எழுதியவர் – வாசுகி நடேசன்

எம தர்ம ராஜாவின் இராச்சியம்.

தர்பார் நடந்து கொண்டிருக்கிறது…

சித்திரபுத்த்திரன் பாவ புண்ணியக் கணக்கை படித்துக் கொண்டிருக்கிறான். தேவகணங்கள் இறந்த ஆன்மாக்களை அவர்களது கணக்குப் பிரகாரம் நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சிம்மாசனத்தில் வீற்றிருந்த யமனாரின் நெற்றிப்பொட்டு சுருங்குவது அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

அவர் மனக் கண்ணின் முன் தராசு. அதில் உள்ள முள்ளு பாவக் கணக்கின் பக்கம் மிகவும் சாய்ந்து கிடக்கிறது.

கலி முற்றிவிட்டதா? என்னதான் பூவுலகில் நடக்கிறது? ஒரு முறை அங்கு சென்று பார்த்து வர அவர் விரும்பினார்.

உருவமா…? அருவமா…? அருவுருவமா…?

எருமையுடன் உருவமாய் உலகில் போனால்… பயத்தால் எல்லோரும் விலகிவிடுவார்கள். மரணத்துக்குப் பயப்படாத உயிர் இன்னும் பூவுலகில் பிறக்கவில்லை என்பது யமனார் கணிப்பாக இருந்தது.

அருவுருவம்… அதுவும் சரிப்படாது… மனிதனிடம் விஞ்ஞான அறிவு பிரமிக்கும் படியாகவுள்ளது. “நானும் ஆய்வுப் பொருளாகிவிடுவோமா?” யமனாருக்குப் பயமாக இருந்தது.

அருவம் தான் பொருத்தமானது. தீர்மானித்துவிட்டார். இனியென்ன பயணம்தான்…

பூலோகம், மனிதர்களின் கோட்டையாய் கிடக்கிறது. யமனார் ஒரு பாடசாலையில் வந்து இறங்கிவிட்டார்.

பெரிய அளவிலான மண்டபம் அது. மாணவர்களால் நிரம்பியிருக்கிறது. மேடையில் ஒரு பேச்சாளர்.

“தன்னைத்தான் காதலனாயின் எனைத் தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்”

இந்தக் குறள் எனக்கு நன்கு பிடிக்கும். இதன் பொருள் என்ன தெரியுமா? மாணவர்களே…”

ஓ… மகான் திருவள்ளுவரின் குறள் அல்லவா… யமனாரல் எங்கும் அசையமுடியவில்லை. கட்டுண்டவர் போல அவ்விடத்திலேயே உறைந்து போகிறார்.

மாணவரை ஊக்குவிப்பதற்காக அழைக்கப்பட்ட பேச்சாளர் குமாரமூர்த்தி தொடர்கிறார்.

தன்னைத் தான் விரும்புபவன். பிறருக்கு ஒரு சிறியளவில் கூடத் தீங்கு செய்யக்கூடாது என வள்ளுவர் கூறுகிறார்.

தன்னைத்தான் விரும்புபவன்… அவனைச் சுயநலவாதி என்று சொல்லுவோம். சுயநலன் தனது நலத்துக்காக மற்றவருக்குத் தீங்கு செய்யத் தயங்கமாட்டான் என்றே நாம் பொதுவாக நினைப்பதுண்டு. ஆனால், வள்ளுவர் இங்கு மிக நுட்பமான கருத்தைக் குறிப்பிடுகிறார்.

தன்னை விரும்புபவன் தனக்கு ஒரு துன்பமும் வரக்கூடாது என விரும்புவான். தனக்குத் துன்பம் தருவது பிறருக்கும் அதே அளவிலான துன்பத்தையேத் தரும் எனபதைத் தன்னை பிறர் இடத்தில் பொருத்திப் பார்த்து உண்ர்ந்து கொள்வதால், அவன் பிறருக்கு ஒரு தீங்கும் செய்யமாட்டான். உதாரணமாக, தனது பொருளை யாராவது களவெடுத்தால் அந்த இழப்புக்காய் ஒருவனுக்குத் துன்பம் நேருகிறது. எனவே அவன் அத்தகைய துன்பம் பிறருக்கு வரத்தக்க வகையில் நடந்து கொள்ள மாட்டான்.

“ அட… வள்ளுவன் உண்மையில் பெரும் மகான்தான். வள்ளுவனின் இக்குறள்படி நடந்தால் உலகத்தில் கெட்டவர் எவரும் இரார்… கெட்ட செயலும் நடக்காது…”

யமனாருக்குக் குதூகலம் தாங்க முடியவில்லை.

இந்த உயர்ந்த கருத்தினை உலகுக்குப் பரப்புவதற்காகவே குமாரமூர்த்திக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் போல் மனம் குறுகுறுக்கிறது.

