அமெரிக்க குழந்தை ஒருத்தி, ஹாலோவீன் பண்டிகையின்போது பிரித்தானிய மகாராணியாரப்போலவே அச்சு அசலாக உடை உடுத்தியிருந்தாள்.
அந்த விடயம் மகாராணியாரை நெகிழவைத்ததைத் தொடர்ந்து, ஹாலோவீன் பண்டிகையின்போது தன்னைப்போல உடை உடுத்தியதற்காக நன்றி தெரிவித்து அந்தக் குழந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மகாராணியார்.
கெண்டக்கியைச் சேர்ந்த Jalayne Sutherland (1), ஹாலோவீன் பண்டிகையின்போது, பிரித்தானிய மகாராணியாரைப் போலவே உடை உடுத்தி வலம் வர, அவளைப் பார்த்தவர்கள், தலைகளைத் தாழ்த்தி, மகாராணியார் வாழ்க என்று வாழ்த்தியிருக்கிறார்கள்.
இந்த காட்சிகளை புகைப்படம் எடுத்த Jalayneஇன் தாயாகிய Katelyn Sutherland, ஒரு கடிதம் எழுதி, அதனுடன் இந்த புகைப்படங்களையும் இணைத்து, அவற்றை பக்கிங்காம் அரண்மனைக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால், மகாராணியாரிடமிருந்து தனக்கு கடிதம் வரும் என அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை.
அந்த புகைப்படங்களைப் பார்த்த மகாராணியார், Katelynக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், Katelyn தனக்கு கடிதம் எழுதியதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள மகாராணியார், Jalayneஇன் புகைப்படம் தன்னை மகிழச் செய்ததாக தெரிவித்துள்ளதுடன், Jalayne குடும்பத்துக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும், அந்த புகைப்படங்களில் Jalayne நாய்க்குட்டிகளுடன் இருப்பதையும் கவனிக்கத் தவறவில்லை மகாராணியார். ஆகவே, தனது செல்லப்பிராணிகளான நாய்கள் குறித்த சில தகவல்களையும் Jalayneக்காக அனுப்பிவைத்துள்ளாராம் அவர்.
மகாராணியாரின் கடிதம் கண்டு, தாயும் மகளும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்கள்!
