சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு இலங்கையர் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் தீ எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலை நடைபெற்ற விதம் எம்மைப் போன்ற பலருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சிவா முருகுபிள்ளை முகநூலில் தெரிவித்துள்ளார்.

எந்த மனிதனும் இந்தக் கொலையை அதற்கு அவர்கள் கை கொண்ட கொடூரமான செயற்பாட்டை ஏற்கப் போவது இல்லை. அதற்கான ‘நியாயங்களை’ பாகிஸ்தானின் ஆளும் ஒரு அமைச்சரின் கூற்று எடுத்தியம்பிய விதம் கண்டனத்திற்குரியவை.

அந்த எரியூட்டல் கொலையை அந்த தனி ஒரு மனிதனை அங்கு கூடியிருந்த யாரும் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. மாறாக அதனை ஒரு கொண்டாட்டமாக ஆரவாரித்ததை காண முடிந்தது.

ஒரு கொலையை… மரணத்தை கொண்டாடும் ஒரு சமூகத்தை கூட்டத்தை அங்கு என்னால் பார்க்க முடிந்தது. ஒரு சிறுபான்மையினரின் செயற்பாடுதான் என்று எம்மால் அதனைக் கடந்து போகவும் முடியவில்லை.

குண்டர்கள் தாக்கும் போது, அவரைக் காப்பாற்ற? முயன்ற மாலிக் அத்னான் என்பவருக்கு, பாகிஸ்தானின் இரண்டாவது உயரிய தேசிய விருதை வழங்குவதாகவும் அறிவித்தது என்ற விடயத்தையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இதே மாதிரியான செயற்பாடுகளை 1986 மே மாதங்களில் யாழ்.திருநெல்வேலிச் சந்தியில் நடைபெற்றதை எம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். குற்றுருயிராக இருந்தவர்களை வீதி ஓரத்தில் ரயர் போட்டுக் கொழுத்தியதை யாரும் தடுக்கவில்லை அந்த உயிரைக் காப்பாற்றவில்லை.

மாறாக அந்த கொலையிற்கு கொழுத்தலுக்கு சோடா உடைத்துக் கொண்டாடிய கொலை மரணத்தை கொண்டாடிய கூட்டத்தையே அன்று எம்மால் காண முடிந்தது. இன்னும் சிலர் மௌனமாக விலத்திச் சென்றதை அறிய முடிந்தது.

துப்பாக்கிகளுக்கு பயந்து நாம் அவ்வாறு செய்தோம் என்ற சாக்குப் போக்கு மனிதம் செத்துவிட்டதா? என்று எண்ண வைத்த படுகொலைச் சம்பவங்கள் அவை. இந்தப் படுகொலையை படம் பிடித்து ஆவணப்படுத்தும் நிலைகளும் அந்த துப்பாக்கியின் கொலை அச்சுறத்தலால் தடுத்து நிறுத்தப்பட்டதே வரலாறு.

மனித குலம் வெட்கித் தலை குனிய வேண்டிய கொலைகள் அவமானங்கள் 1983 ஜுலை கலவரத்தின் போது, அம்மணம் ஆக்கப்பட்ட தமிழர் ஒருவர் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட போது அதனை பார்த்திருந்து கூத்தும் ஆடிய கொண்டாடியினர் அவர்களுடன் வந்த ஏனையவர்கள்.

அந்த கொலையை கொண்டாடி ஆனந்த கூத்தாடிய கணங்கள் எங்கள் மனத்தில் இருந்து இன்னமும் அழிந்து போகாமல் இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த சமூகத்தில் இருந்த ஒரு புகைப்படப் பிடிப்பாளர் குறைந்த பட்சம் அதனைப் புகைப்படம் பிடித்து உலகிற்கு வெளிப்படுத்திய ஊடகத் தர்மத்தை நிலைநாட்டி இன்று வரை அது ஆவணமாகவும் இருக்கின்றது.

மனிதகுலம் வெட்கிக் குனியும் சம்பவமாக இலங்கை பேரினவாதத்தின் செயற்பாட்டின் அடையாளமாகவும் அது இன்றுவரை பகிரப்படுகின்றது. ஏப்ரல் 16, 1971 அன்று கதிர்காமத்தின் அழகி பிரோமாவதி மன்னம்பெரி என்ற பெண்ணை இலங்கை இராணுவம் நிர்வாணம் ஆக்கி வீதி வழியே இழுத்து வந்து தெருவில் வைத்து துப்பாக்கியினால் சுட்டு குற்றுருயிராக எரியூட்டிக் கொலை செய்து புதைக்கப்பட்ட சந்தர்ப்பமும் அவ்வாறானதே.

சிங்கள் மக்கள் ஏன் முழு இலங்கை மக்கள் மனதில் இன்றுவரை இலங்கை ஆளும் வர்க்க இராணுவத்தின் இந்த மிலேச்சத்தனமான எரியூட்டல் கொலை வரலாற்று அவலமாக பதிந்து அழிந்து போகாமல் இருக்கின்றது.

முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் இசைப்பிரியா போன்ற பெண்களின் உடைகள் களையப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட போது அந்த கொலைஞர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு மனிதாபிமானத்தின் கமரா மாத்திரம் அதனை புகைப்படம் எடுத்து அந்த அவலத்தை உலகத்தின் கண்களுக்கு கொண்டு சென்றது.