குமாரமூர்த்தியின் ஆயுள் காலத்தினை நீடிக்கக் கூட யமனாருக்கு விருப்பம்தான். ஆனால் அது அவரால் முடியாது. விதியை மாற்றும் திறன் பரமசிவனுக்கன்றி வேறு யாருக்கும் கைகூடாததாய் இருந்தது. அதனால், வையத்துள் வாழ்வாங்கு வாழும் குமாரமூர்த்திக்கு வானுறையும் தெய்வப்பதவியை வழங்கத் தீர்மானித்தார்.

ஏனோ குமாரமூர்த்தியினைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் யமனாருக்கு தோன்றியது.

குமாரமூர்த்தி தமது மேலான பேச்சினை நிறைவு செய்தபோது மாணவர்கள் பலத்த கரவொலி செய்கிறார்கள். அக் கரவொலி பேசப்பட்ட பொருளுக்கா அல்லது மேலும் பேசி போரடிக்காமலிருந்ததற்கா என்பது தெரியவில்லை.

அதிபர் குமாரமூர்தியை அழைத்துக் கொண்டு தமது அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு அவருக்குத் தேநீர் வழங்கப்படுகிறது. அதன் பின் ஏதோ ஒரு கவரினையும் வழங்குகிறார் அதிபர். யமனாருக்கு அந்தக் கவருக்குள் என்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அருகில் சென்று உற்று நோக்குகிறார். அக்கவருக்குள் நான்கு ஐந்து ரூபாய் நோட்டுக்கள்.

ஓ… வள்ளுவமும் விற்பனைப் பொருளானதா…? யமனாருக்கு சிறிது ஏமாற்றமாய் இருக்கிறது.

குமாரமூர்த்தி காரை எடுத்துக் கொண்டு பாடசாலை வாசலுக்கு வருகிறார். வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால், தெருவில் காரை ஓட்டிச்செல்வதற்கு அவர் வாசலில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த இடைநேரத்தைப் பயன்படுத்திப் பிச்சைக்காரன் ஒருவன் அவரிடம் கையேந்தி நின்றான்.

குமாரமூர்த்திக்கு வேறொரு பட்டிமன்றத்தில் பேச வேண்டியிருந்தது. வாகன நெரிசலைப் பார்த்த போது, சரியான நேரத்துக்குப் போகமுடியுமா? என்ற சந்தேகம் உண்டானது. அதனால், அவர் மனதில் ஒரு வகைப் படபடப்பும் எரிச்சலும் உண்டாகியிருந்தன. தமது மன உளைச்சலைப் பிச்சைக்கரனை வாயில் வந்தவாறு ஏசுவதன் மூலம் தீர்த்துக் கொண்டார். அவர் பிரயோகித்த வார்த்தைகள் யமனாரின் காதுகளில் இரும்பைக் காய்ச்சி ஊற்றியது போல விழுகிறது. பிச்சைக்காரனுக்கு இவையெல்லாம் பழகியிருக்கவேண்டும். அவன் முணுமுணுத்தபடி அவ்விடத்தைவிட்டு அகன்று சென்றான்.

“இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந் தற்று” என்ற குறள் யமனாரின் சிந்தையில் வந்து போனது.

குமாரமூர்த்தி பட்டிமன்றம் நடப்பதாக இருந்த நேரத்துக்குச் சிறிது முன்பாகவே போய்விட்டார். பேச்சாளர் சிலரோடு நடுவரும் வருவதற்குத் தாமதமானதால் அரைமணித் தியாலத்திற்குப் பின்பே நிகழ்ச்சி தொடங்கியது.

இன்றைய நிலையில் வள்ளுவர் நெறி நின்று வாழ்வது கடினமானதா? இல்லையா? என்பதேப் பட்டிமன்றத்தின் தலைப்பாக இருந்தது.

குமாரமூர்த்தி வள்ளுவர் நெறி நின்று வாழ்வது கடினமில்லை என்று வாதாடினார்.

அவரது பேச்சு தலைப்போடு ஒட்டியதாகவோ, பொருளாழம் உள்ளதாகவோ இருக்கவில்லை. மாறாகப் பெண்களைக் குறை கூறுவதன் மூலம் சபையோரைச் சிரிக்க வைத்துக் கரகோசத்தைத் தட்டிச் செல்வதாகவே அமைந்தது. வந்திருந்த சபையோரும் ஆழமான கருத்துக்களைக் கேட்டுத் தமது வாழ்வை நெறிப்படுத்த வந்தவர்களாகத் தெரியவில்லை. சிறிதுநேரம் சிரித்துப் பொழுது போக்க வந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். அதனால், அவரது பேச்சுக்கு அதிக வரவேற்பு இருந்ததாகப் பட்டது.

யமனாருக்குச் சலிப்பாகவிருந்தது. ஆனாலும், தமது தீர்மானத்தைத் தானே மீற விரும்பவில்லை. அவர் குமாரமூர்த்தியைத் தொடர்ந்தார்.

பட்டிமன்றம் முடிய வெகு நேரமாயிற்று. வீடு வந்து இரவுச் சாப்பட்டை முடித்தவர் நிம்மதியாகத் தூங்குவதற்காக இரண்டு கிளாஸ் மது அருந்துகிறார் குமார மூர்த்தி. அவர் மாணவருக்கு மது அருந்துவதன் கேடு பற்றிக் கூறியது யமனார் நினைவில் வந்து போகிறது.

