்காரி, காலைல பேசிக்கலாம்… வீட்ல இருக்குறவகளே வெளிய மேயப்போனா… எருமைக்குக்கூட எளக்காரமாப் போச்சு”
“ஆரம்பிச்சுட்டியா, ஒம் புராணத்த, செத்த நிறுத்திட்டுத் தூங்கு”
“க்குங்”
சற்றுநேரம்தான் கழிந்திருக்கும். மீண்டும் பின்னால் ஏதோ அரவம் கேட்டது. ஏதோ ஆள் நடமாட்டம் மாதிரி. பின் அமைதி. இப்போது பின் கதவை யாரோ தட்டுகிற மாதிரி ஒரு சத்தம் கேட்டது.
“என்னாடீ இது, பெருச்சாளி வந்து முட்டுதோ, உள்ள வந்து என்னத்த மேயப்போகுது? என்றாள் முல்லை.
“மேயவந்த பெருச்சாளி இல்ல மதினி, இது மேயப்போன பெருச்சாளி, ரெண்டுகால் பெருச்சாளி. ந்தா பாத்துட்டு வர்ரேன்” என்றவாறு மீண்டும் எழுந்து பின்பக்கம் போனாள் பொன்னி.
பின்கதவுத் தாழைச் சத்தமில்லாமல் நீக்கி, கொஞ்சமாய் மெல்லத் திறந்து கழுத்தை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள்.
அவள் எதிர்பார்த்தபடியே அங்கே நின்றிருந்தான் அவன் – அவள் அண்ணாச்சி என்று அழைக்கும் அந்த வீட்டுச் சொந்தக்காரன்.
“இங்க எதுக்கு வந்த?” கடுகாய் வெடித்தாள் பொன்னி.
“கோவிக்காத பொன்னி, கதவத் தெற. அப்பொறம் பேசிக்கலாம்”
“நீ யாரு, ஒங்கிட்டாப்போயி நான் கோவிச்சுக்கிற?”
“இப்ப நான் என்ன பண்ணிட்டேன்-ங்கிற?”
“நான் ஒண்ணும் சொல்லல, சாமீ, ஊரு சொல்லுது”
“என்னாண்டு?”
“மழயப் போல ஒழுகவிட்டுத் திரியற ஒரு கூந்தலழகியக் கூட்டிவந்து, ‘இவதான் ஒம் மதினிக்குச் சக்களத்தி’-ன்னு நையாண்டி பண்ணிட்டுப் போகுது கூட்டம். அத நான் சொல்லமாட்டேன். நல்லா இரு.. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். மதுரக் கோட்ட மகாராசா கூட மகிந்துபோறாரு, இந்த நெல்லு வெளையுற அள்ளூரப் பாத்து. இந்த அள்ளுரப் போல அம்புட்டு அழகி எம் மதினி. அவ மெலிஞ்சுபோயி, தோலும் துருத்தியுமா நின்னாக்கூட இந்தப் பக்கம் வரவேண்டாம், போயிரு, ஒன்ன இங்க யாரும் தாங்கிக்கிட்டு இல்ல”
இனிக் காரியம் நடக்காது என்று திரும்ப எத்தனித்தவனைப் பார்த்துக் கூறினாள் பொன்னி, “இந்தா, பொழுதிருக்க என்னாத்தயோ எழுதிக்கிட்டு இருந்துச்சு எம் மதினி. ஒனக்காத்தான் இருக்கும். இத என்னண்டு பாரு” என்றவாறு இடுப்பில் தான் செருகி வைத்திருந்த இரண்டொரு ஓலைகளை எடுத்து அவனிடம் தந்தாள் பொன்னி.
நன்கு விடிந்தபின், வயல்காட்டு வரப்பில், வேப்பங்குச்சியால் பல்லை விளக்கியவாறு அந்த ஓலைகளை ஒவ்வொன்றாகப் படித்தான் அவன்.
“சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய,
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர –
யாரையோ நின் புலக்கேம்? வாருற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல்
பிறரும் ஒருத்தியை, நம் மனைத் தந்து
“வதுவை அயர்ந்தனை” என்ப; அஃது யாம்
கூறேம்; வாழியர் எந்தை! செறுநர்
களிறுடை அரும் சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானை கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன, என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க,
சென்றி பெரும, நின் தகைக்குநர் யாரோ!”
( அகநானூறு – பாடல் 46 : பாடியவர் : அள்ளூர் நன்முல்லையார், திணை : மருதத் திணை, துறை : வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது )
அருஞ்சொற் பொருள்
முனைஇய= வெறுத்த; காரான்=கரிய நிறமுள்ள ஆன், எருமை; மடி=துயில்கொள்; கங்குல்=இரவு; நோன்=வலிய; தளை=கட்டு; பரிந்து=அறுத்துக்கொண்டு; கோட்டின்=கொம்பால்; பழனம்=குளம்; தூம்பு=உள்துளை; ஆரும்=உண்ணும்; உறை=மழை; தகைக்குநர்=தடுப்பவர்.
பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்
ஒரு தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டான். அதனால் மனம் நொந்து இருக்கிறாள் தலைவி. ஒருநாள் இரவில் தலைவன் வீடு திரும்புகிறான். வாசலிலேயே அவனை மறித்த தலைவியின் தோழி, அவனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். உன் விருப்பப்படி நீ எங்கு சென்றாலும் இங்கு கவலைப்பட ஆளில்லை என்று வெகு காட்டமாகவே தலைவனிடம் கூறுகிறாள். சங்க இலக்கியங்களில் இதற்கு வாயில் மறுப்பு என்று பெயர்.
( குறிப்பு: இது ஒரு நாடகப் பாங்கு. இதனால் பெரும்பாலான சங்க காலத்து மக்கள் பரத்தையரிடம் சென்று வந்தனர் என்று கொள்ளக்கூடாது. ஒரு சிலர் இருந்திருக்கலாம். அது எந்தக் காலத்திலும் உண்டு)
அடிநேர் உரை
சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு
கூரான முள்ளாலான வேலியைத் தனது கொம்பினால் தட்டிவிட்டு
நீர் மிக்க குளத்தில் மீன்கள் எல்லாம் வெருண்டோட
அழகிய துளையையுடைய வள்ளைக்கொடியைச் சிதைத்துக்கொண்டு, தாமரையின்
வண்டுகள் ஒலியெழுப்பும் குளிர்ந்த மலரை ஆசையுடன் தின்னும் ஊரனே!
உன்னை யாம் கடிந்துகொள்வதற்கு நீ யாரோ? நீளத் தொங்கவிடப்பட்டு
மேகங்கள் இறங்குவதைக் காட்டிலும் (மிக்க அழகுடன்) பளபளப்புடன் விளங்கித் தாழ்ந்திருக்கும் கரிய கூந்தலையுடையவள்
ஒருத்தியை, இவ்வூரார் நம் மனைக்குக் கூட்டிவந்து
“நீ அவளை மணந்தாய்” என்று கூறினர்; அதனை நாங்கள்
கூறவில்லை; நீ வாழ்வாயாக! பகைவரின்
யானைப் படையைக் கொண்ட அரிய போரினை சிதையுமாறு கொல்லும்
ஒளிவீசும் வாள்படையைக் கொண்ட வெற்றி பொருந்திய செழியனது
நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.