புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டே சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தகவல் வெளியிட்ட பின்னர், மேலும் பல தகவல்கள் வெளியாகிய விதத்தை அறிய முடிந்துள்ளது.
நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்ற காரணத்தை அடிப்படையாக கொண்டும், அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி காரணமாகவும் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே சுசில் பிரேமஜயந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு வருடகாலத்திற்கு புதிய தலைவர் ஒருவரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து, ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இதற்காக எதிர்க்கட்சியினரின் ஆதரவை பெற எதிர்க்கட்சிகளுடனும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வருட காலத்திற்கு அமைக்கப்படும் இந்த இடைக்கால அரசாங்கத்தின் கீழ் 20வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கவும் குறைப்பாடுகளை தீர்த்து 19வது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து ஒரு வருட காலத்திற்கு பின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயற்பாடுகளின் பிரதான அணுசரணையாளராக சுசில் பிரேமஜயந்த அடையாளம் காணப்பட்டமையே அவர், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்தது எனவும் அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.