மறுநாள் சாவகாசமாக எழுந்து கொள்கிறார் குமாரமூர்த்தி. காலைச் சாப்பட்டை முடித்துவிட்டு கைத்தொலைபேசியில் முகநூலைப் பார்க்கிறார். அதில் மூழ்கியும் போகிறார்.

“என்னப்பா இண்டைக்கும் கம்பஸ்சுக்கு லேற்றா போகப் போறீங்களே…”

மனைவியின் குரலால் விழிப்படைந்தவராய் மணியைப் பார்க்கிறார். மணி பதினொன்றைக் காட்டுகிறது. இரண்டு வகுப்புகளுக்கான நேரம் கடந்திருந்தது. மாணவர்கள் காத்திருந்துவிட்டுப் போயிருப்பார்கள். அதைப்பற்றி அவர் சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவர்களுக்கு வருகை தராததற்கு ஏதாவது காரணத்தைச் சொல்லிவிடலாம்… மனதுக்குள் திட்டமிடுகிறார்… ஒரு மணிக்கு துறைசார் ஒன்று கூடலுக்கு போய்வரலாம் எனத் தீர்மானித்துக் கொள்கிறார்.

கலைப்பீடத்தில் உள்ள துறைகள் சிலவற்றுக்கு விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது… பீடாதிபதி துறைகள்தோறும் விரிவுரையாளர்களைப் பரிந்துரைக்கும்படி கேட்டிருந்தார்.

கல்வியியல் துறைத்தலைவர் என்ற வகையில் குமாரமூர்த்தியும் சில பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டியிருந்தது.

விரிவுரையாளராவதற்குத் தகுதியானவர்களின் நான்கு பெயர்களை துறை சார்ந்த ஏனைய விரிவுரையாளர்கள் ஏகமனதாக வழங்கியிருந்தனர். எனினும், குமாரமூர்த்தி அப்பெயர்களுடன் தாம் வழங்கும் ஒரு பெயரையும் சேர்க்குமாறு அவர்களை வற்புறுத்தினார். வேறு வழியின்றிப் பட்டியலில் ஐந்தாவதாக அப்பெயரை இணைக்க ஏனையவர்கள் இணங்க வேண்டியதாயிற்று. ஆனாலும், அவர்களில் முதலிரு இடங்களில் இருந்தவர்களே மிகவும் தகுதியானவர்கள் என்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பே மற்றவர்கள் பற்றி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்திக் கூறியிருந்தனர்.

ஒன்று கூடலின் போது கல்வியியல் துறைக்குத் தற்சமயம் ஒரு விரிவுரையாளரையேத் தேர்ந்தெடுக்க முடியும் எனப் பீடாதிபதி கூறிய போது குமாரமூர்த்தி சிறிதும் தயங்காது தம்மால் வற்புறுத்திச் சேர்க்கப்பட்ட ஐந்தாம் நபரையே விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கும்படி பரிந்துரைத்தார். அதனால் ஏனைய விரிவுரையாளர்களிடம் உண்டாகும் அதிருப்தியை வேறுவழிகளில் சமாளித்துக் கொள்ளலாம் எனவும் கணக்குப் போட்டார்.

அவரால் பரிந்துரைக்கப்பட்ட கவிதா அவரது உறவினள் என்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவள் என்றும் கதையொன்று ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் அடிபட்டுக்கொண்டிருந்தது.

தகுதி அடிப்படையில் முதலிடத்தில் இருந்த பகீரதன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். போர் சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டவன். குடும்பத்தின் ஒரே உழைப்பளியான தந்தை செல்லுக்குப் பலியாகிவிட பகீரதனையும் அவனது இரண்டு தங்கைகளையும் வளர்ப்பதற்கு பகீரதனின் தாய் கலைமகள் பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை. இன்று இரண்டு குமர் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டிய பொறுப்பும் பகீரதனிடம் இருந்தது.

இத்தனையும் குமாரமூர்த்திக்கு நன்கு தெரிந்தே இருந்தது.

. தகுதி மிகக் குறைந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து தகுதி நிறைந்தவரது வாய்ப்பைப் பறித்துவிட்டார் குமார மூர்த்தி. பகீரதனின் ஏமாற்றமோ அவன் அடையவிருக்கும் வருத்தமோ அவருக்குப் பொருட்டாக இல்லை. பகீரதனின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்க்க அவர் எள்ளளவும் முயலவில்லை.

வாய்ச்சொல் வீரனாக, சுயநலவாதியாக இருந்த குமார மூர்த்தியின் வக்கிரங்களை பார்த்த யமனாருக்குத் தலை சுற்றியது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனக் கருதினாரோ என்னவோ, இன்னும் பூலோகத்தில் இருக்கப் பிடிக்காதவராய் யமலோகம் திரும்புகிறார் அவர்.


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal