
இன்று உலக புத்தக தினம்….உலகில் பேசப்படும் ஒரு புத்தகத்தின் உயர்ச்சி பற்றி பார்ப்போம்.
பின்லாந்து என்ற தேசம் இன்று உலகின் மிக முன்னேறிய ஒரு நாடு. உலகின் மிகப்பெரும் காகித உற்பத்தியாளர் மற்றும் கைத்தொழில்கள் என்று அநேகம் அங்கு..!
அண்மையில் வெளிவந்து உலகை தனது கோப பார்வையால் உலுப்பிய Angry Birds Game இலத்திரனியல் விளையாட்டின் மூலதேசமும் பின்லாந்து தான்.
பின்லாந்து தேசம் காலத்துக்கு காலம் அயலில் உள்ள சுவீடன் பேரரசாலும் ரஸ்யபேரரசாலும் ஆக்கிரமிக்கப்பட்டே வந்துள்ளது. பின்லாந்தின் கரேலிய பிரதேசமும் இந்த சுவீடன் , ருஸ்ய அரசுகளால் காலகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டே வந்தன. கரேலியாவையும் பின்லாந்தையும் பிரித்துவைத்தே ஆட்சி செய்தனர் ஆக்கிரமிப்பாளர்கள். அதெல்லாம் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நடக்கிறது.
.
ஒரு மக்கள் கூட்டத்துக்கு அவர்களின் பாரம்பரியம், தொன்மை, வரலாறு இவற்றை சொல்லும் ஒரு இலக்கியம் மிக முக்கியம்.அது இல்லாததால் பின்லாந்து மக்கள் தொடர்ந்தும் ரஸ்யபேரசின்கீழ் அடிமைகளாக அல்லலுற்று வந்தனர். தொடர்ந்து அன்னியரின் ஆக்கிரமிப்புக்குள் இருந்த பின்லாந்து மொழி பேசும் மக்களிடையே ஒரு காப்பியம் கவிதைவடிவில் வாய்மொழி மூலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது.
அச்சுவடிவில் இல்லாமல் வாய்மொழி மூலமாகவே தமது பண்டைய வீரத்தை, தங்களுக்கு என்று ஒரு தேசம் இருந்ததைச் சொல்லி வந்தார்கள். ஆனால் ஒரு கூட்டாக மக்களை எழ வைக்க அது போதுமானதாக இருக்கவில்லை.
வெறும் வாய்மொழி மூலம் இருந்த கலேவலா என்ற காப்பியத்தை இலியாஸ் லோன்ராட் (Elias Lonnrot) என்ற மொழியில் அறிஞர் மெதுமெதுவாக சேகரித்து எழுத்து வடிவமாக்கினார். ஆயிரம் வருசங்களாக வெறும் வாய்மொழி வடிவில் இருந்ததை 1849ல் புத்தகவடிவில் கொண்டுவந்தார்.
கலேவலா புத்தக வடிவில் வந்ததும் பின்லாந்து மக்கள் எழுச்சி அடைந்தார்கள். தமக்கென்று ஒரு வரலாறு ஒரு பாரம்பரிய நிலம் பற்றிய வரலாற்றை அறிந்து அதன்மூலம் ஒன்றாகினர்.பெரும் தேசிய எழுச்சி ஏற்பட்டது.இந்த எழுச்சி இறுதியில் ரஸ்ய ஆதிக்கத்தை வெளியேற வைத்தது. சுதந்திரதேசமாக ஆக்கியது.
ஒரு இலக்கியம் ஒரு படைப்பு எந்த அளவுக்கு ஒரு மக்களை விடுதலை ஆக்கும் என்பதற்கு கலேவலா காப்பியமும் பின்லாந்தும் உதாரணமாகும்.
சுதந்திரத்துக்கு பின்பு பின்லாந்து தேசத்தின் எல்லைகள்கூட கலேவலா நூல்தான் முடிவு செய்தது. பின்லாந்தின் ஆழமான விழுமியங்கள். வாழ்வுமுறை அவர்களின் அறஉணர்வு எல்லாவற்றையும் கலேவலா புத்தகம்தான் சொல்கிறது..
(இந்த கலேவலா காப்பியத்தை தமிழில் .சிவலிங்கம் அவர்கள் மொழிபெயர்த்து இருக்கிறார்)