
- அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
- முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவண பவன் என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும், முருகன் மயிலில் பயணிப்பவன் என்பதால் விசாகன் என்றும், மலைகளில் குடி கொண்டுள்ளதால் சிலம்பன் என்றும் பெயர் ஏற்பட்டது.
- 1. சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்சபதனர், 16. சிகிவாகனர் ஆகியன முருகனின் திருவுருவங்களாகும்.
- முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
- பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இந்தச் சிறப்பு இல்லை.
- தமிழகத்தில் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம் ஆகிய ஊர்களில் முருகனுக்குக் குடவரைக் கோயில்கள் உள்ளன.
- முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.
- முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
- முருகப்பெருமான் போர் புரிந்து சூரபத்மனை வதம் செய்தது திருச்செந்தூர், தாரகாசுரனை வதம் செய்தது திருப்பரங்குன்றம், சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் ஏற்பட்ட பள்ளம் இது என்கின்றனர்.
- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் சுப்பிரமண்ய அஷ்டகம் படித்து வந்தால், விரைவில் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
- கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தைத் தினசரி அதிகாலையில் படித்தால், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
- முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
- முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.
- முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.
- முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
- முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.
- முருகனின் கோழிக் கொடிக்கு குக்குடம் என்று பெயர். இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
- முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.
- மகாகவி காளிதாசர் முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றினார்.
- மாமல்லபுரத்துப் பாறைகளில் யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.