எழுதியவர் – தமிழ்செல்வன்

கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தேன், முத்து நின்றுகொண்டிருந்தான். ரத்தக்கறை இல்லாத சட்டை அணிந்து இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்.
” சார் , உங்க பர்ஸ் கொடுக்கவந்தேன். கடையிலேயே மிஸ் பண்ணிட்டு போயிட்டிங்க ”
என் எல்லா அடையாளச் சான்றுகளும் , வங்கி அட்டைகளும் . சில 2 ஆயிரம் ருபாய் நோட்டுகளும் சில 100 ரூபாய் களும் இருந்தன .
இன்று வீடு முழுவதும் அதைத் தேடிக்கொண்டு இருந்தேன். மனஉளைச்சலுடன் இருந்தேன். திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தேன் .
” சரியா இருக்கா சார். அப்போ நான் வரேன் சார் ”
100 ருபாய் ஒன்று எடுத்து அவனிடம் கொடுத்தேன்.
”இதை எங்க எல்லாம் தேடிட்டு இருந்தேன் தெரியுமா ? நீயும் பணம் செலவு பண்ணிட்டு தானே இங்க கொண்டு வந்திருப்ப, இதை வச்சிக்கப்பா ”
” ஒன்னும் வேண்டாம் சார் , ஏதோ என்னால முடிஞ்சது. ”
” சாப்ட்டியா முத்து ”
” இப்போ தான் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன். போயிதான் சாப்பிடணும் ”
” மணி 3.40 ஆச்சேப்பா , பர்ஸ் காணோம்னு டென்ஷன்ல நான் இன்னும் சாப்பிடல. உள்ளே வா.சேர்ந்து சாப்பிடலாம் ”
” அடுத்த தடவை சாப்பிடறேன் சார் ”
” நான் அடுத்த தடவை பர்ஸ் தொலைக்கும் போதா ?. நான் இனிமேல் ஜாக்கிரதையா இருப்பேன்பா ”
சிரித்தான் , ” அதுக்கு சொல்லல சார் . லேட் ஆனா அம்மா தேடுவாங்க சார் ”
” என் திருப்திக்காக 2 வாய் சாப்பிட்டு போ முத்து ”
” சரி சார்”
” கைகால் கழுவிட்டு வா . சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ”
ஆரம்பத்தில் அவன் சட்டையில் ரத்தக்கறை இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன் காரணம் அவன் மீன் சந்தையில் மீன் வெட்டும் வேலை செய்பவன். ஞாயிறுதோறும் மீன் சந்தை போவேன். மற்ற மீன் வெட்டுபவர்களின் இடத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். முத்துவிடம் கூட்டம் இருக்காது, அவன் மெதுவாக வெட்டுவான். அது ஒரு காரணம் .
ஒரு கிலோ மீன் வெட்ட 30 ரூ , அரை கிலோ மீன் வெட்ட 20 ரூ .கட்டணம் .
இன்று காலை ஒன்றரை கிலோ மீன் வெட்ட 45 ரூ கொடுத்தேன், அவன் கணக்கு படி 50 ரூ என்றான். நீண்ட நேரம் வாக்குவாதம் நீடித்தது.
கடைசியில் அவனை பேராசைக்காரன் , நேர்மையில்லாதவன் என்று திட்டிவிட்டு வந்தேன் .
இப்போது தான் அது தவறு என்று புரிகிறது.
அவன் கைகழுவி விட்டுவந்தான்.
” கொஞ்சம் உக்காரு முத்து, இதோ வந்துர்றேன் ” சமையல் அறையில் மீன் துண்டுகளை வறுத்தேன்.
” ஒய்ஃப், குழந்தைங்க யாரும் இல்லையா சார் ”
” எல்லாம் சாப்பிட்டு ரூம் உள்ளே தூங்கறாங்க முத்து. நீ எவ்ளோ நாளா மீன் வெட்டற ”
” 3 மாசமா சார், காலேஜ் சேந்ததுல இருந்து சன்டே மட்டும் மீன் வெட்டறேன் சார் ”
” என்ன படிக்கற ”
” B sc , கெமிஸ்ட்ரி சார் ”
” வேற பார்ட் டைம் வேலைக்கு போயிருக்கலாமே. எப்படி இந்த மீன் சந்தை நாத்தத்துல அவ்வளோ நேரம் வேலை செய்ய முடியுது ”
” எனக்கு மீன் வாசம் ரொம்ப புடிக்கும் சார் , கஷ்டமா தெரியல சார் ”
இரண்டு வாழை இலை எடுத்து விரித்தேன்.
” உக்காருப்பா ”
உட்கார்ந்தான் , சாப்பாடு போட்டேன் .
”வாழை இலைல மீன்குழம்பு சாப்பிட்டா அந்த டேஸ்ட்டே தனி ” என்றேன் .
”ரொம்ப சாரி சார் , நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க . நான் மீன் சாப்பிடமாட்டேன். தயிர் இருந்தா குடுங்க. இல்லலேன்னா உப்பு தண்ணிக்கூட போதும் ”
” என்ன முத்து இப்படி சொல்ற, கொஞ்சம் முன்னாடி தான் மீன் வாசம் ரொம்ப புடிக்கும்னு சொன்ன , இப்போ என்னடானா மீன் சாப்பிடமாட்டேன்னு சொல்ற ?”
” எங்க அப்பா மீன் புடிக்கறவர் சார், நான் ஒரே பையன், எனக்கு தெரிஞ்சு எப்பவுமே எங்க வீட்ல மீன் வாசம் அடிக்கும் சார் . அப்பா மேல இன்னும் அதிகமா அடிக்கும்.
எனக்கு 10 வயசு இருக்கும் போது கடலுக்கு மீன் புடிக்க போனாரு. கூட 10 பேரு போனாங்க. அதுல வேற 2 பேரு தான் திரும்பிவந்தாங்க. சூறாவளில சிக்கி செத்துட்டாங்கனு சொன்னாங்க சார். அம்மா என்னை கூட்டிட்டு சென்னைக்கு வந்துட்டாங்க .
அம்மா தான் வேலைக்கு போயி படிக்க வச்சாங்க. அதுக்கு அப்பறம் அவங்க மீன் குழம்ப செஞ்சதும் இல்ல .சாப்பிட்டதும் இல்ல . அம்மாவே சாப்பிடறத உட்டுட்டாங்க, அதான் நானும் சாப்பிடறது இல்ல. என்னை காலெஜ்லாம் சேத்து உட்டாங்க. சன்டே மட்டும் மீன் வெட்டற வேலைக்கு போறேன் மா , அந்த வாசனை எனக்கு புடிச்சிருக்குமானு சொன்னேன் . சரி வேலைக்கு போடான்னு சொன்னாங்க .
ஆனா நான் மீன் சாப்பிடமாட்டேன் சார் , வாசனை மட்டும் புடிக்கும். அது எங்க அப்பாவோட வாசனை சார், என்னை மன்னிச்சுடுங்க சார் ”
கைக்குட்டையால் கண்களை துடைத்தபடி , கிடுகிடுவென எழுந்து வீட்டிற்கு வெளியே சென்றான் .
நான் தடுக்கவில்லை .
[முற்றும் ]

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal