எழுதியவர் – தமிழ்ச்செல்வன்

சென்னை கடற்கரையில் ஒரு ஞாயிற்று கிழமை மாலையில் மனோகரும் மைதிலியும் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் . இருவரும் 50வயதை நெருங்கிய தம்பதிகள்.
அவர்கள் சில நாட்கள் இப்படி மூட் அவுட் ஆவது உண்டு. காரணம் அன்று அன்னையர் தினம்.அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை. நம்பிக்கையுடன் காத்திருப்பவர்கள்.
டீவி , ரேடியோ , இணையம் எல்லா இடத்திலும் கேட்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் அவர்களின் மனதில் நெருடலை உண்டாக்கியது. மனதை திசைமாற்ற இங்கு வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
” தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் , அண்ணா சுண்டல் வாங்கிக்கண்ணா .சூடான சுவையான சுண்டல் வாங்கிக்கண்ணா ”
சுண்டல் விற்கும் சிறுவனுக்கு 12 வயது இருக்கக் கூடும், இந்த வயது சிறுவர்கள் மனோகரை ,அங்கிள் என்று அழைப்பது தான் வழக்கம் .அண்ணா என்று ஒரு சிறுவன் அழைப்பது அபூர்வம் .
சுண்டல் வாங்கினார் .
” ரெண்டு பொட்டலம் வாங்கிக்கண்ணா , ”
”நான் சாப்பிடமாட்டேன்பா ” என்றார் மைதிலி .
”சுண்டல் சூப்பரா இருக்கும் க்கா , சும்மா வாங்கித் துன்னு பாருக்கா ”
”சில்லறை இல்லியே , ரெண்டு ரூபா கம்மியா இருக்கே தம்பி ”
” பரவால்ல வுடுணா , அன்னையர் தினதுக்கோசரம் தள்ளுபடினு வச்சிக்கண்ணா. ”
சிறுவனின் சிரிப்பு அவர்களையும் தொற்றியது.
வீடு திரும்ப நினைத்து அவர்கள் அலை ஓரமாக நடக்கும்போது கவனித்தார்கள். சிறுவன் கடல் பக்கம் திரும்பி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தான். இவர்கள் பின்னால் நின்று கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
”அய்யே இன்னாத்துக்கு காண்டாவுற . அதான் இப்ப சொல்ட்டேன்ல ஹேப்பி மதர்ஸ் டே . ஒன்னியும் கவலைப்படாத. ஆல்பட்டுனு ஒரு தபா கூவு ,கடகடன்னு ஓடியாறேன். உனுக்கு புள்ள நா கீறேன் எனுக்கு அம்மா நீ கீற. வேற ஆரும் தாவியேஇல்ல தெர்தா ”
”தம்பி யார் கூட பேசிட்டு இருக்க ”
”எங்க அம்மா ண்ணா, ”
” இங்க யாருமே இல்லியே ”
”கடலம்மா ண்ணா ”
” உனக்கு அப்பா அம்மா யாரும் இல்லியா ”
” அம்மா அப்பா இல்லாத எப்டிண்ணா புள்ள பொறக்கும். ஆனா யாருனு தான் தெரில. நான் கொயந்தையா இருக்கச்சொல்லோ , தோ தெருது பார் சர்ச்சு , அந்த சர்சாண்ட ஒரு மரம் கீதா. அந்த மரத்தடில தான் நான் அயுதுனு கடந்தேனு ஆயா சொல்லுச்சு .
அதுதான் எனுக்கு ஆல்பட்டுனு பேரு வச்சி சோறாக்கி போட்டு இம்மா நாளா வளத்துச்சுண்ணா . ஆயா என்னாண்ட இன்னா சொல்லுச்சு தெர்மா ,ஆல்பட்டு , எப்பையுமே உனுக்கு கடலம்மா தான் அம்மா. உன்ன பெத்து மரத்தடில கடாசிட்டு போனவள கண்டி அம்மானு ஒன்வாயால சொல்லவேசொல்லாதன்னுச்சு . அன்னிலேருந்து கடல்லம்மா கைலதான் அல்லாத்தையும் சொல்வேன் ண்ணா. இப்ப அத்த வுட்ட வேற ஆரும் இல்லண்ணா ”
” உங்க ஆயாக்கு என்னாச்சு, ஆல்பட் ”
”க்ரிஸ்மஸ்க்கு முன்னாடி ஒரு நாள் ஆயா .. ( இடைவெளி விட்டான் ) .. செத்துடுச்சுண்ணா, அப்பால தெருல கீற பசங்க சொன்னாங்கொ , சுண்டல் விக்க வாடானாங்கொ, சரிதான்ன்னு வன்ட்டேன் ”
”ஆல்பட் , நீ எங்க கூட வீட்டுக்கு வந்துடு எங்க கூடவே இரு, படிக்க வைக்கிறோம். எங்களை அப்பா அம்மானு மட்டும் கூப்பிடு . மத்தத எல்லாம் நாங்க பாத்துக்கறோம் ”
”வோணாக்கா , இத்தினி நாளா கடலம்மா பாத்து அம்மா அம்மா னு கூப்ட்டுனு கடந்தேன் , இப்போ தபால்னு உன் பின்னாடியே போயிட்டா அது மனசுல இன்னா நெனிக்கும், சீ பே கயிதே ன்னிடாது, உனுக்கும் அவ புத்திதானே வரும்ன்னு காண்டாவாது ? எனுக்கு என்னிக்கினாலும் கடலம்மா ஒன்னு கீது , அது போதும் ”
”அம்மா ,அம்மானு சொல்லிட்டே இருக்கியே அந்த கடலம்மா உனக்கு என்னடா பண்ணுச்சு ”
”என் கூடவே கீது. சொல்லாம கொள்ளாம எங்கியும் ஓடிப்போகாது . இங்க வராத ஆல்பட்டுன்னு தெர்த்தாதது. நான் சந்தோசமா இன்னா சொன்னாலும் கேட்டுக்கும் .அயுதுக்குனே இன்னா சொன்னாலும் கேட்டுக்கும் .
தோ ,இதே மெரி பாசமா காலை தடவிக்கொடுக்கும். அம்மா அம்மா சொல்ட்டு இங்கியே கடக்கறேண்ணா, அது ஒன்னியும் பண்ணத்தாவில்ல. கூடவே இருந்தாலே பெருசுண்ணா ”
”ஆல்பட் ,நல்லா யோசிச்சு பாரு .உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு தான் சொல்றோம். எங்க வீடும் பக்கம்தான். நீ தினமும் வந்து கடலம்மா பாத்து பேசிட்டு இருக்கலாம்.
அப்படியே எங்களையும் அப்பா அம்மானு கூப்பிட்டு நம்ம வீட்லயே எங்க பையனா இருக்கலாம் , நீ வேணும்னா கடலம்மா கிட்ட சம்மதம் கேட்டு சொல்லு. உனக்கு நல்லது நடக்குதுனா உங்க அம்மா தடுக்க மாட்டாங்க ”
ஆல்பட் கடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தான், அவர்கள் அவனையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .
ஆல்பட் எழுந்து அவர்கள் பக்கம் வந்தான், மைதிலியை பார்த்தான் .
” ஹேப்பி மதர்ஸ்ட் டே , அம்மா ” என்றான் .
[முற்றும் ]
.