இதன் மூலம் அந்த மனிதாபிமானமற்ற கொலைகள் உலகிற்கு அம் மணமாக்கப்பட்டது. இந்த கொலைகள் அவமானங்கள் துயில் உரிதல்கள் நடைபெற்ற போது… அங்கும் சுற்றி நின்ற இராணுவத்தினர் தங்களின் சக பிறப்புக்களான தாயும் சகோதரியும் பிள்ளைகளும் என்றோ இவர்களும் பெண்கள் என்று இதனைப் பார்க்காது மனித குலம் வெட்கிக் தலை குனியும் செயற்பாடுகளையே செய்தனர்.

ஆனால் அந்தப் புகைப்பட ஆவணம்தான் இலங்கை இராணுவம் மிகக் கீழ் தரமான இராணுவம் என்று மீண்டும் உலகிற்கு அடையாளப்படுத்தப்பட்டது. இது போன்ற மனித அரக்க குணங்கள் தேசியத்தின் பெயரால் மதத்தின் பெயரால் நாட்டுப் பற்றாளர் என்ற பெயரால் அவ்வப் போது தமக்கு வசதியான விடயங்களை முன்னிறுத்தி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது உலகின் பல மூலைகளிலும். மனித குலமும் இதனைத் தடுத்து நிறுவதற்கான போராட்டங்களை நடாத்திக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆனாலும் வல்லவன் வகுத்ததே சரி என்று அதற்கான நியாயங்களை கொலைஞர்கள் கற்பித்த வண்ணமும் உள்ளனர். இதன் ஒரு வடிவமாகதான் அண்மையில் பாகிஸ்தானில் பல நூறு பெர் முன்னிலையில் இலங்கையர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட போது அதனைப் பார்த்து ஆரவாரித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம் ஆடியவர்களையும் உலகம் பார்கின்றது.

இவ்வகையான கொலைகளுக்கு கொழுத்தல்களுக்கு எந்த வகையிலும் நாம் நியாம் கற்பிக்க முடியாது. இவ்வாறு மரணத்தை தழுவிக் கொண்ட அனைவருக்கும் மரியாதை கலந்த வணக்கங்கள் மனித குலம் வெட்டிக் தலைகுனியும் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எவ்வகையிலும் மன்னிக்கப்படக் கூடியவர்கள் அல்ல.

அவர்கள் மக்கள் மன்றங்களில் நீதியின் பால் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள் பெரும் தேசியவாதம், மதத் தேசியம் என்று சொல்னால் என்ன நாட்டைக் கைப்பற்ற புரட்சி செய்ய முற்பட்டார்கள் என்று சொன்னால் என்ன தமிழ் தேசியவாதம் என்று சொன்னால் என்ன மதத்தை நித்தனை செய்தார்கள் என்று எந்த வகையான காரணங்களும் இந்த கொலைகளை நியாயப்படுத்த போதுமானவை அல்ல.

இவை கொலைகளை கொண்டாடும் பாசிச செயற்பாடுகளை நியாப்படுத்த அவர்கள் முன் வைக்கும் மனித அறத்திற்கு விரோதமான காரணங்கள் ஆகும். இது போன்ற செயற்பாடுகள் அந்தந்த சமூகங்களை இப்படியானவர்கள் என்று மதிப்பீடு செய்வதற்கு பாவிக்க முடியாது மாறாக இவை அந்தந்த சுமூகங்களில் உள்ள மனித விரோதக் கூறுகளின் செயற்பாடாகவே பார்க்க முடியும்.

உன் தேசியத்தை சொல்லி உன் சகோதரர்களை கொன்று கொழுத்தினாலும் உன் எதிரி தனது தேசியத்தை சொல்லி தலையை பிளந்து அம்மணமாக்கியதை நாம் ஆதரிக்க முடியாது. இந்த மாதிரியான கொலைகளை இனம் மதம் தேசம் என்பனவற்றை கடந்து மனித நேயத்தின்பால் நின்று அறம் சார்ந்து நாம் கண்டனக் குரல் எழுப்புவதும் எம்முயிர் கொடுத்தாவது தடுத்து நிறுத்த முயலுவதுமே தனி மனிதனுக்குரிய அடையாளமாக.. செயற்பாடாக.. இருக்க முடியும்.

இவை தனி ஒரு மனிதனால் தடுத்து நிறுத்தப்பட கூடிய விடயம் அல்ல மாறாக சமூகமாக இணைந்து செயற்படுவதன் மூலமே அதனைச் சாத்தியம் ஆக்கலாம். என் படலையை இது இது வரை தட்டவில்லை என்ற மௌனங்கள்.. என்றாவது ஒரு நாள் என் படலையை தட்டும் போது என் அவலக் குரலுக்கு பாதுகாப்பு வழங்க அரண் அமைக்க காத்து உதவ கொழுத்தலை தடுக்க யாரும் வர முடியாத சூழலை ஏற்படுத்தலாம் எனவே நாம் அனைவரும் இணைந்து இது போன்ற மனிதகுலத்திற்கு விரோதமான கொலைகளை தடுத்து நிறுத்த குரல் கொடுப்போம் செயற்படுவோம்.

மனித பிறப்பும் இறப்பும் இயற்கையானதாக அமைவதே சரியானது இந்த செயற்கைக் கொலைகள் எந்த வகையிலும் புனிதம் என்று நியாயங்களைக் கூறி தப்பிக் கொள்வதற்கு சட்டமும் மனித குலமும் இடமளிக்கக் கூடாது என முகநூலில் சிவா முருகுபிள்ளை (Siva Murugupillai) இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal