இயமன் : அப்பப்பா…….ரொம்ப களைப்பா இருக்கு…….வரவர வேலை ரொம்ப அதிகம்……


மனைவி ஐயோ : என்னாச்சு …ஏன் அப்பா இப்பிடி களைச்சுபோய் வந்திருக்கிறியள்.

இயமன் : அதை ஏன் கேக்கிறாய், இப்பல்லாம் செம வேலை, ஒரே களைப்பு.


மனைவி : நீங்கள் சொல்லுறதும் சரிதான்….ஒரு காலத்தில நீங்கள் உயிரை எடுத்துவரேக்க பெருமையா இருந்தது, இப்ப….


இயமன்: ஓமப்பா…..மண்ணுக்காக மரணிச்ச வீர்ர்களின்ர உயிரைக் கொண்டுவரும்போது எனக்கிருந்த மகிழ்ச்சி….பெருமை……இப்ப…அவலமா சாகுதுகள், நான் நாள் குறிக்கமுதலே அதுகள் வந்து எடு..எடு…எண்டு நிண்டா நான் என்ன செய்யட்டும்?


மனைவி : நீங்கள் சொல்லுறதும் சரிதான்….பாழ்பட்ட வாகனங்களால தான் அடிக்கடி இஞ்சவந்து சேருதுகள்.


இயமன் : வாகனம் மட்டுமே, வாளால வெட்டுதுகள், தண்ணியில மூழ்குதுகள், தற்கொலையும் செய்யுதுகள், சாப்பாடும் அப்பிடித்தான் சாப்பிடுதுகள், திருவலையால மனிசி அடிச்சதில பாவம் புருசன் என்னட்ட வந்திட்டான்.


மனைவி : என்னப்பா சொல்லுறியள், அப்பிடி என்ன கோபம், திருவலையால அடிக்கிற அளவுக்கு.


இயமன்: ஆருக்கு தெரியும், இப்ப பிரச்சினைக்கே பஞ்சம்? போதையும் போனும் தான் தொண்ணூறு வீதம் காரணம்…..

மனைவி : அது ரெண்டும் மனிசரின்ர கட்டுப்பாட்டில இருக்கவேணும், அது மனுசனைக் கட்டுப்படுத்துற அளவுக்கு வந்திட்டா பிரச்சினைதான்.


இயமன் : மனுசர் தங்களை நிதானப்படுத்திக்கொண்டா இப்பிடி எல்லாம் நடக்காது, அன்பும் கனிவும் இருந்த இடத்தில இப்ப, கோபமும் அதென்னவோ ஈகோவாம் அதுவும் வந்திட்டுது.


மனைவி : அது சரிதான், அதுக்காக இப்பிடியே….. நாங்கள் ஒவ்வொரு உயிரையும் எடுத்துக்கொண்டுவரேக்க எவ்வளவு கவலைப்படுறம் எண்டது உந்த சனத்துக்கு தெரியிறேல்ல,


இயமன் : தாங்களே தங்களுக்கு வினையைத் தேடுறது, பிறகு என்னில பழியைப்போடுறது…..


மனைவி : அது …மனுசருக்கே உள்ள குணம்தானே …..

இயமன் : செய்த பிழையை ஒத்துக்கொள்ளுறதும், அதை திருத்திக்கொள்ளுறதும் பெரிய காரியம், அந்த ரெண்டையும் இந்த சனம் கவனிச்சுது எண்டால் நிறைய துன்பங்கள் இல்லாமல் போகும், எனக்கு வேலையும் குறையும்.


மனைவி : சரிதான் அப்பா…ஆனால் எங்க, அப்பிடி ஒரு மனம் மனுசருக்கு வரவே வராது, எங்க அடுத்தவரை அழிக்கலாம், அடுத்தவரிட்ட பிடுங்கலாம் எண்டுதானே சனம் யோசிக்கிது.


இயமன் : இந்த எண்ணம் இருக்கிறவரைக்கும் எனக்கு வேலையும் குறையவே குறையாது……நாடுகளுக்குள்ள பிரச்சினையை கிளப்பிவிட்டு சனத்தை கொல்லுறதும் ஒரு பக்கம் நடக்கிது.


மனைவி : அது சரி….உள்நாட்டுப்போர் எண்டுறது இப்ப ஒரு வேலையாவே நடக்கிது.


இயமன் : அது சரி, ஆயுதங்களை உற்பத்தி செய்யிறவங்களுக்கு விற்பனை வேண்டாமே, தாங்களே பிரச்சினையை உருவாக்கிவிடுறது, பிறகு தாங்களே அதை தீர்க்கிறமாதிரி போறது, உந்த விசயத்தை வல்லரசு நாடுகள் மிகச்சரியா செய்யிது.


மனைவி : அழிஞ்சுபோறதென்னவோ அப்பாவி மக்கள்தானே, அதுவும் பிஞ்சுக் குழந்தையளும்….


இயமன் : பூமியும் வெப்பமடைஞ்சுகொண்டு வருகுது, முழு உலகமும் அழிஞ்சுபோடும் போல கிடக்கு. அப்பிடி நடந்திட்டா எங்களுக்கு என்ன வேலை….


இயமன்: அதுக்குப்பிறகாவது நிம்மதியா இருக்கலாம், சரி சரி …குடிக்க கொஞ்சம் தண்ணி …… கூலா சோடா ஏதும் இருந்தா கொண்டுவா


மனைவி: ஐயோ…..


இயமன் : உன்ர பெயரை நீயே ஏன் ஏலம் விடுறாய்?


மனைவி : அடிக்கடி பூமிக்குபோய் வந்ததில உங்களுக்கு மூளை பிசகிப்போச்சே,….


இயமன் : ஏன் அப்பிடிச் சொல்லுறாய்.


மனைவி : இஞ்ச எங்க கிடக்கு கூல் தண்ணி, சோடா எல்லாம்…


இயமன் : அது சரி….அங்க குடிச்சு பழகினதில ..பழக்கதோசத்தில கேட்டிட்டன்,


மனைவி : அவையள் உதுகளைக் குடிக்கிறதாலதான்வருத்தமும் வாதையும் தேடுகினம், நீங்களும் அடிக்கடி அங்க போய்வரவேண்டிக்கிடக்கு, பிறகு நீங்களும் குடிச்சா……


இயமன் : இயமனுக்கும் ஒரு இயமனா……ஆஆஆஆஆஆஆஅ


கோபிகை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal